ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குஞ்சுகளுடன் குதூகப்பில் வண்ண நாரைகள்!

புது தில்லி புரானா கிலா பகுதியில் அமைந்துள்ள தேசிய உயிரியல் பூங்காவில் இளம் குஞ்சுகளுக்கு நீர் புகட்டி, உணவளித்து இன்புறும் வண்ண நாரைகள் தாய்ப் பாசத்திற்கு எடுத்துகாட்டாகத் திகழ்கின்றன.  தன்னலமற்ற அன்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:22 pm

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி புரானா கிலா பகுதியில் அமைந்துள்ள தேசிய உயிரியல் பூங்காவில் இளம் குஞ்சுகளுக்கு நீர் புகட்டி, உணவளித்து இன்புறும் வண்ண நாரைகள் தாய்ப் பாசத்திற்கு எடுத்துகாட்டாகத் திகழ்கின்றன.

 தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு தாய்ப்பாசம். உலகில் இதற்கு ஈடு இணை ஏதுமில்லை. நவீன காலச் சூழலில் பொருளாதாரத் தேடலுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் மனிதர்களிடையே பாச,

 பந்த உறவுப் பிணைப்பில் தளர்வு ஏற்பட்டு வருகிறது.

 ஆனால் காலங்கள் கடந்தாலும், இயற்கையின் போக்கு மாறினாலும் விலங்குகள், பறவைகள் போன்ற ஜீவராசிகளிடத்தின் இடையே உள்ள பாசம் இன்னும் குறைந்து போய்விடவில்லை. அவை மேலும், மேலும் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன.

 தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள நீர்க்குட்டைகளில் இப்பருவகாலத்தில் வாசம் செய்ய வந்திருக்கும் வண்ண நாரைகள் எனும் "பெயிண்டட் ஸ்டார்க்' பறவைகள் இதை எடுத்துக்காட்டுகின்றன.

 பாசத்தின் பரிமாணங்கள் எவை என்பதெல்லாம் இந்தப் பறவைகளைக் காணும்போது தெரிகின்றன. இரை தேடி அலைவதும், மீனைத் தன்னுடைய அலகால் கவ்வி வந்து கூட்டில் இருக்கும் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடுவதும் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சி.

 மரங்களில் இருந்து வேகமாகச் சென்று குட்டையில் கிடக்கும் நீரை வாயில் உறிஞ்சி அந்த நீர்த் துளிகள் சிதறிவிடாதவாறு வானில் வேகமாகப் பறந்து சென்று குஞ்சுகளின் வாயில் புகட்டி தாகத்தைத் தீர்க்கின்றன இந்த நாரைகள்.

 குட்டையில் தேங்கியுள்ள நீரில் இறக்கையால் அடித்து குளியலிடும் வெள்ளை நிற ஃபெலிகன் பறவைகளும், தண்ணீருக்குள் தலையைப் புதைத்துக் கொண்டே வேகமாகச் சென்று மீனைப் பிடித்து உண்ணும் கறுப்பு நிற பறவைகளும் காண்போருக்கு மனத்தில் அமைதியும், குதூலகத்தையும் ஏற்படுத்துகின்றன.

 வானில் வட்டமடித்தவாறே தனது குஞ்சுகளைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பெற்றோர் வண்ண நாரைகள், திடீரென கீழே பறந்து கூட்டுக்கு வந்து குஞ்சுகளின் அலகைத் தன்னுடைய அலகால் தொட்டுவிட்டு விறுட்டென வானில் பறந்து சென்று விளையாடுவதைக் காண்பதற்கு இரு கண்கள் போதாது.

 இப்பறவைகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் தில்லிப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறையின் மாணவர் பாரத் பூஷண் கூறியது:

 பறவைகள் பற்றிய 4 ஆண்டு ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறேன்.

 பூமியில் சுமார் 10 ஆயிரம் வகையான பறவைகள் உள்ளன. இதில் 18 வகையான "ஸ்டார்க்' குடும்பப் பறவைகள் உள்ளன. இதில் 7 வகையான வண்ண நாரைகள் இந்தியாவில் உள்ளன.

 மரக்கழுத்து நாரை, வெள்ளை நாரை, கருங்கழுத்து நாரை என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இவை காட்டுப் பறவைகளாகும். வண்ண நாரையின் அறிவியல் பெயர் "மிக்டீரியா லூக்கோஸ்பெலா' ஆகும்.

 இப்பூங்காவுக்கு இந்தியாவின் தெற்கு, வடக்குப் பகுதிகளில் இருந்து ஏராளமான வண்ண நாரைகள் கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் மழைக்காலத்திற்குப் பிறகு வந்து கூடு அமைத்து, முட்டையிட்டு குஞ்சுப் பொரித்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

 இதற்கான சூழல் இந்தப் பூங்காவில் இருப்பது இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஆனால், பருவ மழை தவறிவிட்டால் இந்தப் பறவைகள் வருவதற்கு வாய்ப்பில்லை.

 ராஜஸ்தான் பரத்பூர் உயிரியல் பூங்காவுக்கு வரும் இதுபோன்ற பறவைகள் 1970-ம் ஆண்டின்போது பருவமழை பெய்யாததால் இனப்பெருக்கம் செய்யாமலேயே இருந்ததாக ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

 ""இப்பறவைகள் 95 சதவீதம் மீன்களை மட்டுமே உணவாக உட்கொள்ளும் தன்மை உடையவை. டாக்டர் ஏ.ஜெ. உர்ஃபி வழிகாட்டுதலின் பேரில் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறேன்'' என்றார் அவர்.

 ""வண்ண நாரைகளின் குஞ்சுகள் தற்போது சிறிய அளவில் உள்ளன. அவை இன்னும் பறக்கும் வளர்ச்சியை எட்டவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும். இப்பறவைகளுக்கு உணவு அளிக்கும் வகையில் தினமும் 50 கிலோ சிறிய மீன்கள் உணவாக அளிக்கப்படுகின்றன. இதனால், பறவைகள் நீண்ட தூரம் சென்று உணவைத் தேடுவது குறைந்துள்ளது. வண்ண நாரை தவிர, ஃபெலிகன், ஐபிஸ், காட்டு வாத்து, டார்ட்டர் போன்ற பறவைகளும் பூங்காவில் உள்ளன. குளிர் அதிகரிக்கும்போது பறவைகள் வரத்து இன்னும் அதிகம் இருக்கும். இமாசலப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமான பறவைகள் வரும்'' என்று உயிரியல் பூங்காவின் மூத்த வனவிலங்கு மருத்துவர் என்.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.