இறைவனிடம் அடைக்கலம் புக வழிகாட்டும் திருப்பாவை!
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில்...' எனத் தொடங்கும் பக்திப் பாசுரம் வைணவத் திருத்தலங்களில் அதிகாலைப் பனிப் பொழுதில் ஒலிக்கும் மார்கழி மாதம் இது. "சூடிக் கொடுத்த சுடர்கொடியாள்' என்ற சிறப்புக்குர


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில்...' எனத் தொடங்கும் பக்திப் பாசுரம் வைணவத் திருத்தலங்களில் அதிகாலைப் பனிப் பொழுதில் ஒலிக்கும் மார்கழி மாதம் இது.
"சூடிக் கொடுத்த சுடர்கொடியாள்' என்ற சிறப்புக்குரிய ஸ்ரீ ஆண்டாள் பாடிய திருப்பாவையில் தொடங்கும் முதல் பாடலின் தொடக்க வரிதான் மேற்சொன்னது.
சர்வ வல்லமை படைத்த இறைவனின் பாதார விந்தங்களைப் இறுகப் பற்றி மோட்சம் எனும் விடுதலை அடைய வழி ஏது? என்று தெரியாமல், சம்சார சாகரத்தை நீந்திக் கடக்க முடியாமல் அல்லலுறும் மானிடருக்கு இருளை நீக்கி ஒளி தரும் ஜோதியாக இருக்கிறது இப் பாசுரங்கள்.
தமிழகத்தின் மார்கழி மாதம் வந்துவிட்டாலே அதிகாலை வேளையில் வைணவக் கோயில்கள் மட்டுமின்றி அனைத்து ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகளும், பக்தி இசையும் மணக்கத் தொடங்கிவிடும்.
இந்து சமயத்தைப் பின்பற்றும் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் தமிழ்க் கோயில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் மார்கழி மாத அதிகாலையில் இந்தத் திருப்பாவை பாடல் வழிபாடு நடத்தப்படுவது நடைமுறை வழக்கமாகவும் இருந்து வருகிறது!
நாட்டின் தலைநகரான தில்லியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆம், தில்லியின்
அனைத்து சைவ, வைணவ ஆலயங்களிலும் மார்கழி பூஜைக்காக அதிகாலை வேளையில் கோயில் நடை திறக்கப்பட்டு வருகின்றன.
பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீ ஆண்டாளின் பாசுரங்கள் காலையில் ஒலிக்கப்படுகின்றன. அடர்ந்த பனி மூட்டத்தையும், உடல் நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோயில்களில் கூடும் பக்தர்களின் கூட்டம் மார்கழியின் மகத்துவத்தை உணர்த்துவதாகவே உள்ளது.
மாலை வேளையில் ஆங்காங்கே கோயில்களில் நடைபெறும் திருப்பாவை, திருவெம்பாவை உபன்யாசத்தின் பக்திச் சுவையில் திளைக்க பக்திமான்கள் ஆர்வமுடன் வருவதையும் காணமுடிகிறது.
மயூர் விஹார் ஃபேஸ் 1-ல் உள்ள ஸ்ரீ சுபசித்தி விநாயகர் திருக்கோயிலில் கடந்த மார்கழி முதல் நாள் தொடங்கி மாலை வேளையில் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி மாலை வேளைகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்வம் போர்டு சார்பில் தில்லியில் இது போன்று இரு கோயில்களில் இந்நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உபயன்யாசத்தின்போது ஸ்ரீ ஆண்டாள் பாடிய திருப்பாவையின் மகத்துவம் குறித்து ஸ்ரீ மத் ஆண்டவன் திருவடி அளவூர் நடாதூர் ஸ்ரீனிவாச ஆராவமுதாச்சாரியார் கூறியதாவது:
ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரின் தோட்டத்தின் செடியின் கீழே தானாக அவதரித்த அவதாரம் ஸ்ரீ ஆண்டாள். இறைவனின் குணநலன்களையும், கீர்த்தியையும் பெரியாழ்வார் சொல்லக் கேட்டு அதன்பால் பெருமாள் மீது காதல் கொண்டு அவரையே பதியாக அடைந்தவர். நிலதேவியின் மறு அம்சம்தான் ஸ்ரீ ஆண்டாள்.
