நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

""சிறந்த பொழுதுபோக்கு நகரம்''

50 ஆண்டுகளுக்கு முந்தைய தில்லியின் பல்வேறு பரிமாணங்களை நினைவுகூரும் பகுதி இது. இந்த வாரம், "அன்றைய தில்லி' பகுதிக்காக மனம் திறக்கிறார் ஜோர் பாக், எச். பிளாக்கில் வசிக்கும் தில்லிவாழ் மூத்த தமிழர்களில்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:45 pm

வே.சுந்தரேஸ்வரன்

50 ஆண்டுகளுக்கு முந்தைய தில்லியின் பல்வேறு பரிமாணங்களை நினைவுகூரும் பகுதி இது. இந்த வாரம், "அன்றைய தில்லி' பகுதிக்காக மனம் திறக்கிறார் ஜோர் பாக், எச். பிளாக்கில் வசிக்கும் தில்லிவாழ் மூத்த தமிழர்களில் ஒருவரும், ராணுவப் படையில் மேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஜெயச்சந்திரன் ரத்னம் (87).

தமிழகத்தின் நெல்லை மாவட்டம், சாயர்புரம்தான் எனது பூர்விகம். தந்தை வேலாயுதம் டேனியல் ரத்னம், அரசு கால்நடை மருத்துவராகப் பணியாற்றியவர். குறிப்பாக குதிரைகளுக்கான மருத்துவத்தில் நிபுணர். அடிப்படையில் விவசாயக் குடும்பம் எங்களது.

சென்னை ராமகிருஷ்ணா மிஷனில் பள்ளிப் படிப்பையும், லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரப் படிப்பையும் முடித்தேன். சிறுவயதில் இந்திய ராணுவத்தின் வரலாற்று விஷயங்களை ஆழ்ந்து படித்ததால் அதில் பணியாற்றும் ஆர்வம் ஏற்பட்டது.

டேராடூனில் உள்ள மிலிட்டரி அகாதெமியில் இரு ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு 1943-ல் பஞ்சாப் ரெஜிமெண்டில் லெப்டினன்டாகப் பணியைத் தொடங்கினேன்.

அப்போது, 2-வது உலகப் போர் நிகழ்ந்திருந்த சமயம். 6 மாதம் பர்மாவில் பணியாற்றினேன். 1945, செப்டம்பரில் அப் போர் முடிவுக்கு வந்தது.

அப்போது, சென்னையில் இருந்து லாகூருக்குச் ரயிலில் செல்ல வேண்டியிருந்தது.

ஆக்ரா, தில்லி, லாகூர் என பல ரயில் நிலையங்களிலும் பயணிகளின் வசதிக்காக இரண்டு குடிநீர் அடிகுழாய்கள் வைக்கப்பட்டிருக்கும். முஸ்லிம் பானி, ஹிந்து பானி என தனித்தனியாகப் பெயர் எழுதப்பட்டிருக்கும். அதைப் பார்க்கும் போது வருத்தமாகத்தான் இருக்கும்.

அப்போது, சென்னையில் இருந்து பாகிஸ்தானில் உள்ள ஆபட்டாபாத் வரை ரயில் பாதை போடப்பட்டிருந்தது.

ராணுவத்தில் அப்போதெல்லாம் ஆங்கில உணவு வகைகளே ஆபீஸர்களுக்கு வழங்கப்படும். காலையில் பிரெட் ஆம்லேட், பட்டர்- ஜாம் வழங்கப்படும். உணவில் கட்டாயம் மீன், கறி இருக்கும். உணவு விஷயத்தில் தரத்தைக் கடைப்பிடித்தார்கள்.

ஆங்கிலேயர்கள் ஹிந்துஸ்தானி பயிற்சி வகுப்புக்குப் போவார்கள். தொடர்புக்காக உருது, ஹிந்துஸ்தானி மொழிகளை அவர்கள் கற்றார்கள். சிக்னல், என்ஜினீயரிங், ரேடியோ உள்ளிட்ட பிரிவுகளில் தமிழர்கள் பலர் வேலையில் இருந்தனர்.

பர்மாவில் பணியாற்றியபோது எங்களது ராணுவ முகாமுக்கு உணவுப் பொருள்கள் வருவதில் சில நேரங்களில் தாமதம் ஏற்படுவதுண்டு. அப்போது, அங்கு வசிக்கும் நாகர் இனத்தவர்கள் எங்களுக்கு கோழி, இறைச்சி, காய்கறிகள் தருவார்கள். பதிலுக்கு அவர்களுக்குத் தேவையான உப்பு, கம்பளி ஆகியவற்றைக் கொடுப்போம்.

