நூலில் ஆடும் வாழ்க்கை!
பொம்மலாட்டம் என்னும் பாவைக்கூத்து பாரம்பரியமான கலைகளில் ஒன்று. பொம்மைகளைக் கைகள் மூலமாகவும், கயிறு - கம்பிகளில் பிணைத்தும் அசைத்து மூலமாகவும் சமூகக் கதைகளையும், ஆன்மிகக் கதைகளையும் கூறும் கலைதான் இது.


பொம்மலாட்டம் என்னும் பாவைக்கூத்து பாரம்பரியமான கலைகளில் ஒன்று. பொம்மைகளைக் கைகள் மூலமாகவும், கயிறு - கம்பிகளில் பிணைத்தும் அசைத்து மூலமாகவும் சமூகக் கதைகளையும், ஆன்மிகக் கதைகளையும் கூறும் கலைதான் இது.
உலகின் பல நாடுகளிலும் பல பெயர்களில், வடிவங்களில் பொம்மலாட்டக் கலை உள்ளது. வெளிநாடுகளில் இக்கலை வடிவம் நவீனத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் உயிர் வாழ்கிறது.
திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் மூழ்கியுள்ள ஒரு தலைமுறையால் இந்தக் கலை மறக்கப்பட்டு இது போன்ற பாரம்பரியக் கலைகள் மண்ணிலிருந்து மறையும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இக்கலை திருவிழா, பண்டிகைப் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சி என்ற அளவிலேயே பார்க்கப்படுகிறது. இதனால், பல தலைமுறைகளாக இக்கலையில் ஈடுபட்டு வந்தவர்கள்கூட தங்களது பிள்ளைகளை மாற்றுத் தொழிலுக்குக் கைப் பிடித்து அழைத்துச் செல்ல விரும்புகின்றனர்.
இந்நிலையில், இக்கலையை ஊக்குவிக்கும் வகையில் தில்லியில் உள்ள இந்தியா ஹாபிடாட் சென்டரில் இஷாரா சர்வதேச பொம்மலாட்டத் திருவிழா பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கியது. வரும் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவையொட்டி விதவிதமான பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தவிர, பயிலரங்குகள், திரைப்படங்கள், கண்காட்சிகளும் நடத்தப்பட உள்ளன.
பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் செல்வதற்காக நுழைவுச் சீட்டு வழங்கும் இடத்திலேயே பார்வையாளர்களை வரவேற்கும் வகையில் கைப்பாவையுடன் கிருஷ்ண லீலா நிகழ்ச்சியை 3 பேர் நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.
மூன்றடி நீளம், இரண்டடி அகலம் கொண்ட சிறிய மேடையில் குத்துக் காலிட்டு அமர்ந்திருந்த ஒருவரின் கைகளில் ஸ்ரீ கிருஷ்ணர்- ராதை பொம்மைகள், மற்றொருவர் கரங்களில் கோபியர் பொம்மைகள். இவைதான் பொம்மலாட்டத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள். இன்னொருவர் மேளத்தை உருட்டியவாறு இசை முழங்குகிறார்.
சுகமான தாளக்கட்டுடன் கம்பீரக் குரலில் பாட்டு ஒலிக்க, அதற்கு ஏற்றவாறு பொம்மைகள் நடனமாடும்போது... அப்பப்பா! அதைப் பார்க்கும் கண்கள் மட்டுமல்ல; நமது மனமும் ஆடுகிறது!
நிகழ்ச்சி நடத்தும் அவர்கள் மூவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கேந்த்ரபாரா மாவட்டம், மந்திரிபடா கிராமத்தைச் சேர்ந்த கேதார் சிங், சரத் சிங், பரமேஸ்வர்.
கலையில் அவர்கள் காட்டும் அதீத ஈடுபாட்டுக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா? அவர்களிடமே கேட்டோம்.
""பல குடும்பங்கள் தலைமுறைகளாக இந்தக் கலையில் ஈடுபட்டு வருகிறோம். அறுவடைக்கு முன்பு விவசாய வேலைகளில் ஈடுபடுவோம். அறுவடை முடிந்துவிட்டால் அடுத்து வரும் பண்டிகை, விசேஷ நாள்களில் பொம்மலாட்டம் நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்துவிடுவோம்.
ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களிலிருந்து, ஸ்ரீகிருஷ்ண - ராதா லீலா, ராவண லீலா முதலான கதைகள், கிராமப்புறக் கதைகள் ஆகியவற்றை மையமாக வைத்து நிகழ்ச்சி நடத்துவோம்.
கார்த்திகை மாதத்தின்போது நிகழ்ச்சிகள் நடத்த நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். தஸரா (தென்னாட்டில் நவராத்திரி), ஹோலி பண்டிகைகளின்போதும் ஏராளமான பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவோம். ஆனால் நிகழ்ச்சிக்குச் சொற்பத் தொகை தருகின்றனர்.
எங்கள் கலைக்குப் போதுமான ஊக்குவிப்பு இல்லாததால் எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து வேறு தொழில்களுக்கு அனுப்பி வருகிறோம். எங்கள் மாவட்டத்தில் இக்கலையில் ஈடுபடுவோர் முன்பு நூற்றுக்கணக்கில் இருந்தவர்கள். தற்போது 7 பேராகக் குறைந்துவிட்டோம். எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நிதி உதவி, குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு உதவி அளிக்க அரசு முன்வர வேண்டும். இந்த பொம்மலாட்டத் திருவிழாவில் 10 நாள்கலுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த வாய்ப்புக் கிடைத்துள்ளது'' என்றனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராதாகாந்த் திரிபாதி கூறுகையில், ""ஒடிசா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான பொம்மலாட்டக் கலைஞர்கள் இருந்தனர். போதிய ஊக்குவிப்பு இல்லாததால் இதன் மீதான ஈடுபாடு குறைந்து இந்தக் கலையே அவர்களிடமிருந்து மங்கிப் போய்விட்டது.
அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தபாடில்லை. கேந்த்ரபாரா மாவட்டத்தில் உள்ள சில பொம்மலாட்டக் கலைஞர்களின் குடும்பங்களுக்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்கான குடும்ப அட்டை கூட கிடைக்கவில்லை என்பது தெரிய வருகிறது. இந்த விஷயத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் எடுத்துச் செல்ல உள்ளேன்'' என்றார்.
நூலில் ஆடும் பொம்மை போலவே இந்தக் கலைஞர்களின் வாழ்க்கை நிலையும் உள்ளதோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...