சவாலை எதிர்கொள்ளும் சைக்கிள் ரிக்ஷாவாலாக்கள்!
தமிழகத்தில் 1971-ம் ஆண்டு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ஒரு திரைப்படம், வெளியான அனைத்து திரையரங்குகளிலும் வசூல் மழையைப் பொழிய வைத்தது. முதல் முறையாக இந்திய அரசின் "பாரத்' தேசிய விருதையும


தமிழகத்தில் 1971-ம் ஆண்டு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ஒரு திரைப்படம், வெளியான அனைத்து திரையரங்குகளிலும் வசூல் மழையைப் பொழிய வைத்தது.
முதல் முறையாக இந்திய அரசின் "பாரத்' தேசிய விருதையும் எம்.ஜி.ஆருக்குப் பெற்றுத் தந்தது. அதன் பெயர் "ரிக்ஷாக்காரன்'. படித்த பட்டதாரி இளைஞர் ரிக்ஷா ஓட்டும் கதையை மையமாகக் கொண்டது அப்படம்.
சாமானிய உழைக்கும் மக்களை மையமாக கொண்டு திரைப்படம் எடுத்தாலும்கூட அது பெரிய வெற்றியைத் தேடித் தரும் என்பதற்கு அப்படம் ஓர் உதாரணம்.
குறைந்த தூர இடங்களுக்கு மக்களையும், சாமான்களையும் கொண்டு செல்வதுடன் சுற்றுச் சூழலுக்கு உகந்த போக்குவரத்துப் வாகனம் சைக்கிள் ரிக்ஷா.
முழுவதும் உடல் உழைப்பைப் பயன்படுத்தி இயக்கப்படும் இந்த சைக்கிள் ரிக்ஷாக்கள் இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், ஜெர்மனி, சீனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என பல நாடுகளிலும் வெவ்வேறு வடிவங்களில் பயன்பாட்டில் இருக்கின்றன.
உடனுக்குடன் வருமானம் ஈட்டும் தொழிலாகப் பார்க்கப்படுவதால் இன்றைக்கு இந்தியாவில் வறுமைக்குக் கோட்டுக்குக்கீழ் வாழும் சுமார் 1 கோடி பேர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். உலகின் ரிக்ஷாக்கள் தலைநகரமாக வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா வருணிக்கப்படுகிறது.
நமது நாட்டின் தலைநகரான தில்லியும் இதற்குக் குறைந்ததல்ல. 1940-ம் ஆண்டிலிருந்து இங்கு போக்குவரத்துப் பயன்பாட்டில் சைக்கிள் ரிக்ஷா இருந்து வருகிறது.
இன்றைக்கு உலகம் நாளுக்கு நாள் மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. புதிய, புதிய தேவைகளும் உருவாகி வருகின்றன. மனித சமூகம் புதிய சூழலில் வாழ்க்கையை நடத்தி வருகிறது. எல்லாம் மாறினாலும் ரிக்ஷா ஓட்டும் தொழில் மட்டும் அப்படியே தொடர்கிறது. இத் தொழிலாளர்களின் வாழ்க்கையும் இறுதிவரை உடல் உழைப்பிலேயே கரைந்து போய்விடுகிறது.
புது தில்லி முனிசிபல் கவுன்சில் பகுதி நீங்கலாக தில்லி மாநகராட்சிப் பகுதியில் ஆங்காங்கே சாலையோரங்களிலும், தெருக்களின் சந்திப்புகளிலும், மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகிலும் சைக்கிள் ரிக்ஷாவாலாக்களை பரவலாகக் காணலாம்.
வயிற்றுப் பிழைப்புக்கான வருமானத்தைத் தேடி அதிகாலை தொடங்கி சூரிய அஸ்தனமனத்துக்குப் பிறகும் சைக்கிள் பெடலை மிதிக்கின்றனர் இவர்கள்.
தில்லியில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்கள் இருப்பதாகவும், இவர்களின் வருவாயை நம்பி இவர்களது குடும்பத்தினர் சுமார் 40 லட்சம் பேர் வாழ்க்கை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
பிகார், உத்தரப் பிரதேசம் போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலரும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். விவாசய வேலைகள் இல்லாத காலங்களில் சைக்கிள் ஓட்டி வருவாய் ஈட்டுவதில் ஈடுபடுவோரும் உண்டு.
சிறிய நகரங்களிலும், சென்னை, தில்லி போன்ற பெருநகரங்களிலும் போக்குவரத்துச் சேவையில் சைக்கிள் ரிக்ஷா முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் பிகார், மத்தியப் பிரதேசம், தில்லி தேசியப் பிராந்தியம், சத்தீஸ்கர், ஒரிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் முக்கியப் போக்குவரத்துக்கான வாகனமாகவும் உள்ளன. இத்தொழிலில் ஈடுபடுவோரில் 70 சதவீதம் பேர் பிகாரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களாவர்.
