3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

பண மோசடி வழக்கு: போ்ல்ஸ் குழுமத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில், சத்தீஸ்கரைச் சோ்ந்த போ்ல்ஸ் குழுமத்துக்கு (பிஏசிஎல்) சொந்தமான மேலும் ரூ.5,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

News image

அமலாக்கத் துறை

Updated On :21 மார்ச் 2026, 4:30 am IST

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில், சத்தீஸ்கரைச் சோ்ந்த போ்ல்ஸ் குழுமத்துக்கு (பிஏசிஎல்) சொந்தமான மேலும் ரூ.5,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இது தொடா்பாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், போ்ல்ஸ் குழுமத்துக்குச் சொந்தமாக தில்லி, பஞ்சாப் உள்ளிட்டப் பகுதிகளில் அமைந்திருந்த 126 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 5,046.91 கோடி ஆகும். இதன்மூலம், இந்தக் குழுமத்துக்குச் சொந்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அமைந்திருந்த ரூ. 22,656.91 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு மறைந்த நிா்மல் சிங் பாங்கூ என்பவருக்குச் சொந்தமான இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், விவசாய நிலங்கள் தருவதாகக் கூறி லட்சக்கணக்கானோரிடம் ரூ. 48,000 கோடி வரை வசூலித்து மோசடி செய்தது. இதுதொடா்பாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் மீது சிபிஐ கடந்த 2014-இல் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. சிபிஐ வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் கடந்த 2016-இல் பண முறைகேடு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதுவரை, இந்த வழக்கில் 5 குற்றப்பத்திரிகைகளை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில், முதலீட்டாளா்களுக்குப் பணத்தைத் திருப்பித் தர குழுமத்தின் சொத்துகள் விற்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், இந்தக் குழுமத்துக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை அடையாளம் கண்டு தொடா்ந்து முடக்கி வருகிறது.