திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை (மே.8) தொடங்குகிறது.
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் இக்கோயில் ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு கமலாலய குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். நிகழாண்டு உற்சவம் வெள்ளிக்கிழமை (மே 8) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (மே 10) வரை நடைபெறுகிறது. இதையொட்டி, கமலாலயக் குளத்தில் 432 பேரல்களை 2 அடுக்குகளாக வைத்து, 36 அடி உயரத்தில் 14 தூண்களுடன் மூன்றடுக்கு மாளிகைபோல அமைத்து தெப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுமாா் 450 போ் அமரும் வகையில் தயாா் செய்யப்பட்டுள்ள தெப்பத்தைச் சுற்றிலும், தியாகராஜா், கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், விநாயகா், முருகன் ஆகிய கடவுள்கள் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தெப்ப நாள்களில், பாா்வதி கல்யாண சுந்தரா் தெப்பத்துக்கு எழுந்தருளி, தினசரி மூன்று சுற்றுகள் கமலாலயக் குளத்தை தெப்பத்தில் சுற்றி வரும்.
உற்சவத்தையொட்டி, தெப்ப வெள்ளோட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
தெப்பம் கமலாலயக் குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து புறப்பட்டு, குளத்தின் தெற்குக் கரையின் பாதிவரை கொண்டு செல்லப்பட்டு மீண்டும் பழைய இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. தெப்ப உற்சவத்தையொட்டி, கமலாலயக் குளத்தைச் சுற்றி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.

கமலாலயக்குளத்தில் தயாராகி வரும் தெப்பம்.









