"தந்தைதான் என் குரு'
""நம் நாட்டில் இசைக் கச்சேரிகள் நிறைய நடக்கின்றன. அதனால், அதன் மதிப்பு தெரிவதில்லை. ஆனால், வெளிநாடுகளில் இசைக்கச்சேரிக்கு வாய்ப்பு குறைவு என்பதால் அதன் மகத்துவம் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது'' என்ற


""நம் நாட்டில் இசைக் கச்சேரிகள் நிறைய நடக்கின்றன. அதனால், அதன் மதிப்பு தெரிவதில்லை. ஆனால், வெளிநாடுகளில் இசைக்கச்சேரிக்கு வாய்ப்பு குறைவு என்பதால் அதன் மகத்துவம் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது'' என்று கணீரென்று கருத்தைச் சொல்கிறார் ராம்பிரசாத்.
பேச்சில் உள்ள அதே கணீர் பாட்டைப் பாடுவதிலும் இருக்கிறது. இதுதான் ராம்பிரசாத்.
அது சரி, யார் இந்த ராம்பிரசாத்?
கர்நாடக இசை உலகில் மிருதங்கம் என்ற வார்த்தையைக் கூறிய உடனே இசைப் பிரியர்களின் நினைவுக்கு வருபவர் பாலக்காடு டி.எஸ். மணி ஐயர். அவரது மகன் வழிப் பேரன் இன்று கர்நாடக இசையுலகின் நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
வாய்ப்பாட்டு தெரிந்திருந்தாலும் மிருதங்கத்தில் கைதேர்ந்து, மிருதங்க மேதையாகத் திகழ்ந்தவர் பாலக்காடு மணி ஐயர்.
மணி ஐயரின் நூற்றாண்டு
மறைந்து 30 ஆண்டுகள் கடந்தாலும்கூட இன்றைக்கும் இசைக் கலைஞர்கள் பலருக்கும் மானசீக வழிகாட்டியாக இருந்து வருபவர் அவர். அவரது நூற்றாண்டு விழா தற்போது தொடங்கியிருக்கிறது. அவரது வாரிசாக விளங்கும் ராம்பிரசாத், நூற்றுக்கணக்கான மேடைகளில் கச்சேரி நிகழ்த்தியவர்.
சில தினங்களுக்கு முன் தில்லி ராமகிருஷ்ணபுரம் செüத் இந்தியன் சொûஸட்டியின் சார்பில் நடைபெற்ற ஸ்ரீ தியாகராஜர் இசை விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் நமக்கு அளித்த பேட்டி:
எங்களது பூர்விகம் கேரள மாநிலம் பாலக்காடு. எனது தந்தை டி.ஆர். ராஜாராம், தாத்தா டி.எஸ். மணி ஐயரின் கடைசி மகன். நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளிக்குப் பிறகு விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ. (பொருளாதாரம்) படித்தேன். பின்னர், எம்.பி.ஏ. முடித்துவிட்டு அமெரிக்கா, ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். இரண்டரை ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். தற்போது ஜி.இ. ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன்.
இசைக் குடும்பம்
இசைக் குடும்பத்தில் பிறந்த எனக்கு, தொடக்கம் முதல் குருவாக இருந்து வருபவர் தந்தை ராஜாராம்தான்.
இசைக் கலைஞர்கள் தட்சிணாமூர்த்தி பிள்ளை, ஆலத்தூர் சகோதரர்கள் போன்ற பல்வேறு ஜாம்பவான்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அருமை பெருமைகளையும் எனக்கு உணரச் செய்தவர் என் தந்தை. அவர்களிடம் உள்ள மென்மையான சுபாவத்தையும் எடுத்துக் கூறினார். பெரியப்பா டி.ஆர். ராஜாமணியும், லய விஷயம் தொடர்பான பல நுணுக்கங்களைச் எனக்குத் சொல்லிக் கொடுத்தவர்.
இசைத் துறையில் 60 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த எனது தாத்தா மணி ஐயரின் பணிகளை எனது அப்பாவும், பெரியப்பாவும் கூறுவதைக் கேட்கும்போது என்னைப் போன்றவர்கள் ஒன்றுமே இல்லை.
எட்டு வயதில் முதல் கச்சேரி
நான்கு வயதிலிருந்து பாடத் தொடங்கினேன். 8 வயது இருக்கும்போது எனது முதல் கச்சேரி நடைபெற்றது. எனது முதல் கச்சேரி சென்னையில் உள்ள சாஸ்திரீய சங்கீத இளையோர் சங்கத்தில்தான் (ஒய்.ஏ.சி.எம்.) நடைபெற்றது.
