நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போலந்து கலைஞரின் கலைமிகு ஓவியக் கண்காட்சி

 மனதின் மெல்லிய உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சக்தி ஓவியங்களுக்கு உண்டு என்றால் அது மிகையில்லை.  கருத்தியல், பண்பியல், அழகியல், குறியீட்டுத் தன்மை, உணர்வுகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஊடகமாக ஓவியங்கள் வ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:21 pm

வே.சுந்தரேஸ்வரன்

 மனதின் மெல்லிய உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சக்தி ஓவியங்களுக்கு உண்டு என்றால் அது மிகையில்லை.

 கருத்தியல், பண்பியல், அழகியல், குறியீட்டுத் தன்மை, உணர்வுகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஊடகமாக ஓவியங்கள் விளங்குகின்றன.

 சிறந்த அறிவாற்றல் பெற்ற ஓவியர், பல நுணுக்கமான விஷயங்களைக்கூட ஒரு சிறிய ஓவியத்தில் அழகாக வெளிப்படுத்திவிட முடியும்!

 இந்தியாவின் தலைசிறந்த ஓவியர்களாக போற்றப்படும் ரவி வர்மா, எம்.எஃப். ஹூசைன் போன்றோரின் ஓவியங்கள் உலகெங்கும் பிரபலமானதற்கு அதன் நிறப்பூச்சுகள் மட்டுமே காரணமல்ல. அது வெளிப்படுத்தும் நுணுக்கமான கருத்துதான்.

 வெளிநாடுகளிலும் புகழ்ப்பெற்ற ஓவியக் கலைஞர்களும், உள் அரங்க வேலைப்பாட்டுக் கலைஞர்களும், வடிவமைப்பாளர்களும் பலர் உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீஃபன் நார்ப்லின் (1892-1952).

 இவர் ஆயில் பெயிண்டிங், கேன்வாஸ் பெயிண்டிங், சுவரோவியங்கள், உருவப்படங்கள், எடுத்துக்காட்டை விளக்கும் ஓவியங்கள் என பல கலைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

 போலந்து மட்டுமின்றி, இந்தியாவிலும் தனது ஓவியத் திறமையை வெளிப்படுத்தியவர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ருமேனியா, துருக்கி, இராக் வழியாக இந்தியா வந்த நார்பிலின், 1941 முதல் 1946-ம் ஆண்டு வரை இந்தியாவில் தங்கியிருந்து சுவரோவியங்கள், உருவப்படங்கள், உள் அலங்கார வேலைப்பாடுகளைச் செய்ததன் மூலம் தனது ஓவியக் கலைத் திறமையைப் பதித்துச் சென்றவர்.

 ""சுவரோவியங்களும், பெரிய அளவிலான ஓவியங்களும் என்னுடைய கனவுகள்'' என்கிற ஓவியர் நார்பிலின் கனவு, இந்தியா வந்தபோது நிறைவேறியது என்றுதான் சொல்ல வேண்டும். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் உள் அலங்கார வேலைப்பாட்டை இவர் மேற்கொண்டார்.

 அதேபோன்று, மோர்வியில் உள்ள மகாராஜா சர் லக்திர்ஜி வாக்ஜி அரண்மனையிலும் உள் அலங்கார ஓவியங்களைத் தீட்டினார். இவை அனைத்தும் இன்றைக்கும் நார்பிலின் ஓவியத் திறமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.ஓவியக் கலைக்கு அவர் ஆற்றிய பணிகளைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய கலாசார அமைச்சகமும், போலந்து தேசிய குடியரசின் பாரம்பரியம், கலாசாரத் துறை அமைச்சகமும் இணைந்து தலைநகரான தில்லியில் "ஸ்டீஃபன் நார்ப்லின்: பல கலைகளின் நிபுணர்' என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சியைத் நடத்தி வருகிறது.

 "நேஷனல் காலரி ஆப் மாடர்ன் ஆர்ட்' வளாகத்தில் உள்ள அரங்கில் இக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், ஸ்டீபன் நார்ப்லின் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இசைக் கருவிகள் வாசிப்பில் ஈடுபடும் இசைக் கலைஞர்கள் பற்றிய நவீன ஓவியம், வெளிநாட்டுப் பிரபலங்களின் ஓவியங்கள், புலிகள் மீது சவாரி செய்யும் நீக்ரோ, குதிரை மீது அமர்ந்தவாறு வேட்டையாடும் மனிதர்கள், மாடுகள் பூட்டிய வண்டி ஓட்டும் விவசாயி, பழங்களைக் கூடையில் சுமந்து செல்லும் அரை ஆடை அணிந்த மகளிர் என பல்வேறு தலைப்புகளில் வைக்கப்பட்ட ஓவியங்கள் பார்வையாளர்களை ரசிக்க வைப்பதுடன், யோசிக்கத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளன.இந்தியாவில் மும்பை, ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள அரண்மனைகளில் ஸ்டீபன் நார்பினால் மேற்கொள்ளப்பட்ட உள் அலங்காரம், சுவர் ஓவியங்கள், உருவப்படங்கள் ஆகியவை காணொலிக் காட்சியாக பார்வையாளர்களுக்கு "மெகா' திரையில் காட்டப்படுகின்றன.

 ""நார்பிலின் வரைந்த ஓவியக் கண்காட்சி இந்தியாவில் மும்பையில் உள்ள "நேஷனல் காலரி ஆப் மாடர்ன் ஆர்ட்' வளாகத்தில் உள்ள சர் கோவாஸ்ஜி ஜஹாங்கீர் ஹாலில் முதல் முறையாக நடைபெற்றது.

 தற்போது தில்லியில் உள்ள "நேஷனல் காலரி ஆப் மாடர்ன் ஆர்ட்' வளாகத்தில் நடைபெறுகிறது'' என்று அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த ஓவியக் கண்காட்சி நவ.23-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. திங்கள்கிழமை வார விடுமுறை. கண்காட்சியைக் காண பெரியவர்களுக்குத் தலா ரூ.10-ம், மாணவர்களுக்கு தலா ரூ.1-ம் வெளிநாட்டினருக்குத் தலா ரூ.150-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 ஓவியக் கலைக்கு தனது வாழ்வை அர்ப்பணித்த ஸ்டீஃபன் நார்பிலின் மறைந்து அரை நூற்றாண்டு ஆனாலும், அவர் வரைந்த ஓவியங்கள் மூலம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் நிதர்சனம்!

 படங்கள்: கே.டி.ராமகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.