5-ல் வளையாதது 50-ல் வளையுமா..? வளையும்..!
கல்வி கற்பதும், கலை பயில்வதும் சிறு வயதில் இருந்தே தொடங்க வேண்டும். "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?'' என்று அதை வலியுறுத்திக் கூறுவோர் ஒரு ரகம். ஆனால், ""எந்தக் கலையாக இருந்தால் என்ன, ஆர்வம் இருந்


கல்வி கற்பதும், கலை பயில்வதும் சிறு வயதில் இருந்தே தொடங்க வேண்டும். "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?'' என்று அதை வலியுறுத்திக் கூறுவோர் ஒரு ரகம்.
ஆனால், ""எந்தக் கலையாக இருந்தால் என்ன, ஆர்வம் இருந்தால் அதில் உயர் நிலையை அடைய முடியும். எந்த வயதிலும், மனமிருந்தால் மார்க்கமுண்டு'' என்று நம்பிக்கை கொள்வோர் மற்றொரு ரகம்.
அந்த நம்பிக்கைக்கு வெளிச்சம் பாய்ச்சுவது போல், 50 வயதுக்குப் பிறகு, பரத நாட்டியக் கலையை கற்று அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார் பஞ்சாபி பெண்மணியான இண்டி பிரார் (55).
தில்லி சத்தர்பூர் பகுதியில் வசித்து வரும் இவரது நாட்டிய அரங்கேற்றம் அண்மையில் தில்லி சின்மயா மிஷன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
பிரமிப்பில் ஆழ்ந்த
பார்வையாளர்கள்
சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அலுப்புறாமல், களைப்படையாமல் நாட்டியக் கலையின் பல்வேறு பரிமாணங்களை அவர் வெளிப்படுத்தியது பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
கணபதி கௌத்துவம் பிரார்த்தனையுடன் தொடங்கி அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், தேவி நடனம் என பரத நாட்டியக் கலையின் பல்வேறு முறைகளை அற்புதமாக வெளிப்படுத்தினார் இண்டி பிரார்.
தொடர்ந்து நாட்டியம் ஆடும்போது இள வயது கலைஞர்களே சற்று களைத்துவிடும் நிலையில், 55 வயதிலும் உற்சாகத்துடன் ஆடினார் இவர்.
ஆர்வமும், ஈடுபாடும் இருந்தால்
வயது ஒரு தடையல்ல
50 வயதுக்கு மேல் வாழ்க்கையின் மீது அலுப்பும், சலிப்பும் ஏற்படுவதாக உணர்வோர் மத்தியில் 55 வயதிலும் ஆடல் கலையில் ஈடுபாடு காட்ட முடிந்தது எப்படி?
இதோ அவரே கூறுகிறார்:
""எந்தக் கலையையும் கற்பதற்கு அடிப்படைத் தேவை, ஆர்வமும், ஈடுபாடும்தான். சிறுவயதில் இருந்தே நாட்டியம் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். நாட்டியத்தைப் பார்க்கும்போது, அந்தக் கலைஞர் எந்த இறை வேஷத்தை தாங்கி இருக்கிறாரோ அந்த தெய்வமாகவே அவரை பாவித்து மெய்மறந்துவிடுவேன்.
நாட்டியக் கலை மீதான ஆர்வத்தை எனது அம்மாவிடம் அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால், நாட்டியம் கற்பதற்கான வாய்ப்பு அப்போது கிடைக்கவில்லை.
நாட்டியக் கலைஞர் குரு கிருஷ்ணமூர்த்தி, பரதம் கற்றுத் தருவதை எனது தோழி ஒருவர் மூலம் அறிந்தேன்.
அவரைச் சந்தித்து பரதம் கற்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்தேன்.
எனது வயதைக் கருத்தில் கொண்ட அவர், இக்கலைக்குத் தேவையான சிரத்தை, பயிற்சி குறித்து எடுத்துக்கூறி என்னால் ஈடுபாடு காட்ட முடியுமா என்று கேட்டார். எனக்கு பரதம் மீது இருந்த தீராத ஆர்வத்தை அவரிடம் கூறினேன்.
அதையடுத்து, நான் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கங்களுடன், தத்துவார்த்த விஷயங்களுடன் இக்கலையைப் பயிற்றுவித்தார். எனது கணவர் திவேந்தர் பிரார் மற்றும் மகன்களும், நண்பர்களும் எனக்கு ஊக்கம் அளித்தனர்.
50 வயதில் தொடங்கி, 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து நாட்டியக் கலைப் பயிற்சி செய்து, தற்போது அரங்கேற்றம் செய்துள்ளேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
"பஞ்சாபி பெண்களையும்
பரதம் கற்கச் செய்வேன்'
பரத நாட்டியக் கலை வெறும் நடனக் கலை அல்ல. அது ஒரு தெய்வீகக் கலை. இறைவனை உணர்ந்துகொள்ளச் செய்யும் ஓர் உயர் கலை.
பஞ்சாபி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பலரையும் பரத நாட்டியம் கற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.
எனது குருநாதர் கிருஷ்ணமூர்த்தி ஆலோசனையின் பேரில், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறேன்'' என்கிறார் இண்டி பிரார்.
இவரது நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு நட்டுவாங்கம், இசை அமைப்பு, பாடல் ஆகியவற்றை குரு கிருஷ்ணமூர்த்தி மேற்கொண்டார்.
"சித் சபேஷ நிர்த்யாலயா' நாட்டியப் பள்ளியை நடத்தி வரும் அவரிடம் பேசினோம்.
""சர்தார்ஜி வகுப்பைச் சேர்ந்த இண்டி பிரார் தென்னிந்தியக் கலையான பரதத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 5 ஆண்டுகள் அவர் கடுமையாக முயற்சி செய்தார்.
அரங்கேற்றத்திற்காக 3 மாதங்கள் சிறப்புப் பயிற்சியில் ஈடுபட்டார்.
ஆர்வக் கோளாறால் பயிற்சியில் சேரும் பலர், பாதியுடன் வகுப்புக்கு வராமல் விட்டுவிடுவதுண்டு. ஆனால், இண்டி பிரார் அப்படியல்ல. மிகுந்த ஆர்வம் காட்டினார்.
அவர் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு செல்பவராக இருந்தாலும், தில்லியில் இருக்கும்போது பயிற்சிக்குத் தவறாமல் வந்துவிடுவார். அவரது கணவரும் அவருக்கு மிகுந்த ஊக்கம் அளித்தார்.
பரதக் கலையை பொழுதுபோக்காகக் கற்காமல் ஒரு ஞானத்தைப் பெறும், தெய்வீகத்தை உணரும் கலையாகக் கற்க
வேண்டும்'' என்றார் கிருஷ்ணமூர்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...