"கலையால் படிப்புக்குத் தடையில்லை'
இசைக் கலையில் மேன்மையுறுவது யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை. இளம் பிராயத்தில் இருந்தே அதன் மீதான ஈர்ப்பு, காதல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்! ஆம், ஏழு வயதிலேயே மிருதங்கத்தைக் கையில் ப


இசைக் கலையில் மேன்மையுறுவது யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை. இளம் பிராயத்தில் இருந்தே அதன் மீதான ஈர்ப்பு, காதல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்!
ஆம், ஏழு வயதிலேயே மிருதங்கத்தைக் கையில் பிடிக்கத் தொடங்கி இன்றைக்கு 500 மேடைகளில் மிருதங்கம் வாசித்து இளம் பருவத்திலேயே பல விருதுகளைப் பெற்று சிறந்த இளம் கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தில்லியைச் சேர்ந்த திருவாரூர் டி.எஸ். ஸ்ரீராம் (19).
தியாகையரின் திருவாரூரை இவரது பெற்றோர் பூர்விகமாகக் கொண்டதால் தன்னுடைய பெயருக்கு முன்பாக அடைமொழியாக ஊரின் பெயரை வரித்துக் கொண்டுள்ளார் கல்லூரி மாணவரான இவர். தில்லி ரோகிணி செக்டார் 3-ல் வசிக்கும் இவரது தந்தை எம்.வி. தியாகராஜன், குர்காவ்னில் தனியார் வர்த்தக நிறுவன மேலாளர். தாயார் சாந்தி தியாகராஜன் இல்லத்தரசி.
சிறுவயது முதற்கொண்டே கலை மட்டுமின்றி கல்வியிலும் சிறப்பிடம் பெற்று திகழ்கிறார் ஸ்ரீ ராம். வேலூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலையில் பி.டெக். (ஐ.டி.) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி செமஸ்டர் விடுமுறைக்காக அண்மையில் தில்லி வந்த ஸ்ரீ ராம், தில்லியிலும் பல இசைக் கச்சேரி நிகழ்ச்சிகள் பங்கேற்பதில் மும்முரமாக இருந்தார்.
""சிறுவயதிலேயே எனக்கு மிருதங்கம் மீது ஈடுபாடு. தந்தைக்கும் மிருதங்கம் வாசிக்கத் தெரியும் என்பதால் பயிற்சியில் சேர ஊக்குவித்தார். மிருதங்க வித்துவான் கும்பகோணம் என். பத்மநாபனிடம் 12 ஆண்டுகள் கற்றுக் கொண்டேன். 2006-ம் ஆண்டில்தான் மேடை அரங்கேற்றம் நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்பாக 400 மேடைகளில் மிருதங்கம் வாசித்து விட்டேன்.
மிருதங்க வாசிப்பில் ஈடுபாடு மேலும் அதிகரித்ததற்குக் காரணம் என நான் கருதுவது சுப்புடு தாத்தாவைத்தான். அவர் மறைவதற்கு முன்பு காஜியாபாதில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றேன். அவர் முன்பாக மிருதங்கம் வாசித்தேன். அப்போது, கர்நாடக இசை தொடர்பான பல கேள்விகளை என்னிடம் கேட்டார். அதற்கு நான் அளித்த பதில்கள் அவருக்குப் பிடித்தன.
உடனே "இந்திய இசை உலகின் அடுத்த பெரிய ஆள் நீதானடா' என்று பாராட்டினார். அதை பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். பிறகு தில்லி ரோகிணியில் உள்ள காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் நடத்திய இசைப் போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சுப்புடு தாத்தாவிடம் பரிசு பெற்றேன்.
அவர் மறைந்த பிறகு அவரது நினைவாக 2011-ல் நடத்தப்பட்ட இசைப் போட்டியில் பங்கேற்று "சுப்புடு நினைவு விருது' பெற்றேன். இந்த விழாவில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் கலந்துகொண்டனர். 2000-ம் ஆண்டு காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் நடத்திய இசைப் போட்டியில் பங்கேற்று அப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியிடம் முதல் பரிசு பெற்றேன்.