எனது அத்தை மகள் நித்யஸ்ரீ மகாதேவன், உன்னி கிருஷ்ணன், சஞ்சய் என முன்னணிக் கலைஞர்கள் பலரும் கச்சேரி செய்த இடம் அது. தற்போதைய பிரசித்தி பெற்ற கீர்த்தனைகள், இன்றைய துக்கடா பாடல்களைப் பாடுவதில் எனக்கு ஈர்ப்பு இல்லை.
நான் பாடும் கிருதிகள் யாவும் இசை மேதைகள் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், ஆலத்தூர் சகோதரர்கள், ஜி.என்.பி., மதுரை மணி ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்றவர்கள் பாடிய கீர்த்தனைகள்தான். எனது தாத்தாவின் பாணியைப் பின்பற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
கச்சேரியின் போது நிரவல் பாடுவதில் எனக்கு ஆர்வம் அதிகம்.. அதில் லயம், அட்சர சுத்தம், ராக பாவம் உள்ளன.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கச்சேரி செய்திருக்கிறேன். நம் நாட்டில் உள்ளது போல் அமெரிக்காவில் அடிக்கடி கச்சேரி நடைபெறும் வாய்ப்பு இல்லை.
கச்சேரிகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல வெகுநேரம் பயணிக்க வேண்டும். அதனால், அங்கு கச்சேரிக்கு வருவோர் குழந்தைகளையும் உடன் அழைத்து வந்து கச்சேரி முடியும் வரை இருந்து ரசித்துக் கேட்டுச் செல்கின்றனர். கச்சேரி முடிந்தபிறகு குழந்தைகளின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
"தண்ணீர் அதிகம் கிடைப்பதால் அதன் விலை குறைவாக இருக்கிறது. வைரம் அரிதாக கிடைப்பதால் அதன் விலை அதிகம்' என்று பொருளாதாரத்தில் கூறுவதுபோல், நம் நாட்டில் சங்கீதக் கச்சேரிகள் அதிகம் நடைபெறுவதால் அதன் மதிப்பு தெரிவதில்லை. வெளிநாடுகளில் அதற்கான வாய்ப்புக் குறைவு என்பதால் அதன் மகத்துவம் அவர்களுக்கு அதிகமாகவே புரிந்திருக்கிறது.
படிப்புக்கு, கலை ஆர்வம் தடையில்லை
கலையில் ஆர்வம் காட்டுவதால் படிப்புத் தடைபடும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், அப்படி எண்ண வேண்டிய அவசியமில்லை. நான் படிப்பில் பல தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன். அதற்கு சங்கீதமும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.
எனது தந்தை ராஜாராம், தாயார் சந்திரா, அக்காள் சுகன்யா, மனைவி சங்கீதா ஆகியோரும் எனது வளர்ச்சிக்கு உதவுகிறார்கள். கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடும் இன்றைய தலைமுறையினர் பாட்டுப் பாடுவதுடன் தங்களது பணி முடிந்துவிடுகிறது என்று நினைக்காமல் வயலின், மிருதங்கம் போன்ற பக்கவாத்தியங்களின் வாசிப்பிலும் ஈடுபாடு காட்ட வேண்டும்.
பக்க வாத்திய கலைஞர்களை புரிந்து கொள்ள வேண்டும்
வயலின், மிருதங்கம் வாசிக்கும் கலைஞர்களும் பாடுவோரைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் கச்சேரியில் அனுசரணை ஏற்படும். கச்சேரி இயற்கையாகவும் இருக்கும்.
எனது தாத்தாவை நான் பார்த்ததில்லை. அவரது மிருதங்க வாசிப்புக் கச்சேரியை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கமும், வருத்தமும் எனக்கு இருக்கிறது. மணி ஐயரின் பேரன் என்று என்னை ரசிகர்கள் கூறும்போது பெருமையாக இருக்கிறது.
அவரது நூற்றாண்டு விழாவையொட்டி ஜனவரி 28-ம் தேதி சென்னை மியூசிக் அகாதெமியில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தாத்தா மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த போதிலும் அவரது பெருமையும், இசைப் பணியும் பேசப்படுவதைப் பார்க்கும்போது பிரமிப்பு மேலிடுகிறது என்று மனம் நெகிழ்கிறார் ராம்பிரசாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...