அவதார புருஷரின் ஆ(ன்மா)லயம்!
கனங்களின் இரைச்சல்; பரபரப்பு மிகுந்த தில்லி லோதி ரோடிலிருந்து பிரிந்து செல்லும் அப்பாதையில் நுழையும்போதே அமைதி உணர்வு நம்மைப் பிடித்துக் கொண்டுவிடுகிறது. வலதுபுறம் ஸ்ரீ ராம் மந்திர் அமைந்துள்ள வரிசையி


கனங்களின் இரைச்சல்; பரபரப்பு மிகுந்த தில்லி லோதி ரோடிலிருந்து பிரிந்து செல்லும் அப்பாதையில் நுழையும்போதே அமைதி உணர்வு நம்மைப் பிடித்துக் கொண்டுவிடுகிறது.
வலதுபுறம் ஸ்ரீ ராம் மந்திர் அமைந்துள்ள வரிசையில் நிசப்தமாகக் காட்சியளிக்கிறது அந்த வளாகம். நுழைவு வாயில் வழியாகச் சென்றால் ஏதோ மனத்தில் ஒருவித வெறுமை பூரிப்பது போன்ற உணர்வு. அங்குள்ள கட்டடத்தின் நடுவில் உள்ள அரங்கத்தில் அவதாரப் புருஷன் ஸ்ரீ ரமணர் அமர்ந்திருக்கிறார். நிதர்சனமாகவே அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
மெலிந்த தேகம் கொண்ட ஸ்ரீ ரமணரின் அந்தத் திருவுருக் கருணைக் கண்களை நாம் கூர்ந்து நோக்கும்போது அமைதிவெளியில் இருக்கும் ஆன்மிக உணர்வு ஆட்கொண்டு விடுகிறது. ஆம், ரமணரின் தெய்வ உருவத்தைத் தாங்கியதாக இருந்தாலும் அதைப் புகைப்படம் என்று நினைக்கத் தோன்றாது.
"நான் யார்?' என்பதைத் தனக்குத் தானே கேட்டு அதன் மூலம் ஆத்ம ஞானம் பெற்ற அற்புத மகான் ஸ்ரீ ரமண மகரிஷிக்கு அமைக்கப்பட்டுள்ளதுதான் "ஸ்ரீ ரமண கேந்திரா, தில்லி' எனும் அந்த ஆலயம்.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் அவரித்து திருவண்ணாமலையில் தனது இறுதிக் காலம் வரை இருந்து முக்தியடைந்தவர் பகவான் ரமண மகரிஷி. அங்குள்ள ரமணாஸ்சிரமம் உலகெங்கும் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் புனித இடம்.
அவர் ஆசி வழங்கும் ரமண கேந்திரங்கள் பல இடங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. அதே போன்றுதான் தில்லியிலும் ரமண கேந்திரா எனும் பெயரில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
ரமண மகரிஷி ஆன்மிகக் காற்று வீசும் திருவண்ணாமலையின் விருப்பாட்சி குகையில் அமர்ந்து தியானம் செய்தார். அதே போன்று வடிவில் அமைக்கப்பட்டுள்ளது இக்கோயில். இந்த கேந்திரத்தின் உள்புறம் அலங்கரிக்கப்பட்ட ரமணரின் அமர்ந்த நிலை உருவப்படம் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறது.
இக் கட்டடத்தை நிர்மாணிப்பதில் மகாத்மா காந்தியின் படைப்புகளைத் தொகுத்தளிக்கும் பணியின் தலைமை ஆசிரியராக இருந்தவரும், ரமணரின் பக்தருமான பேராசிரியர் கே. ஸ்வாமிநாதன் முக்கியமாகச் செயல்பட்டவர்.
1963-ம் ஆண்டில் இந்த கேந்திரா உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஜுன்ஜுன்வாலா எனும் கட்டடவியல் கலைஞர் இந்த கேந்திரத்தை வடிவமைத்தவர். கட்டடப் பணிகள் முடிந்து செப்டம்பர் 1, 1974-ல் கேந்திரத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ ரமணாஸ்ரமத் தலைவராக இருந்த டி.என். வெங்கட்ராமன், அப்போது, குடியரசுத் துணைத் தலைவராக இருந்த பி.டி. ஜாட்டி போன்றோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
முன்னாள் ஆளுநர் சி. சுப்பிரமணியம், மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், குடியரசு முன்னாள் தலைவர் ஆர். வெங்கட்ராமன், முன்னாள் தலைமைக் கணக்கு அதிகாரி சதுர்வேதி போன்ற பலர் இந்த கேந்திரத்தின் தலைவர்களாக இருந்துள்ளனர்.
ஸ்ரீ ரமண மகரிஷின் 60-வது மகா சமாதி விழா 14.4.2010-ம் தேதி கொண்டாடப்பட்டது.
கேந்திராவில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை சத்சங்க நிகழ்ச்சியும், குருபூர்ணிமா (வ்யாச பூஜை), கார்த்திகை தீபத் திருநாள், மகா சிவராத்திரி விழா ஆகியவை கொண்டாடப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலைக்குப் பகவான் ரமணர் வருகை தந்த நாள், தில்லி கேந்திரத்தின் நிறுவனர் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
""பகவான் ரமணர் சித்தி அடைந்த 1950, ஏப்ரல் 14-ம் தேதி ஆராதனை விழாவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆர்ஸ வித்யா மந்திரின் நிர்வாகி சுவாமி பிரபுதானந்தா பங்கேற்கும் உபநிஷத், பகவத் கீதை தொடர்பான ஆன்மிக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது அந்த வகுப்பில் ஸ்ரீ ரமண மகரிஷியின் "சத் தர்சனம்' தொடர்பான விஷயங்களும் விளக்கப்படுகின்றன. சுவாமி பிரபுதானந்தா 30 ஆண்டுகளாக இந்த வகுப்புகளை நடத்தி வருகிறார்.
