"போராட்ட உணர்வுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்'
பாட்டாளி வர்க்கம் மீதும், உழைக்கும் தொழிலாளர் மீதும் கரிசனத்துடன்


பாட்டாளி வர்க்கம் மீதும், உழைக்கும் தொழிலாளர் மீதும் கரிசனத்துடன், அவர்களைப் பற்றிய தொடர் சிந்தனையுடன் எழுதுகோல் பிடிக்கும் படைப்பாளிகள் குறைந்துவரும் காலம் இது.
இந்நிலையில், உழைக்கும் வர்க்கப் போராட்டத்தையும், அவர்களது முன்னேற்றத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ள படைப்பாளிகள் உள்ளனர். அவர்களில் ஒருவராக மிளிர்கிறார், கு.சி.பா. என்று இலக்கிய வட்டத்திலும், தொழிலாளர்கள் மத்தியிலும் பாசத்துடன் அழைக்கப்படும் நாமக்கல் கு. சின்னப்ப பாரதி.
நாமக்கல் மாவட்டம், பொன்னேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுவயதிலேயே முற்போக்குச் சிந்தனைகளுடன் மிளிர்ந்தவர். 7-ம் வகுப்பு படிக்கும்போதே கவிதை எழுத் தொடங்கியவர். பாரதியின் கவிதைகளில் ஏற்பட்ட தாக்கத்தால் சின்னப்பன் என்று பெற்றோர் இட்ட பெயரை சின்னப்ப பாரதி என மாற்றிக் கொண்டவர்.
"அடித்தட்டு மக்கள், பாட்டாளி மக்கள் ஆகியோரின் பிரச்னைகளை வெளி உலகத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டும் கண்ணாடியாக நாவல்கள் இருக்க வேண்டும்' என்பதில் உறுதி கொண்டவராக, தனது படைப்புகளை எழுதுகிறவர்.
சிறந்த படைப்பாளிகளை பாராட்டும் வகையில் இவரது பெயரிலான "கு. சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை' சிறந்த எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் விருதும், ரொக்கப் பரிசும் வழங்கி வருகிறது.
உழைக்கும் வர்க்கப் பிரச்னைகளை மையமாகக் கொண்டு நாவல்கள் படைத்த படைப்பாளியான இவர், சிறந்த தொழிற்சங்கவாதியுமாவார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புது தில்லி வந்த அவர் "தினமணி'க்கு அளித்த பேட்டி:
தினமணி: உங்கள் நாவல்கள் பற்றிச் சொல்லுங்களேன்?
சின்னப்ப பாரதி: நான் எழுதிய முதல் நாவல் "தாகம்', 1975-ம் ஆண்டில் வெளிவந்தது. இந்த நாவலை எழுத 8 ஆண்டுகள் தேவைப்பட்டது. அது, நிலபிரபுத்துவ அடிமைத் தொழிலாளர்கள் பற்றிய புரட்சிகரமான நாவல். விவசாய சங்கத்தின் பணி மூலம் கிடைத்த அனுபவம்தான் "தாகம்' நாவலாக மலர்ந்தது.
அதன் பிறகு 1985-ல் "சங்கம்' நாவல் வெளிவந்தது. மலைவாழ் மக்களின் பிரச்னைகளை மையப்படுத்தியது. கந்துவட்டிக்காரர்கள், வனத் துறை அலுவலர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றியது.
சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரிடையே உள்ள பிரச்னையையும், அவர்களது போராட்ட அனுபவத்தையும் மையமாக வைத்து எழுதிய "சர்க்கரை' நாவல், 1991-ல் வெளிவந்தது.
"பவளாயி' நாவல் பெண்ணியப் பிரச்னைகளை மையக் கருவாகக் கொண்டது. இது 1991-ல் வெளிவந்தது. இந்த நாவலை லியோ டால்ஸ்டாயின் "அன்னா கரினா' நாவலுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர்.
நவீன முதலாளித்துவம் குறித்து "தலைமுறை மாற்றம்' எனும் நாவலில் எழுதினேன். இது 2001-ல் வந்தது.
2006-ம் ஆண்டில் "சுரங்கம்' நாவல் வெளிவந்தது. மேற்கு வங்கத்தின் அசன்சால், ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் போன்ற இடங்களில் உள்ள நிலக்கரிச் சுரங்களுக்கு நேரில் சென்று சுரங்கத் தொழிலாளர்களுடன் பழகி, அவர்களின் துன்பத்தை உணர்ந்து, எழுதப்பட்டது "சுரங்கம்'.
கடைசியாக வந்த நாவல் "பாலைநில ரோஜா'. இது ஒரு உயர் அதிகாரியின் நேர்மையைப் பற்றிய கதை. எனது நாவல்கள் அனைத்தும் என்னுடைய, பிறருடைய அனுபவங்களை நான் பார்த்து, அறிந்து அதன் மூலம் எழுதப்பட்டவை.