பூமியில் வாழும் மானுடப் பிறவிகள் இறைவனின் அருளைப் பெற வேண்டும். அவனை அடைய வேண்டும் என்ற நோக்கில் மானுடப் பெண்ணாகவே அவதரித்து உணர்த்தியவள் மனிதர்களுக்கு உணர்த்தியவள் அம்பாள்.
"கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழும் ஊர்' என்று சொல்வார்கள். பெருமாள் இருக்கும் இடங்களெல்லாம் ஆண்டாளும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
பகவானுக்குத் தொண்டு செய்வதன் மூலம் இறைவனை அடையலாம். குறிப்பாக பகவானுக்குத் தொண்டு செய்யும் தொண்டர்களுக்குத் தொண்டாற்றுவதே இறைவனை அடைய எளிய வழி. அவர்கள் மீது அளவில்லா அருளைப் பொழிகிறான் இறைவன்.
மனித உடல் அழிந்து போகும். ஆனால், உள்ளே இருக்கும் ஆத்மாவுக்கு ஏது அழிவு? ஆகவே பகவானுக்குத் தொண்டு செய்வதே இந்த சரீரத்தின் நோக்கமாகும். இதை உணர்த்துகிறது ஸ்ரீ ஆண்டாளின் பாசுரப் பாடல்கள்.
திருப்பாவையின் சாரமே பகவானை அடைக்கலம் புகுதல் ஆகும். வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என பலவற்றிலும் உள்ள அத்தனை சாராம்சாங்களும் திருப்பாவை பாடல்களில் நீக்கமற பொதிந்துள்ளன.
இறைவனின் குணநலன்களில் மூழ்கி, இறைவன் குணங்களைப் பற்றியே பேசி, பூரித்து புகழ்ந்து காலத்தைக் கழித்தவர்கள் ஆழ்வார்கள் எனப்படுகின்றனர். பெரியாழ்வார் இறைவனைத் தொழுவதற்குப் பூமாலை தொடுத்தார். ஆண்டாளோ உலக உயிர்கள் உய்வதற்காகப் பாமாலை தொடுத்தவர்.
மனித நிலையில் இருந்து இறை நிலைக்குக் கொண்டு போகவும், இறைவனைச் சராணகதி எனும் அடைக்கலம் புகுதலுக்கான மார்க்கம் பேசுகிறது ஆண்டாளின் பாசுரங்கள். இதற்காக வேதங்கள், ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் இருந்து உதாரணங்கள் தரப்படுகின்றன.
திருப்பாவையின் 30 பாசுரங்களிலும் இறைநிலையை உயர்த்தியும், தன்னிலையைத் தாழ்த்தியும் இறைவனை அடையும் மார்க்கம் எடுத்தும் கூறப்பட்டுள்ளது.
இறைவனை அடைவதற்குப் பல வழிகள் இருந்தாலும் அடைக்கலம் புகுதல் எனும் சரணாகதி முக்கிய வழியாகும்.
"வேதம் அனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்' என்று திருப்பாவையைப் போற்றக் காரணமும் உண்டு. அனைத்து வேதங்களிலும், புராணங்களிலும், உபநிஷத்துகளிலும் உள்ள அத்தனை சாராம்சங்களும் இதில் சொல்லப்பட்டுள்ளன.
ஆழ்வார்களின் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்களில் ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய திருப்பாவை 30 பாடல்களும், நாச்சியார் திருமொழி பாடல்கள் சேர்த்து 173 பாசுரங்கள் இடம்பெற்றுள்ளனர்.
இறை நிலையை அடைய வேண்டும் என்பது பலருக்கும் வைராக்கியமாக இருக்கும். இந்தப் பாடல்களைப் பாடுவோர் பேரானந்தம் அடைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...