மாநகர் தில்லியில் மகாகவி சிலை...!
பழம் பெருமையும், வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட பாரத தேசத்தின் விடுதலை வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் எத்தனை, எத்தனையோ பேர். அனல் தெறிக்கும் சுதந்திர வேட்கை கவிதைகளால் மக்களின் மனத்தில்


பழம் பெருமையும், வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட பாரத தேசத்தின் விடுதலை வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் எத்தனை, எத்தனையோ பேர்.
அனல் தெறிக்கும் சுதந்திர வேட்கை கவிதைகளால் மக்களின் மனத்தில் விடுதலை உணர்வை ஊட்டிய கவிஞர்களும் பலர். அவர்களில் தேசியக் கவியாகப் போற்றப்படுவர் மகாகவி பாரதியார். "முண்டாசுக் கவிஞன்' என்று நம் எல்லோராலும் அழைக்கப்படும் பெருமைக்குரிய மாமனிதர் அவர்.
தலைநகரான தில்லியில் 7 அடி உயரத்துடன் கூடிய அவரது திருவுருவச் சிலை ரமண மகரிஷி மார்கில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
பாரதியார் பிறந்த தினமான ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 11), அத்திருவுருவச் சிலைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோரும் தமிழ் ஆர்வலர்களும் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினர்.
இச் சிலை அமைக்கப்பட்டபோது ஏற்பட்ட சில நிகழ்வுகளைத் தன் மனப்பதிவில் இருந்து நினைவுகூர்கிறார் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி.
""மகாகவி பாரதியார் மிகுந்த தேசப் பற்றாளர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் மீது நேசம் கொண்டவராக இருந்தவர் தமிழக முதல்வராக இருந்த மறைந்த எம்.ஜி.ஆர்.
கடந்த 1987-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் இது. எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அப்போது, தலைநகரில் பாரதிக்குச் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. அவரது சிலை வைப்பதற்கான இடம் தேர்வு செய்வதில் சிக்கல் இருந்து வந்தது. சிலைக்கு இடம் கிடைக்க குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கடராமன் முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து, தெற்கு தில்லியில் உள்ள ரமண மகரிஷி மார்கில் இடம் ஒதுக்கப்பட்டது. சிலை தயாராகும் பணிகள் சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இதனிடையே, குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகத் தில்லி வந்திருந்தார் எம்.ஜி.ஆர். அவ்விழாவில் சொற்ப எண்ணிக்கையில் பொதுமக்கள் பங்கேற்றதைப் பார்த்தார் எம்ஜிஆர்.
தேசியகவி பாரதியார் சிலை திறப்பு விழாவிலும் இதுபோல் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்றுவிடக்கூடாது என்றும், தமிழர்கள் அவ்விழாவில் அதிகம் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்பியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, தில்லியின் தமிழ்நாடு இல்லத்தின் உறைவிட ஆணையராக இருந்த ராம்தாஸ் ஐ.ஏ.எஸ். என்னைத் தொடர்பு கொண்டு பாரதியார் சிலை திறப்பு விழாவுக்கு தமிழர்களை அதிகம் அழைத்து வர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
நானோ, "சிலைத் திறப்பு விழாவை அலுவலக வேலை நாள்களில் வைத்திருக்கிறீர்களே; வேலைக்குச் செல்வோர் அதிகம் வருவார்களா?'' ஐயம் தெரிவித்தேன். ""பாரதிக்காக வந்துதான் ஆக வேண்டும்; நிச்சயம் வருவார்கள்; உரிய ஏற்பாட்டைச் செய்யுங்களேன்'' என்று அன்போடு அவர் கேட்டுக்கொண்டார்.
எங்களது சங்கமும் 1950-ம் ஆண்டில் இருந்து பாரதியார் தொடர்பான இலக்கிய, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளை நடத்தி வருவதால், மகிழ்வுடன் அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டேன்.
அப்போது, நாங்கள் அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தோம். தமிழ்ச் சங்கக் கட்டடப் பணிக்குத் தமிழக அரசிடமிருந்து நிதி பெற்றுத் தர வேண்டும் என்பதே அது. ஏற்கெனவே நாங்கள் கோரிக்கை மனு அளித்திருந்ததால் அவரும் உரிய ஏற்பாடு செய்வதாகக் கூறிச் சென்றார்.
சில நாள்களில் சிலை திறப்பு விழா ஏற்பாடு குறித்து அறிவதற்காக எம்.ஜி.ஆர். தில்லி வந்திருந்தார்.
தமிழ்நாடு இல்லத்தில் இருந்த அவரைச் சந்திக்க அப்போது தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த புலவர் விஸ்வநாதன், செயலராக இருந்த பி.ஆர். வெங்கடகிரி, இணைச் செயலராக இருந்த நான், கமிட்டி உறுப்பினராக இருந்த ஜானகி ராஜாராமன் ஆகியோர் சென்றோம். அவரைக் காண தாமதமானதால் எங்களுடன் வந்திருந்த வெங்கடகிரி சென்றுவிட்டார்.
