புத்தகக் கடல் முத்துக்குளிக்க வாரீகளா..?
"நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள்' என்பது நிதர்சனமான வார்த்தைகள். தனிமை வாட்டும்போதோ, துன்பத்தில் உழலும்போதோ நல்ல நூல்களை வாசிக்கும்போது மன அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படுவது புத்தகப் பிரியர்களுக்கு


"நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள்' என்பது நிதர்சனமான வார்த்தைகள். தனிமை வாட்டும்போதோ, துன்பத்தில் உழலும்போதோ நல்ல நூல்களை வாசிக்கும்போது மன அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படுவது புத்தகப் பிரியர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
உலகில் சிறந்த தலைவர்களாகப் போற்றப்படும் பலரும் புத்தக விரும்பிகளாக இருந்தவர்கள்தாம்! அறிவு எனும் தேனை வழங்கும் தேன்கூடாக புத்தக சாலைகள் திகழ்கின்றன.
அறிவுச் சுரங்கமாகப் போற்றப்படும் புத்தகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய அறிவுக் கடலாக அல்லவா இருக்கும்? அது போன்றுதான் தில்லியில் தொடங்கியுள்ள உலகப் புத்தகத் திருவிழா காணப்படுகிறது.
ஆம், சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த புத்தகப் பதிப்பாளர்கள் பங்கேற்ற பிரமாண்ட "20-வது புது தில்லி உலகப் புத்தகத் திருவிழா' தில்லி பிரகதி மைதானில் கோலாகலமாகத் தொடங்கியது.
நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து 1,300 பதிப்பாளர்கள் சுமார், 2,500 புத்தக அரங்குகளை அமைத்துள்ளனர்.
ஒரு நாள் போதுமா...
இன்றொரு நாள் போதுமா?
அனைத்துத் தலைப்புகளிலும் அளப்பரிய புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஓர் அரங்கில் நுழைந்து, நூலை வாசித்து வாங்கலாமா? வேண்டாமா? என யோசனை செய்து திரும்புவதற்கு குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் ஆகின்றன. இதனால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குளை சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதுமா? என்ற மலைப்பு ஏற்படுகிறது.
நாம் சிந்தனைக்கு எட்டாத பல விஷயங்கள், நல்ல பல தலைப்புகளில் நூல்களாக மிளிர்கின்றன. கடந்த முறை வந்தபோது முழுமையாகச் சுற்றிப் பார்க்க முடியவில்லை. அதனால்தான் இந்த முறை தொடக்கத்திலேயே வந்துவிட்டேன்'' என்று குஜராத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் குமார் மித்தல் கூறினார்.
அனைத்து மொழிகளிலும்....
ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் மட்டுமின்றி தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒரியா, வங்காளி என அனைத்து பிராந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஹால் எண் 7-ல் வெளிநாட்டுப் புத்தகப் பதிப்பாளர்களின் அரங்குகள் வைக்கப்பட்டுள்ள. சௌதி அரேபியாவைச் சேர்ந்த அரங்கில் 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குரான் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மற்றும் பிரார்த்தனைப் பாடல் அடங்கிய சி.டி.யும் வைக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ, உலக சுகாதார நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் மருத்துவம், குடிநீர், கல்வி, மக்கள் வாழ்க்கைத் தரம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் வைக்கப்பட்டுள்ளன.
சௌதி அரேபியா, ஹாங்காங், மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், துருக்கி, ஸ்பெயின், சீனா, பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட 30 நாடுகளில் இருந்து பல்வேறு புத்தகப் பதிப்பு நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன.
ஹால் எண் 12-ல் கிழக்குப் பதிப்பகம், காலச்சுவடு, சந்தியா பதிப்பகம், பாரதி புத்தகாலயம், நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல புத்தக நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.
100 ஆண்டுகால இந்திய சினிமா
இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் மையக் கருவாக "இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டம்' எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டி, ஹால் எண் 7-ல் இந்திய சினிமா தொடர்பான பிரத்யேக புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதில், திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே, நடிகர்கள் திலீப் குமார், அமிதாப்பச்சன், ஷாரூக்கான், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன், ராஜ்குமார் என பல்வேறு பிரபல நடிகர்களின் வாழ்க்கை தொடர்பான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சினிமாவின் ஆரம்பகாலக் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 35 எம்.எம். கேமராக்கள், ஒலிபெருக்கிக் கருவிகள், பிலிம் ரோல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. "இந்திய சினிமாவைப் பற்றிய முழுமையான புரிதல் கிடைக்க இப்புத்தகங்கள் வாசகர்களுக்கு உதவிடும்' என்று பெங்களூரைச் சேர்ந்த எழுத்தாளர் லட்சுமி பிரியா கூறினார்.
குழந்தைகளுக்கான கருத்தரங்கம், வினாடி-வினா போட்டி ஆகியவை ஹால் எண் 4-லும், தலைநகர் தில்லியின் 100 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் கண்காட்சி நிகழ்ச்சியும், கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி சிறப்பு புத்தகக் கண்காட்சி ஹால் எண் 6-லும் நடைபெற்று வருகிறது. புத்தக வெளியீடுகள், இலக்கிய விவாத நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் உள்ளிட்டவை ஹால் எண் 6, 8, 14 ஆகியவற்றில் நடைபெறுகின்றன.
மார்ச் 4-ம் தேதி வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவை காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் பார்வையிடலாம். பொதுமக்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.20. பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டணம் ரூ.10.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...