"போலீஸ் ஆபரேஷன்'

சுதந்திரத்திற்குப் பிறகு சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்க 1947, செப்டம்பரில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஹைதராபாத் நிஜாம் படைகளுடன் இந்திய ராணுவம் சண்டையிட நேர்ந்தது. இப்பணிக்காக தில்லியில் இருந்து சென்ற ஒரு ராணுவக் குழுவுக்கு கேப்டனாகச் சென்றிருந்தேன். "போலீஸ் ஆபரேஷன்' என்று அந்தப் பணிக்கு பெயரிடப்பட்டிருந்தது. காரணம், அது நாட்டுக்குள் நடைபெறும் யுத்தம் என்பதால் அப்படிப் பெயர் வைக்கப்பட்டது.

அப்போது, ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்தார். ஒரு வாரம் இந்தச் சண்டை நடைபெற்றது. பின்னர், ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

அங்கு சென்றுவிட்டு ரயிலில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது ஆக்ரா, தில்லி ரயில் நிலையத்தின் பிளாட்பாரங்களில் எல்லாம் பலர் சுடப்பட்டு இறந்து கிடந்தனர். காரணம், இந்து - முஸ்லிம் கலவரம்.

தில்லி திரும்பிய பின், ராணுவத்தின் வான்வெளி புகைப்பட விளக்கப் பிரிவின் கமாண்டாக இருந்தேன். ஜன்பத்தில் தற்போதுள்ள தேசிய ஆவணக் காப்பகம் அமைந்துள்ள பின்பகுதியில்தான் ராணுவ மெஸ் இருந்தது.

தொழில் வர்த்தக் துறையின் செயலராக இருந்த எஸ். ரங்கநாதன் ஐ.சி.எஸ்., இந்தியாவின் முதல் நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி (டி.டி.கே.) ஆகியோர் எனது குடும்ப நண்பர்கள். டி.டி.கே. சற்று கோபப்படுபவர். ஆனால், எளிமை விரும்பி. ராஜாஜி, காமராஜர், இந்திரா காந்தி அம்மையார் ஆகியோரையும் சில முறைகள் சந்தித்துள்ளேன்.

1957- வரை ராணுவத்தில் பணியாற்றினேன். மேஜராக இருந்தபோது விருப்ப ஓய்வு பெற்றேன். பின்னர் தொழில் நிறுவனப் பணிகளில் ஈடுபட்டேன். தற்போது, பங்குச் சந்தையில் ஈடுபட்டு வருகிறேன்.

எனது மனைவி லோதிகா ரத்னம், ஒரு வங்காளி. அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் காலமானார். அன்றைய தில்லியை நினைக்கும்போது பிரமிப்புதான் மேலிடுகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தில்லியில் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம்கூட கிடையாது.

1952-ல் மெர்சிடஸ் காரை இந்திய புகையிலை கம்பெனியின் தலைவராக இருந்த ஏ.என். ஹக்சாரிடம் இருந்து ரூ. 3,500-க்கு வாங்கினேன் என்றால் பாருங்களேன். 1940-ம் ஆண்டு மாடல் கார் அது. கனாட் பிளேஸில்தான் வர்த்தக ஏஜென்ஸி நிறுவனம் நடத்தினேன். அந்த நிறுவனம் இருந்த கட்டட அறையின் வாடகை அப்போது வெறும் ரூ. 250 தான்.

மெட்ராஸ் ஹோட்டலும், சௌத் இந்தியன் ஹோட்டலும் அங்கு இருந்தன. சைனீஸ் உணவு விடுதிகளும், துப்பாக்கிகள் விற்கும் கடைகளும் இருந்தன. நான் ராணுவத்தில் பணியாற்றியபோது எங்கள் மெஸ்ஸில் இருந்து கனாட் பிளேஸ் வருவதற்கு டாக்ஸி வாடகை 10 அணாதான்.

தொலைபேசி இணைப்பு

தில்லியில் அப்போதெல்லாம் போலீஸôரையோ, காவல் நிலையங்களையோ தேடித்தான் பார்க்க வேண்டும். அமைச்சர்களின் வீடுகளுக்குக் கூட போலீஸ் பாதுகாப்பு இல்லை. தொலைபேசி இணைப்புக் கிடைப்பது குதிரைக் கொம்பு. 3 ஆண்டுகள்கூட காத்திருக்க வேண்டியிருக்கும். அமைச்சர்களிடம் கூட  சிபாரிசுக்குச் சிலர் செல்வதுண்டு.