எம்.ஜி.ஆரின் தனிச் செயலராக இருந்த நமச்சிவாயம் எங்களிடம் வந்து, ""உங்கள் சங்கத்திற்கு ரூ. 5 லட்சத்திற்கான கட்டட நிதிக்கு அனுமதி கிடைத்துவிட்டது. எம்.ஜி.ஆர். சம்மதித்து விட்டார்'' என்று கூறிச் சென்றார். ஆனாலும், எங்களால் எம்.ஜி.ஆரைச் சந்திக்க முடியவில்லை.
பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரி ராம்தாஸிடம் இது பற்றிக் கூறினோம். மறுநாள் வருமாறு கேட்டுக்கொண்டார். மறுதினம் நானும், எனது மனைவி சியாமளா, புலவர் விஸ்வநாதன் ஆகியோர் மலர்க்கொத்து ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டோம். அதில், கட்டட நிதி அனுமதிக்காக "நன்றி' என்ற வாசகத்தை எழுதி எம்.ஜி.ஆரிடம் கொடுக்க தமிழ்நாடு இல்லம் சென்றோம்.
அங்கிருந்த தமிழக அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் எங்களைப் பார்த்தார். அவரிடம் விவரம் கூறினோம். ""நாங்களே இலங்கை அகதிகளுக்காக நிதி கேட்க மத்திய அரசிடம் வந்துள்ளோம். நீங்களோ எங்களிடம் நிதி கேட்கிறீர்களே?'' என்றார். எங்களுக்கு மிகவும் தர்மசங்கடம் ஆகிவிட்டது.
இதற்குள்ளாக தனது தனிச் செயலர் மூலம் எம்.ஜி.ஆர். எங்களைக் கூப்பிட்டு அனுப்பினார். அப்போது, அவரால் முழு அளவில் பேச முடியதாத நிலை. இதனால், கை சைகை மூலம் ரூ. 5 லட்சம் தருவதாகத் தெரிவித்தார். மிகவும் மகிழ்ந்து போனோம்.
சிலைத் திறப்பு நாளில் சங்கத் தலைவர் எஸ். ராமாமிர்தத்திடம் அந்தத் தொகையைத் தருமாறு தமிழக அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டோம். அவர்களும் சரி என்றும் சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிலை வைக்கப்படும் இடத்திற்கு பாரதியாரின் ஆளுயரச் சிலை கொண்டு வரப்பட்டு அதை நிறுவுவதற்கான இறுதிப் பணிகளில் ஸ்தபதி ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அங்கு எம்.ஜி.ஆர். வருவதாக அறிந்து நானும், எனது மனைவியும் சென்றிருந்தோம். அந்த இடத்திற்கு வந்த எம்.ஜி.ஆர்., சிலையைச் சரிசெய்து கொண்டிருந்த ஸ்தபதியை யாரும் எதிர்பாராத வகையில் ஆரத் தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். ""பாரதி சிலை நன்றாக வந்துள்ளது'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
அதன் பிறகு, பாரதியார் சிலை திறப்பு விழாவுக்கு சில நாள்களுக்கு முன்பே நான் அலுவலக விடுப்பு எடுத்துக் கொண்டு தமிழ் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதில் ஆர்வமாக ஈடுபட்டேன். தமிழ்ச் சங்க நண்பர்களும் இதற்கான வேலையில் ஈடுபட்டனர்.
2.2.1987-ல் நடைபெற்ற சிலைத் திறப்பு விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆர். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். சிலையை அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி திறந்துவைத்தார். குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கடராமன் விழாவுக்குத் தலைமை வகித்தார். அந்த விழாவிலேயே எங்கள் சங்கக் கட்டடத்திற்கான ரூ. 5 லட்சம் நிதியையும் எம்.ஜி.ஆர். அளித்தார்.
சிலை அமைந்த பகுதி தற்போது பாரதி நகர் என்ற பெயரையும் தாங்கியுள்ளது. பாரதியார் பெயரிலான "சுப்பிரமணிய பாரதி மார்க்' மேக்ஸ் முல்லர் மார்கில் தொடங்கி புராணா கிலா உயிரியல் பூங்கா அமைந்துள்ள பகுதி வரையும் செல்கிறது.
பாரதியார் பிறந்த நாளும் நினைவு நாளும் வரும்போதெல்லாம் இச்சம்பவமும் என் நினைவில் நிழலாடுகிறது'' என்று கூறும்போதே எஸ். கிருஷ்ணமூர்த்தியின் கண்களின் ஓரம் நீர் கோக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...