நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாத்தியமான ஆயுதம்!

நீண்டு செல்லும் வில், அதன் இரு முனைகளிலும் தளர்வாகக் இணைக்கப்பட்ட நூல் நரம்பு. அதில் அழகாகக் கோக்கப்பட்ட மணிகள். அந்த வில் தரையில் கிடத்தப்பட்டிருக்கிறது. அதன் நடுப்பகுதி பக்கவாட்டில் பெண்கள் இருவர் அ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:09 pm

வே.சுந்தரேஸ்வரன்

நீண்டு செல்லும் வில், அதன் இரு முனைகளிலும் தளர்வாகக் இணைக்கப்பட்ட நூல் நரம்பு. அதில் அழகாகக் கோக்கப்பட்ட மணிகள். அந்த வில் தரையில் கிடத்தப்பட்டிருக்கிறது. அதன் நடுப்பகுதி பக்கவாட்டில் பெண்கள் இருவர் அடுத்தடுத்து அமர்ந்திருக்கின்றனர்.

 வில்லின் கடைக்கோடியில் ஒரு குடத்துடன் ஒருவர். இவர்களுக்குப் பின்னணியில் சில கலைஞர்கள்...

 கையில் ஏந்தும் வில்லைத் தரையில் கிடத்தி என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள் என்று யோசித்தபடி புருவத்தைச் சுருக்கினால் சட்டென காதில் பாய்கிறது கம்பீரக் குரல்.

 "தந்தனத்தோம் என்று சொல்லியே, வில்லினில் பாட...' என ஒருவர் தொடங்க, மற்றவர்கள் "ஆமாம்..!' என்று ஆரம்பிக்கும்போதே உற்சாகம் அரங்கில் பொங்குகிறது.

 இறைவணக்கம், விருத்தம், வருபொருள் உரைத்தல் என பல்வேறு பரிமாணங்களில் புராணக் கதையை அழகான பாடல் வரிகள் மூலம் எடுத்துச் சொல்லுகிறார் பெண்மணிகளில் ஒருவர்.

 விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த ஐ. பாண்டியராணி கலைக் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிதான் அது. சரித்திரக் கதைகளையும், புராணக் கதைகளையும் வில்லின் துணைகொண்டு பக்கவாத்தியக் கலைஞர்களின் உதவியுடன் பாட்டு வடிவில் எடுத்துக் கூறுகிறார் கிராமியக் கலைஞர் பாண்டியராணி.

 தில்லி சக்கூர்பூர், தில்லித் தமிழ்ச் சங்க வளாகம், துவாரகா உள்ளிட்ட இடங்களில் வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியை பாண்டியராணியின் கலைக் குழுவினர் நடத்தினர்.

 இந்நிகழ்ச்சியைப் பார்த்த தமிழக மக்களும், மொழியே தெரியாத வடநாட்டினரும் விநோத இசை முழக்கம், பாடல் வரிகளால் அதிசயித்துப் போயினர்!

 பாடல் வரிகளைத் தெளிவாகப் பாடியும், ஆங்காங்கே கதை மாந்தர்களைச் சிலாகித்தும் தேவைக்கேற்ற உணர்ச்சியுடன் பாடல்களாவும், பேச்சாகவும் எடுத்துரைத்த விதம் அக்கதையைக் கேட்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தவிர, குடம், உடுக்கை, தாளம், தபேலா, ஹார்மோனியம் போன்ற பக்கவாத்தியங்களும் இக்கலையின் இசைக்கு மெருகூட்டுகின்றன.

 சரி! வில்லுப்பாட்டு இசைக் கலையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? பாண்டியராணி கூறுகிறார்:

 ""விருதுநகர் மாவட்டம், சிவகாசி எங்கள் சொந்த ஊர். எனது தாத்தா பட்ராய பிள்ளை நாகஸ்வரக் கலைஞர். அப்பா தவில் கலைஞர். சின்னம்மாள் கலைமாமணி பி. காந்திமதி வில்லுப்பாட்டுக் கலைஞர். எனக்கு சிறு வயது இருக்கும்போதே எனது சின்னம்மாளுடன் கச்சேரிகளில் பாடச் சென்றேன்.

 15 வயதில் இருந்தே பாடி வருகிறேன். தற்போது, 10 ஆண்டுகளாக இந்தக் கலைக் குழுவை நடத்தி வருகிறேன். எனது குழுவில் துணைப் பாடகி லட்சுமி உள்பட 7 பேர் உள்ளனர்.

 சென்னை சுப்பு ஆறுமுகம், செவல் தங்கையா உள்ளிட்ட பலர் வில்லுப்பாட்டு கலை வளரக் காணமானவர்கள்.

 புராணங்கள், தலைவர்களின் வாழ்க்கை என பல விஷயங்களையும் வில்லுப்பாட்டின் மூலம் மக்களுக்குத் தருகிறோம். வாழ்ந்து காட்டுவோம் என்ற பெயரிலான எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வில்லிசை மூலம் நடத்தினோம்.

 ஒரு புராணக் கதையைச் சொல்லும்போது அதைக் கேட்போருக்கு அலுப்புத் தட்டும். அதனூடே பாடல்கள், இடையிடையே நகைச்சுவை கலந்து கூறும்போது பாமரர்களும் புரிந்துகொள்வர்.

 ராமாயணம், மகாபாரதம், நள-தமயந்தி, சிலப்பதிகாரம், அரிச்சந்திரா போன்ற கதைகளை வில்லுப்பாட்டு மூலம் எடுத்துக் கொள்வோம். மூன்று மணி நேரம் வரை நிகழ்ச்சியை நடத்துகிறோம். திருவிழாக் காலங்கள், கோயில் விழாக்கள், தமிழ்ச் சங்க நிகழ்ச்சி, அரசு மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் வாய்ப்புக் கிடைக்கிறது.

 திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் திருவிழா, கோயில் விழாக்களில் முக்கிய நிகழ்ச்சியாக வில்லுப்பாட்டு இடம்பெறுகிறது. 3 நாள்கள்கூட தொடர்ந்து பாட வேண்டியிருக்கும்.

 குறிப்பாக மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்புகள் வரும். அடுத்து வரும் மாதங்களில் நிகழ்ச்சி இருக்காது.

 தமிழக அரசு ஏற்கெனவே 58 வயது பூர்த்தியடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கிறது. திருமண உதவித் தொகை, மருத்துவ உதவி உள்ளிட்ட பிற உதவிகளையும் அளிக்கிறது.

 அதே போன்று, கலை நிகழ்ச்சியில்லாத காலங்களில் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு உதவித் தொகை அளித்தால் பெரும் உதவியாக இருக்கும்.

 இக்கலையில் பெண்கள் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். தங்களது பிள்ளைகளையும் இக்கலையைத் தொடர்வதற்கு ஊக்குவிக்கின்றனர்'' என்கிறார் பாண்டியராணி.

 துப்பாக்கி ஏந்தும் நவீன கலாசாரத்தை நோக்கி இன்றைய உலகம் ஒரு புறம் சென்று கொண்டிருக்கிறது. மறுபுறம், ஆதிமனிதனின் வேட்டை ஆயுதமான வில் இன்றைக்கு இசைக் கலைக்கான வாத்தியமாகிவிட்டது! ஆயுதத்தைக் கலையாக்கியது தமிழரின் சிறப்பு போலும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.