ஒரு காலன் (4.50 லிட்டர் அளவு) பெட்ரோலின் விலையே ரூ. 3 தான். ஒரு லிட்டர் பெட்ரோல் 12 அணா (சுமார் 75 காசு). 1949-ம் ஆண்டுகளில் ஒரு காலன் பெட்ரோல் ரூ. 1.50-க்குகூட கிடைத்தது. தங்கம் ஒரு சவரன் ரூ.13.50 தான். அப்போது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ. 3.50 ஆக இருந்தது. பொதுவாக சட்டத்திற்கு எல்லோரும் பயந்தனர். தற்போது அந்நிலைமை இல்லை.

குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அடுத்தபடியாக ராணுவ தலைமை காமாண்டரின் இல்லம்தான் பெரியதாக இருந்தது. அப்போது, ஐ.சி.எஸ். அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் இருந்தது.

மத்திய அமைச்சர்கள் கொள்கை முடிவுகளை மட்டுமே வகுத்துத் தர முடியும். தவிர, ஊழியர் பணிமாற்றம் விஷயத்தில் அவர்கள் தலையிட முடியாது. இவற்றையெல்லாம் அந்தந்த துறைச் செயலர்களே பார்த்துக் கொண்டனர். மக்களுக்கான வசதியைப் பொருத்தமட்டில் அன்றைய தில்லியைவிட 100 மடங்கு வசதிகள் இன்றைக்குக் கிடைக்கின்றன. ஆனால், மக்கள்தான் இன்னும் அரசர் காலத்து மனப்பான்மையில் இருக்கின்றனர்.

பொது நலனுக்காக அனைவரும் சேர்ந்து செயல்படுத்த வேண்டிய விஷயங்களைக்கூட பிரதமரோ, ஆட்சியின் அதிகாரத் தலைமையில் இருக்கும் ஒருவர் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். வெளிநாடுகளில் அது போன்ற நிலை இல்லை.

குடும்ப உறவுகள்

இன்றைய தலைமுறையினரில் பலரும் சினிமா, திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வது என மேலைநாட்டுக் கலாசார வாழ்க்கையை நாடும் போக்கு காணப்படுகிறது.

குடும்ப முறையே சிதைந்து வருகிறது. வயதாகும் பெற்றோர்களைப் புறக்கணிக்கும்

மனப்பான்மையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க வாழ்க்கை முறை இந்திய வாழ்க்கை முறையில் ஆதிக்கம் செலுத்துவதாக உணர்கிறேன்.

அமெரிக்காவில் வயதானவர்களை தேவையற்றவர்களாகப் பார்க்கின்றனர். அங்கே வாழும் இந்தியர்களிடம்கூட அத்தகைய மனப்போக்கு இப்போது வந்துவிட்டது. நகர்ப்புறங்களில் உணவுப் பழக்க வழக்கங்களும்கூட பிஸô, பர்கர், கோக், பெப்சி, சிப்ஸ் என்ற வகையில் அமெரிக்க முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது நல்லதல்ல.

பற்பசை விற்பனைகூட ஒரு வியாபார உத்திதான் என்பேன். அதைச் சொல்வதற்குக்  காரணம் உண்டு. கடந்த 50 ஆண்டுகளாக நான் வெறும் உப்பை மட்டுமே பல் துலக்கப் பயன்படுத்தி வருகிறேன். எனது பற்கள் ஆரோக்கியமாகத்தானே உள்ளன.

87 வயது ஆகிவிட்டாலும் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் ஏதுமில்லை. உணவுக் கட்டுப்பாடுதான் இதற்குக் காரணம். அதே போன்று, மனத்தை மகிழ்ச்சியாக வைப்பதற்கு இசை உதவுகிறது. இதுதான் மற்ற கலைகளைவிட உயர்ந்தது.

அன்றைய காலக்கட்டத்தில் அண்டை வீட்டாரிடம் உறவு பாராட்டினோம். அதுவும் நகர்ப்புறங்களில் குறைந்துவிட்டது. பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். எனினும், தில்லிதான் உலகிலேயே சிறந்த பொழுதுபோக்கு நகரம் என்பேன். ஆமாம், மற்ற நகரங்களில் காசு கொடுத்து பொழுதுபோக்கும் நிலை உண்டு.

நாட்டின் தலைநகராக இருப்பதால் தில்லியில் பல்வேறு கலாசார, இசை, நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாடக, நாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. கட்டணம் செலுத்தாமல் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. வெளிநாடுகளில் அதுபோன்று இல்லை. நான் விரும்பும் நல்ல நகரமாக தில்லிதான் உள்ளது என்று மனம் பூரிக்கிறார் ஜெயச்சந்திரன்

ரத்னம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.