நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கலாசாரத்தின் வேர்களை கண்டறிய வேண்டும்

வட இந்தியாவில் புகழ்பெற்ற, ஆன்மிகச் சுற்றுலா தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது ரிஷிகேஷ். இங்கு கங்கையின் கரையில் அமைந்துள்ளது சுவாமி தயானந்த ஆஸ்ரமம். இங்குள்ள அருள்மிகு கங்காதரேஸ்வரர் ஆலயத்தில் அனுதினம் ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:18 pm

வே.சுந்தரேஸ்வரன்

வட இந்தியாவில் புகழ்பெற்ற, ஆன்மிகச் சுற்றுலா தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது ரிஷிகேஷ்.

இங்கு கங்கையின் கரையில் அமைந்துள்ளது சுவாமி தயானந்த ஆஸ்ரமம். இங்குள்ள அருள்மிகு கங்காதரேஸ்வரர் ஆலயத்தில் அனுதினம் பூஜைகளும், ஆஸ்ரம வளாகத்தில் வேதாந்த வகுப்புகளும், சொற்பொழிவுகளும், யோக வகுப்புகளும், இலவச மருத்துவ முகாமும் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தவிர, "எய்ம் ஃபார் சேவா' என்ற அகில இந்திய இயக்கத்தின் சார்பில் பல்வேறு சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகா சிவராத்திரியையொட்டி பூஜைக்காகவும், சன்யாச தீட்சை அளிப்பதற்காகவும் ஆஸ்ரமத்திற்கு வருகை தந்திருந்தார் அதன் நிறுவனரான ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள். அவரிடம் பேசியபோது, ஆன்மிகம், கலாசாரம், யோகா முதல் 2ஜி, "கொலைவெறி' வரை பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.

அவர் "தினமணி'க்கு அளித்த சிறப்பு பேட்டி: சிவராத்திரி ஒரு முக்கியமான ஆன்மிக நாளாகும். இந்நாளில் சன்யாசம் பெற விழைவோருக்கு தீட்சை வழங்கப்படுவது வழக்கம். தீட்சை பெற்றவர்கள் மந்திர ஜபம் செய்வார்கள்.

ஆன்மிகம் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று சமூக சேவையும் முக்கியமாகும்.   சமூக சேவை என்பது நமக்குப் புதியதல்ல. பெருந்தன்மையுடன் இருப்பதுதான் நமது வளர்ச்சி. அதற்கு தானம் செய்வது ஓர் எளிய வழி.

போட்டிகள் நிறைந்த உலகம்

நமது தேசம் போட்டிகள் இல்லாத தன்மையுடையது. ஆனால். சில நபர்கள் போட்டிகளை அறிமுகப்படுத்திவிட்டனர்.

 இன்றைக்குக்கூட எல்.கே.ஜி. அட்மிஷன் பெற பரிந்துரை பெற வேண்டிய நிலை. அதற்குக் காரணம் போட்டிதான். ஆனால், அடிப்படையில் போட்டியே இல்லாத கலாசாரம்தான் நம்முடையது. வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

ஆகவே, அந்த ஆன்மிக வளர்ச்சியைப் பற்றித் தெரியாத நபர்கள் செய்த துஷ்பிரசாரம்தான் போட்டியை எதிர்கொள்ளச் செய்துவிட்டது.

இதனால், தர்மம் போய் அதர்மம் தலைதூக்குகிறது. கடைசியில் 2ஜி வரை வந்துவிட்டோம். இது ஒரு அடையாளம்தான். இதை மாற்ற வேண்டும். மக்கள் தங்களைத் தாங்களாகவே கவனித்துக் கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும்.

 இதற்காகத்தான் "எய்ம் ஃபார் சேவா' என்கிற அகில இந்திய அளவிலான இயக்கத்தைத் தோற்றுவித்துள்ளோம். இது, மக்களுக்கான பாதுகாப்பு இயக்கம். சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் என்ன செய்ய முடியுமோ, அதை மக்களுக்குச் செய்வதுதான் இதன் நோக்கம். அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த அமைப்பின்கீழ் 110 நிறுவனங்கள் உள்ளன. இதில் 85 நிறுவனங்கள் மாணவர்களுக்கானவை. அதாவது, குழந்தைகள் பராமரிப்புக்கான இல்லங்கள் இவை. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான இல்லங்கள். இந்த இல்லங்கள் குக்கிராமங்களில்கூட அமைக்கப்பட்டுள்ளன.

கர்ணப் பிரயாகை, ஸ்ரீநகர், டேராடூன், ஹரித்வார், காஸியாபாத், ரோட்டக், சிம்லா என நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த இல்லங்களை நடத்தி வருகிறோம். பராமரிப்பு மற்றும் கவனிப்பில் மக்கள் பங்களிப்புடன் நடத்தப்படுவது இந்த இயக்கத்தின் குறிக்கோள்.

கல்வி, சுகாதாரம், சுயஉதவிக் குழு, சந்தியா குருகுலம் நடத்துகிறோம். இந்த குருகுலம் மாலை வேளைகளில் குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது. வேதாந்த வகுப்புகளை உலகம் முழுவதும் உள்ள எனது சிஷ்யர்கள் நடத்துகின்றனர். ஆஸ்ரமம் மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். தவிர, யோக வகுப்புகளும் நடத்துகிறோம்.

இன்றைய இளைஞர்கள் நமது கலாசாரத்தின் வேர்களைக் கண்டறிவது அவசியம். அது அவர்களுக்குத் தன்னம்பிக்கையைத் தரும். அத்தகைய ஆழமான கலாசாரத்தைக் கொண்டவர்கள் நாம்.

 நமது மதச் சார்பிலான, ஆன்மிகம் சார்ந்த கலாசாரம் மிகவும் செறிவுடையது. நமது கலாசாரத்தை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டால் அவர் வாழ்க்கை நன்றாக அமைந்துவிடும்.

கொலவெறி

நமது கலாசாரத்தின் மீது மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் இருக்கிறது. இருக்கத்தான் செய்யும். அதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் நாம் அவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு உதாரணமாக "கொல வெறி' சினிமா பாடலைத்தான் சொல்ல வேண்டும். "கொலவெறி' அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதே?

 நமக்கு நமது அடிப்படைக் கலாசாரம் பற்றிய தெளிவான புரிதல் இருந்தால் நாம் விழிப்புணர்வு பெறுவதுடன் மற்றவரையும் அதைப் பெறச் செய்ய முடியும். இதற்கு கலாசாரக் கல்வி மிகவும் அவசியமாகும்.

மன, உடல் வளர்ச்சிக்கு யோகா மிகவும் நல்ல விஷயம். அதில், அஷ்டாங்க யோகத்தையும் சேர்க்க வேண்டும். இப்போது யோகம் என்பது ஆசனம் என்றாகிவிட்டது. தன் மீது அன்பு செலுத்த வைக்கிறது யோகம். தன் மேல் ஏற்படும் அக்கறை ரொம்ப நல்லது. இது சுயநலம் என்ற அர்த்தம் இல்லை. தன்னிடம் அக்கறை இருந்தால் பிறரிடம் அக்கறை ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.