30 சதவீதம் பேர் உத்தரப் பிரதேசத்தில் இருந்தும் 10 சதவீதம் பேர் மேற்கு வங்கம், ஒரிசா, ராஜஸ்தான் போன்ற பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
மெட்ரோ, மால் போன்றவற்றின் வரவால் இந்த சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தொழில் வளர்ச்சி கண்டுள்ளது. தில்லியில் கமலா மார்க்கெட், சாந்தினி சௌக், சாஹ்தரா, மெஹரௌலி உள்ளிட்ட பல இடங்களில் சைக்கிள் ரிக்ஷா ஸ்டாண்டுகளும் உள்ளன.
தில்லியில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் பலரும் இந்த வாகனத்தை வாடகை அடிப்படையில் வாங்கி இயக்கி வருகின்றனர். பராமரிப்புச் செலவு உள்பட வாடகையாக தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிடுவதால் அவர்களைப் பொறுத்தமட்டில் முதலீடு இல்லாத தொழிலாகவும் பார்க்கப்படுகிறது. அதேவேளை சில ஆயிரம் செலவழித்து சைக்கிள் ரிக்ஷாக்களை வாங்குவதற்குக்கூட அவர்களது பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை என்பதே நிதர்னம்.
""நான் பிகாரைச் சேர்ந்தவன். 20 ஆண்டுகளாக தில்லியில் ரிக்ஷா ஓட்டுகிறேன். திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் அனைவரும் பள்ளியில் படிக்கின்றனர். கிடைக்கும் குறைந்து வருவாயில்தான் வாழ்க்கை நடத்துகிறேன். எனது மனைவியும் அவ்வப்போது துணி தைக்கும் வேலைக்குச் செல்கிறாள். எனக்கு குடிப்பழக்கம், போதைப்பழக்கம் இல்லாததால் குடும்பத்தில் சிக்கல் ஏதும் இல்லை.
எனினும், சொந்தமாக ரிக்ஷா இல்லை. ரூ.8 ஆயிரம் செலவழித்து சைக்கிள் ரிக்ஷா வாங்க வசதியும் இல்லை. இதனால், தினமும் ரூ.50 வாடகை கொடுத்து ரிக்ஷா எடுத்து ஓட்டுகிறேன். ஆண்டுக்கு ஓரிரு தினங்கள் தவிர அனைத்து நாள்களிலும் ரிக்ஷா ஓட்டுகிறேன். ஓய்வு என் மனதுக்கு வேண்டுமானால் இருக்கலாம். கால்களுக்கும் கைகளுக்கும் ஓய்வு என்பதே இல்லை'' என்று சைக்கிள் ரிக்ஷா தொழிலாளி ஹமீது அகமது (55) கூறினார்.
""பணத்துக்குத் தட்டுப்பாடு ஏதும் இருந்தால் உடனடி வருவாய்க்கு நான் தேடிச் செல்வது சைக்கிள் ரிக்ஷாதான். எனது தலையில் படிப்பு ஏறவில்லை. அதனால், சைக்கிள் ரிக்ஷா தொழிலுக்கு வந்துவிட்டேன். நாளொன்றுக்கு ரூ.200 முதல் 300 வரை கிடைக்கும். வண்டி வாடகை போக செலவழிக்கிறேன். வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை'' என்று திரிலோக்புரியைச் சேர்ந்த ஆதிமூலம் என்ற ரோபோ (35) கூறினார்.
மயூர்விஹாரைச் சேர்ந்த சைக்கிள் ரிக்ஷா தொழிலாளி ராம்சந்தர் கூறுகையில் ""கடந்த 8 ஆண்டுகளாக சைக்கிள் ரிக்ஷா ஓட்டுகிறேன். தினமும் ரூ.250 வரை வருவாய் கிடைக்கும். சில்லா காவ்ன் பகுதியில் ரிக்ஷாவாலாக்கள் குடும்பம் குடும்பமாக வாழ்கிறோம்.
இந்த வருவாய் ஒன்றுபோல் இருப்பதில்லை. இதனால், குடும்பத்தை நடத்திச் செல்வது சிரமமாக உள்ளது. மேலும், வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்டுவதால் பெரிதாக சேமிக்க ஏதும் முடியவில்லை. சொந்தமாக சைக்கிள் ரிக்ஷா வாங்க அரசு கடன் உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
குழந்தைகளின் கல்விக்கான உதவியும் அவசியத் தேவையாக உள்ளது. ஆனால், உதவிக் கரம் நீட்டத்தான் ஆளில்லை. எங்களுக்கான நலச்சங்கமும் ஏதும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இதனால் எங்கள் பிரச்னை அரசின் காதுக்கு எப்போது எட்டுமோ தெரியவில்லை'' என்றார்.
சைக்கிள் ரிக்ஷாக்களை வாடகைக்கு விடுவது லாபகரமான தொழிலாக இருப்பதால் 50 அல்லது 100 சைக்கிள் ரிக்ஷாக்களை வைத்து இத்தொழிலில் ஈடுபடுவதில் பலர் ஆர்வம் காட்டியும் வருகின்றனர். இதனால், இது நல்ல வருவாய் அளிக்கும் தொழிலாகவும் உள்ளது.
இதெல்லாம் இருந்தாலும் அன்றாடம் சைக்கிள் ரிக்ஷாவின் பெடல் மிதிக்கும் தொழிலாளியின் வாழ்க்கை மட்டும் துன்பத்தில்தானே சுழன்று கொண்டு இருக்கிறது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...