கேந்திரத்தின் சார்பில் மாதம் இருமுறை இரு மொழிகளில் வெளியாகும் "நேரடி வழி- ரமண ஞானம்' இதழ் 12 ஆண்டு காலமாக வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நல் ஆதரவும் கிடைத்து வருகிறது என்று தில்லி, ரமண கேந்திராவின் செயலர் என்.வி. கிருஷ்ணன் தெரிவித்தார்.
பக்தர்களின் பயன்பாட்டுக்கான நூலகம் கேந்திராவின் தரை தளத்தில் செயல்பட்டு வருகிறது. அமைதியும், ஆன்மிக மணமும் கமழும் இந்த இடம் வாசிப்புடன் ஆன்மிக சுவாசிப்பையும் பெறும் அற்புத இடமாக காணப்படுகிறது. ஆன்மிகம், தத்துவம், சமயச் சார்புடைய நூல்கள் என எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்த நூலகத்தை அலங்கரிக்கின்றன.
பார்வையற்றோர் படித்துப் பயன்பெறும் வகையில் ஜெ.எஸ். கபூர் என்பவரால் பிரெய்லி முறையில் உருவாக்கப்பட்ட பகவான் ரமணரின் "உபதே சாரம்' நூல்களும் உள்ளன.
வாசிப்பு அறையில் பகவான் ரமணரின் தத்துவங்கள், போதனைகள் மற்றும் யோகா, கல்வி போன்றவை தொடர்பான பல நூல்களும், தத்வலோகா, யோகாஞ்சலி, பகவான் ரமணர் பற்றிய இதழ்கள், சிவானந்த ஆஸ்ரமத்திலிருந்து வெளியிடப்படும் இதழ்கள் ஆகியவை வாசர்கள் படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நூலகம் 1.9.2007 திறக்கப்பட்டு, 1.3.2008 முதல் முழு அளவில் செயல்பட்டு வருகிறது. நூலகரும் பணியமர்ப்பத்தப்பட்டுள்ளார். நூலக உறுப்பினர்களும் சேர்க்கப்படுகின்றனர்.
நூல் அரங்கு: ரமணரின் இலக்கியங்கள், அவர் தொடர்பான நூல்களை விற்பதற்கும் ரமண கேந்திரா ஏற்பாடு செய்துள்ளது. இங்குள்ள அலுவலகத்தில் திருவண்ணாமலை ஸ்ரீ ரமாணஸ்ரமம் சார்பில் வெளியிடப்படும் புத்தகங்களும், பெங்களூரில் உள்ள ரமண மகரிஷி கற்றல் மையத்தின் மூலம் வெளியப்படும் நூல்கள் விற்கப்படுகின்றன.
ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் புத்தகங்கள் விற்கப்படுகின்றன. தவிர, விடியோ - ஆடியோ கேஸட், புகைப்படங்கள், பரிசுப் பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தில்லி ரமண கேந்திரத்தின் மூலம் சமூகப் பணிகளும் செய்யப்பட்டு வருவதாக அதன் உப தலைவர் வி. மகாலிங்கம் கூறினார்.
""ஒவ்வொரு ஆண்டும் தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள் கேந்திரா மூலம் தரப்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளின் முதல்வர்கள் பரிந்துரைக்கும் ஏழை மாணவர்களுக்கு அவை அளிக்கப்படுகின்றன.
ரமண பக்தர்களால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை நிதியின் வட்டி, மத்திய அரசு அளித்த நிதி ஆகியவற்றின் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பகவானின் ஆராதனை தினத்தின்போது சுமார் 300 ஏழை மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது'' என்றார் அவர்.
""ரமண கேந்திரத்தின் மூலம் 20 அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசின் கலாசாரத் துறை மூலம் தொகுப்பு நிதியாக ரூ. 10 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி வைப்பு நிதியில் போடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டி கேந்திராவின் நிதித் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
ரமண பக்தர்களின் உதவியுடன் கேந்திர வளாகத்தில் மேலும் ஒரு தளத்தை அமைப்பதற்குத் திட்டமிட்டு வருகிறோம். கேந்திரத்திற்கு பல பகுதிகளிலும் இருந்து வரும் பிரமுகர்கள் தங்குவதற்குப் படுக்கை வசதிகள் செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளன.
பகவானின் படங்களை வைத்து ஒரு மியூசியமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உதவ விரும்பினால் 24626997 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்று என்.வி. கிருஷ்ணன் தெரிவித்தார்
""இதயத்தில் இருக்கும் அகந்தை விலகுதலே சரணாகதி. "தான்' எனும் அகந்தை இருக்கும் வரை இறைவனைக் காண முடியாது'' என்று பகவான் ரமணரின் உபதேச மொழிகளை இங்கு வரும் பக்தர்களை ஆத்மார்த்தமாக உணரச் செய்கிறது இந்த ரமண கேந்திரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...