நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லிக்கோர் தனி குணம்!

50 ஆண்டுகளுக்கு முந்தைய தில்லியின் பல்வேறு பரிமாணங்களை நினைவுகூரும் பகுதி இது. இந்த வாரம் "அன்றைய தில்லி' பகுதிக்காக மனம் திறக்கிறார் மயூர் விஹார் ஃபேஸ் 1, நிர்மாண் அபார்ட்மென்டில் வசிக்கும் தில்லிவாழ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:15 pm

வே.சுந்தரேஸ்வரன்

50 ஆண்டுகளுக்கு முந்தைய தில்லியின் பல்வேறு பரிமாணங்களை நினைவுகூரும் பகுதி இது. இந்த வாரம் "அன்றைய தில்லி' பகுதிக்காக மனம் திறக்கிறார் மயூர் விஹார் ஃபேஸ் 1, நிர்மாண் அபார்ட்மென்டில் வசிக்கும் தில்லிவாழ் மூத்த தமிழர்களில் ஒருவரான

என்.ஆர். நாராயணன் (80).

பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம். அங்கு அரசு கலைக் கல்லூரியில் இண்டர்மீடியட், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.எஸ்ஸி. படித்தேன்.

அப்பா என்.ஆர். ராமானுஜம், ஆங்கில நாளிதழ் ஒன்றின் தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராக 60 ஆண்டுகள் பணியாற்றியவர். "காவேரி' தமிழ் இதழை 25 ஆண்டுளாக நடத்தியவர்.

1954 நவம்பரில் வேலைக்காக தில்லி வந்தேன். இப்போதுபோன்று அப்போது குளிர் இதமாக இல்லை. தில்லியின் மக்கள்தொகை மிகக் குறைவு. ஹேக் ஸ்குயர் பகுதியில் வசித்த உறவினர் வீட்டில் "பேயிங் கெஸ்ட்' ஆகத் தங்கியிருந்தேன்.

தில்லி எலெக்ட்ரிகல்ஸ் சப்ளை கார்ப்பரேஷன் நிறுவனத்தில் "ஸ்டோர் கீப்பர்' பணி சிறிது காலம். வீட்டிலிருந்து 12 மைல் தூரத்தில் ரோஷ்னாரா ரோடில் இருந்த அந்த நிறுவனத்திற்கு தினமும் சைக்கிளில்தான் செல்வேன். பேருந்துகள் இருந்தாலும் அப்போதைய சொகுசு வாகனம் சைக்கிள்தான்.

தில்லிக்கென ஒரு தனி குணம் உண்டு. ஆளைக் கவரும் இடம் தில்லி. இங்கு வந்து 5 ஆண்டுகள் இருந்துவிட்டாலே ஊருக்குத் திரும்பிச் செல்வதற்கு மனம் வராது.

அக்கவுன்டன்ட் ஜெனரல் சென்ட்ரல் ரெவின்யூ (ஏஜிசிஆர்) அலுவலகத்தில் 1955-ல் வேலைக்குச் சேர்ந்தேன். மாதச் சம்பளம் ரூ. 150. அதில் ரூ. 25 சேமிக்க முடிந்தது. 6 ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். பின்னர், டைரக்டர் ஜெனரல் ஆப் டெக்னிகல் டெவலப்மென்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். வளர்ச்சி அதிகாரியாக ஓய்வுபெற்றேன்.

ஆர்.கே.புரம் தில்லி தமிழ் கல்விக் கழகப் பள்ளியின் பெற்றோர் சங்கத்தின் இணைச் செயலராக இருந்தேன். குழந்தைகளுக்குக் கல்விதான் முக்கியம். இதை உணர்ந்து சில குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணத்தைக் கூட தள்ளுபடி செய்தோம். அப்போதே 6-ம் வகுப்பு வரை தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக இருந்தது. வட இந்தியக் குழந்தைகள் சேர்ந்தாலும் தமிழைப் படிக்கவும், தெரிந்து கொள்ளவும் வாய்ப்பிருந்தது.

ஆசிரியர் - மாணவர்களிடையே நல்வுறவு நிலவியது. பின்தங்கிய மாணவர்களுக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தி கற்பித்தனர். சில பாடங்களில் வலுவற்று இருந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தனி வகுப்புகளும் எடுத்தனர்.

இந்தக் காலகட்டத்தில் ஸ்கூட்டர் வாகனம் பிரபலமாயிற்று. வாகனத்தை வாங்குவதற்கு

அரசு அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். நான் பஜாஜ் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து ஓராண்டு கழித்து வாங்கினேன். அப்போது அதன் விலை ரூ. 2,200. அம்பாசிடர், ஃபியட் கார்கள் அரசு ஒதுக்கீட்டில் கிடைத்தன.

அப்போதெல்லாம் வீட்டில் இருந்த பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தினர். கல்லூரியில் சேர்ப்பதற்குக் கூட அப்போது வழக்கமான கல்விக் கட்டணம் ரூ. 18 முதல் ரூ. 40-க்குள்தான் இருந்தது.

சொந்த வீடு கட்டுவது பற்றி சிந்தித்ததே இல்லை. கரோல் பாகில் இருந்து வெளியேறி ஜனக்புரி, ரோகிணி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றபோதுதான் கடன் வாங்கி வீடு வாங்க ஆரம்பித்தனர்.

அன்றைக்குத் தமிழர்களிடம் கலப்புத் திருமணம் இல்லை. இன்றைக்கு அது அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. இது வளர்ச்சியின் தொடக்கம்தான் என்பேன் என்றார் நாராயணன்.

என்.ஆர். நாராயணனின் மனைவி ஜம்பக லட்சுமி (76) சொல்கிறார்

அப்போதெல்லாம் மொழிபேதம் இல்லை. மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தன்மை இருந்தது. நான் ஹிந்தி கற்பதற்குக்கூட வடநாட்டினர்தான் உதவினர். ஒற்றுமை உணர்வு இருந்தது. இப்போது தமிழர்கள் தாய் மொழியைப் பேசுவதற்கே விரும்புவதில்லை. பேசுவதற்குக் கூச்சப்படுகின்றனர். தமிழ் தெரிந்தாலும் பேசுவதில்லை. பலருக்கும் உச்சரிப்பு, இலக்கணம் குறித்த விழிப்புணர்வு இல்லை.

எனது மகன் கிருஷ்ணா அமெரிக்காவில் பிஎச்.டி. படித்தாலும் தமிழ் மீது இன்றும் பற்று உள்ளவனாக இருக்கிறான். அமெரிக்காவில் வாழும் சீனர்கள், ஜப்பானியர்கள், மெக்சிகோ நாட்டவர் தங்கள் தாய்மொழியில் பேசுவதையும், அம்மொழியை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுவதைப் பார்க்க முடிகிறது.

நாமும் அதைப் போல் இருக்க வேண்டும். மேலை நாட்டில் உள்ள தேவையில்லாத, நமது கலாசாரத்திற்குப் பொருத்தமில்லாத விஷயங்களில் மட்டும் ஆர்வம் காட்டுகிறோம்.

குழந்தைகளுக்கு அதிகமான பணத்தையும், வசதிகளையும் கொடுத்து அவர்கள் தவறான வழியில் செல்ல பெற்றோர்களே காரணமாக இருக்கின்றனர். பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டுவது குறைந்து வருகிறது.

குழந்தைகளிடம் தினமும் சிறிது நேரமாவது மனம் விட்டுப் பேச வேண்டும். அன்றைக்கு இதெல்லாம் நாங்கள் செய்தோம் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.