அதைப் போல் கேரளா கிளப், ஆஸ்திக சமாஜ் ஆகியவை நடத்திய இசைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளேன். மிருதங்க வாசிப்புப் போட்டிகளில் 21 தடவை முதல் பரிசு பெற்றுள்ளேன்.
நேரு பால் சமிதி நடத்திய விழாவில் 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்கப் பதக்கம் பெற்றேன். மேலும், அந்த அமைப்பு ஓவியக் கலையைத்தான் அங்கீகரித்து, கலா பூஷண் விருது தருவது வழக்கம். முதல் முறையாக அந்த விருதை மிருதங்கப் பிரிவுக்காகப் பெற்றுள்ளேன்.
2005-ம் ஆண்டில் இந்திய - ரஷ்ய குழந்தைகள் பண்பாட்டுப் பரிமாற்றத்தின் அடிப்படையில் ரஷியா சென்றேன். 12 பேர் சென்ற அந்த குழுவில் நான் மட்டுமே இளம் இசைக் கலைஞன். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடம் பாராட்டுப் பெற்றேன்.
குடியரசு முன்னாள் தலைவர்கள் ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பத்மவிபூஷண் டாக்டர் அனில் கோலி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், இசைக் கலைஞர்கள் உமையாள்புரம் சிவராமன், டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, கடம் இசைக் கலைஞர் "விக்கு' விநாயகம், திருவாரூர் பக்தவத்சலம், நெய்வேலி ஆர். சந்தானகோபாலன் உள்ளிட்ட பலரிடம் பாராட்டுப் பெற்றுள்ளேன்.
தேசிய கல்வி ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனத்தின் (என்.சி.இ.ஆர்.டி.) ஸ்காலர்ஷிப்பை 2007 முதல் 2010-ம் ஆண்டு வரை பெற்றேன். நன்கு படித்ததால் எனது பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தியதே இல்லை. இதெல்லாம் கலையால் கிடைத்த வெகுமதியாகவே கருதுகிறேன்.
வாய்ப்பாடு, கீ போர்டு பயிற்சி: மிருதங்க பயிற்சி மட்டுமின்றி, ஐந்து ஆண்டுகள் வாய்ப்பாட்டுப் பயிற்சியை இசைக் கலைஞர் ஏ.எஸ். அருணின் சகோதரி பத்மா நடேசனிடம் பெற்றேன். தவிர, ஓராண்டு கீ-போர்டு வாசிப்புப் பயிற்சியும் பெற்றுள்ளேன்.
2007-ம் ஆண்டில் தேசிய பால் ஸ்ரீ போட்டியில் பங்கேற்றேன். உள்ளூர், மண்டலம், தேசிய அளவிலான சுற்றுகளில் வெற்றி பெற்று இந்த விருதைப் பெற்றேன். பத்மஸ்ரீ விருதுக்கு நிகராக கருதப்படும் பால்ஸ்ரீ விருதைக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கரங்களில் இருந்து பெற்றது மறக்க முடியாத நிகழ்வு.
எனது மிருதங்க இசை நிகழ்ச்சியைக் கேட்பதற்காகவே நான் படித்த டிஏவி பள்ளிகளின் அகில இந்தியத் தலைவராக இருந்த ஜி.பி. சோப்ரா எனது வீட்டுக்குக் காரை அனுப்பி வரச் சொல்லுவார். இதை நான் பெருமையாக நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை படிப்புக்குக் கலை என்றுமே தடையில்லை.
சொல்லப்போனால் கலையால் நினைவுத் திறன் அதிகரிக்கிறது. மனத்துக்கு அமைதியும் மகிழ்வும் கிடைக்கிறது. இதனால், படிப்பில் நன்கு கவனம் செலுத்த முடிகிறது. தற்போது படிக்கும் ஐ.டி. படிப்புக்குப் பிறகு அமெரிக்காவில் எம்.எஸ். படிக்க திட்டமிட்டுள்ளேன். பெரிய இசைக் கலைஞராக வர வேண்டும். பிரபல இசைக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியமாக வாசிக்க வேண்டும் என்பது என் விருப்பம் என்று கண்கள் விரிய மனம் பூரிக்கிறார் டி.எஸ். ஸ்ரீராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...