பரதம் மூலம் ரஷிய மாணவர்களுக்கு தமிழ்க் கலாசாரம்
நாட்டியக் கலையான பரதத்தைக் கற்றுத் தருவது மட்டுமின்றி அதன் மூலம் இறை உணர்வையும், தமிழ்க் கலாசாரத்தையும் ரஷிய நாட்டு மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார் தில்லியில் வாழும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட ப


நாட்டியக் கலையான பரதத்தைக் கற்றுத் தருவது மட்டுமின்றி அதன் மூலம் இறை உணர்வையும், தமிழ்க் கலாசாரத்தையும் ரஷிய நாட்டு மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார் தில்லியில் வாழும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட பரதக் கலைஞர் பத்மா சம்பத்குமாரன் (68).
இவரது கலாசாரப் பணியைப் பாராட்டி ரஷியா இவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான "புஷ்கின் மெடல்' வழங்கி கௌரவம் தந்திருக்கிறது.
அண்மையில் தில்லி ரஷிய கலாசார மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பத்மா சம்பத்குமாரனுக்கு இந்த விருதை அந்நாட்டுத் தூதரக மூத்த அதிகாரி செர்ஜி கர்மலிட்டோ வழங்கினார். ரஷிய மாணவியர் நடாலியா அப்லன்ஸ் காயா, தினாரா லித்பூலினா, காட்ஜியா ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சியும் பார்வையாளர்களைக் கவரும் விதமாக இருந்தது.
தில்லி ஜனக்புரியில் "நிருத்யம் நாட்டிய, கலாசார சொûஸட்டியை நடத்தி வருகிறார் பத்மா சம்பத்குமாரன். விருது பெற்ற மகிழ்ச்சியில் இருந்த அவரிடம் பேசினோம்.
""கடந்த 40 ஆண்டுகளாக பரதம் கற்றுத் தருகிறேன். சென்னைதான் எனது பூர்விகம். 6 வயதிலேயே பரதம் கற்றேன். பந்தநல்லூர் சொக்கலிங்கம் பிள்ளைதான் எனது முதல் குரு. அதன்பிறகு நீலா பாலசுப்பிரமணியத்திடம் கற்றேன். எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ. படித்தேன். 1962-ல் திருமணம் நடந்தது. கணவர் சம்பத்குமாரன் மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணி புரிந்தார். அங்கிருந்துதான் எனது நாட்டிய வகுப்புகள் தொடங்கின. கணவரின் பணி மாற்றம் காரணமாக 1982-ல் விசாகப்பட்டினம் வந்தோம்.
அங்கு ரஷிய அதிகாரிகளின் குழந்தைகளுக்கு பரத நாட்டிய வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். அதற்கு மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக ரஷிய மொழியைக் கற்க விரும்பினேன். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் ரஷிய மொழி படிப்பில் சேர்ந்தேன். இதன் மூலம் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டேன்.
1985-ம் ஆண்டில் தில்லிக்கு குடிபெயர்ந்தோம். அப்போதிருந்து ரஷிய கலாசார மையத்தின் மூலம் அந்நாட்டு மாணவர்கள் பலருக்கும் பரதம் கற்றுக் கொடுத்து வந்திருக்கிறேன். தற்போதும் அது தொடர்கிறது. தவிர, அமெரிக்கத் தூதரகம் மூலம் அமெரிக்கக் குழந்தைகளுக்கும் பரதம் கற்றுத் தந்திருக்கிறேன்.
எனது பரத மாணவர்களின் அழைப்பின் பேரில் பிரான்ஸ், ஜெர்மனி, லண்டன், மாஸ்கோ, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் இயற்றிய கவிதைகளுக்கு நாட்டிய நிகழ்ச்சி நடத்தியுள்ளேன். 2006-ம் ஆண்டில் பரதக் கலைஞருக்கான கலைமாமணி விருதை தமிழக அரசு எனக்கு வழங்கியது.
சோனியா காந்தி வாழ்த்து
தற்போது ரஷிய நாட்டின் உயரிய விருதான புஷ்கின் மெடல், கலாசாரப் பிரிவில் கிடைத்திருக்கிறது. இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
பரதக் கலை மூலம் நமது கலாசாரத்தை ரஷிய மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பதாக உணர்கிறேன். மேலும், என்னிடம் பரதம் பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் தமிழ் வார்த்தைகளையும், தென்னிந்திய உணவு முறைகள், உடைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவற்றை அவர்களுக்கு கற்றுத் தருவதால் ஓர் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது.
அதேபோன்று, அவர்களது மொழியைக் கற்று அவர்களுடன் பேசும்போது அவர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது. இதுதான் பரஸ்பர உறவு.
இக்கலை பயில வரும் இளம் தலைமுறையினர் இதன் மீது முழு ஆர்வம் செலுத்த வேண்டும். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக வரக் கூடாது.
பெற்றோர்களின் அவசரப் போக்கு
பெற்றோர்களும் நாட்டிய வகுப்பில் சேர்ந்த சில மாதங்களிலேயே தங்கள் பிள்ளைகள் மேடை அரங்கேற்றத்திற்கு அவசரம் காட்டும் மனப்போக்கு உள்ளது. இதனால், மாணவர்கள் முழுத் திறமை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
என்னிடம் நாட்டியம் பயில வரும் மாணவர்களுக்கு மேடை அரங்கேற்றத்திற்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இசைவு தருகிறேன். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டணத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் கற்றுத் தருகிறேன் என்றார் பத்மா சம்பத்குமாரன்.
""பரதத்தில் உடல் அசைவுகள் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மாற்றங்களை உணர முடிகிறது. மன மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கிறது.
தென்னிந்திய உணவு வகைகளான உப்புமா, இட்லி, ரசம், பாயாசம் எனக்கு மிகவும் பிடிக்கும். பிறர் தமிழ்ப் பேசும்போது ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.
இந்தியாவின் கலாசாரத்தையும், கடவுள் வழிபாடு குறித்த பல்வேறு விஷயங்களையும் தெரிந்துகொண்டுள்ளேன். தற்போது மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் 20 மாணவியருக்கு நாட்டிய வகுப்பு எடுத்து வருகிறேன்'' என்று ரஷியாவின் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் நாட்டிய வகுப்பு எடுத்து வரும் நடாலியா அப்லன்ஸ் காயா கூறினார்.
""மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பயின்று வருகிறேன். பரத நாட்டியம் எனக்கு மிகவும் பிடித்த கலை. அதனால்தான், இக்கலையை இந்தியா வந்து கற்கிறேன்'' என்று உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த தினாரா லித்பூலினா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...