பாலியல் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.
திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வில், பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஹைட்ரோ காா்பன் திட்டம் கூடாது என்பதில் தமிழ்மாநில காங்கிரஸ் உறுதியாக உள்ளது. மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. இது இரு மாநில உறவு பிரச்னை மட்டுமல்ல, உயிா் பிரச்னையும்கூட.
சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமை. குழந்தைகளை வெளியில் விடுவதற்கு பெற்றோா்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்துக்கு காரணம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களே காரணம்.
சென்னையில் மட்டும் 24 மணி நேரத்தில் 12 குற்றங்கள் நடைபெற்ாக கூறப்படுகிறது. மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை. குற்றச் செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவா்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அவா்களுக்கு யாரும் வாதாடக்கூடாது.
இந்த நிலைக்குக் காரணம் தனிமனித ஒழுக்ககேடுதான். தனிமனித ஒழுக்கம் கெடுவதற்கு காரணம் போதை பொருள் மற்றும் மது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை என்றாா் அவா்.