இது தவிர, கவிதைகள், சிறுகதைகள், குட்டிக் கதைகள் ஆகியவை ஏராளமாக எழுதியுள்ளேன்.
தினமணி: உங்களுடைய நாவல்களின் மொழிபெயர்ப்பு குறித்து...?
சின்னப்ப பாரதி: ஆங்கிலம், இந்தி, வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும் பிரெஞ்சு, சிங்களம் போன்ற பிற நாட்டு மொழிகளிலும் எனது நாவல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பவளாயி நாவல் உஸ்பெகிஸ்தான் நாட்டு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
தினமணி: சிறந்த எழுத்தாளர்களையும், படைப்பாளிகளையும் ஊக்குவிப்பதற்காக உங்கள் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கட்டளையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்..?
சின்னப்ப பாரதி: இந்திய மொழிகள் பலவற்றில் எனது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால், எனது இலக்கியப் படைப்புகளை பற்றிய அகில இந்திய அளவிலான கருத்தரங்கம் 2008-ம் ஆண்டு ஏப்ரலில் நடத்தப்பட்டது. அதில், ஆய்வாளர்கள், விமர்சகர்கள், படைப்பாளிகள் கலந்துகொண்டனர். கருத்தரங்க மலரும் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டு மலரின் மூலம் கிடைத்த தொகையில் ஒரு பகுதியை எனக்குப் பண முடிப்பாக விழாக் குழுவினர் அளித்தனர். அதை நான் ஏற்றுக்கொள்ள விரும்பாததால் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி ஊக்குவிக்கும் வகையில் "கு. சின்னப்பபாரதி இலக்கிய கருத்தரங்க நினைவு அறக்கட்டளை'யை ஏற்படுத்தினர்.
அதன் மூலம் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இளம் எழுத்தாளர்களை அதிக அளவில் விருது கொடுத்து ஊக்குவிக்க நினைக்கிறோம். இதற்குப் பொருளுதவியும் தேவைப்படுகிறது.
திருவாடுதுறை ஆதீனம் எங்களுக்கு உதவிடுவதாக கூறியுள்ளார்கள். சைவத் திருமடங்கள் தமிழை வளர்க்க இது போன்று முன்வருவது மிகவும் பெருமைக்குரியது.
தினமணி: இன்றைய சமூகத்திற்கான படைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
சின்னப்ப பாரதி: போராட்ட உணர்வுகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய நாவல்கள், படைப்புகள்தான் இன்றைக்கு முக்கியத் தேவையாக இருக்கின்றன.
பரவலாக கணினி வந்தாகிவிட்டது. 100 பேர் செய்ய வேண்டிய வேலையை இரு நபர்கள் மூலம் செய்யும் சூழல் உள்ளது. அதற்காக, கணினி தேவையில்லை என்று நான் சொல்லவில்லை.
ஆனால், அந்த வேலையைச் செய்யும் தொழிலாளியின் பணிப் பாதுகாப்புக்கும், அன்னியச் சுரண்டலுக்கும் எதிராக குரல் கொடுக்க முடியாத நிலை உள்ளது.
வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்களுக்கு அனுமதி என்பது தொழிலாளர் வர்க்கத்திற்கும், விவசாயத்திற்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாகவே அமையும்.
பி.டி. விதைகளால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். பி.டி. தக்காளி குறித்த பாதிப்பை சிறுகதையாக எழுதியுள்ளேன்.
சமூக அவலங்களை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் படைப்புகள் அதிக அளவில் வெளிவர வேண்டும்.
தினமணி: உங்கள் படைப்புகளைப் பற்றி நீங்கள் கருதுவது என்ன?
சின்னப்ப பாரதி: நான் கருதுவது என்ன என்பதைவிட. பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
உழைக்கும் வர்க்கத்தைப் பற்றி தீவிரமான நாவல் எழுதக்கூடிய எழுத்தாளராக நான் இருப்பதாக பல்வேறு மொழிகளின் எழுத்தாளர்கள் கூறுவதைக் கேள்வியுறும்போது மனத்துக்கு மிகவும் மகிழ்ச்சி, அவ்வளவே.
தினமணி: தில்லி பற்றிய உங்களது அனுபவம்?
கு.சின்னப்ப பாரதி: தில்லிக்கு மூன்று முறை வந்துள்ளேன். "இந்திய இலக்கியமும், அழகியலும்' என்ற பெயரில் ஆங்கில மாத இதழ் நடத்தினேன்.
அதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தேன். அப்போது, தில்லியில் மூன்று நாள் தங்கி இருந்தேன்.
தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கக் கோரி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் தில்லியில் 250 பேர் ஆர்ப்பாட்டம் செய்தோம். அப்போது, வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அதன் பிறகு, இந்த ஆண்டு ஏப்ரலில் ஹிந்தி மொழிக் கருத்தரங்கிற்கு வந்தேன்.
தினமணி: உங்களைப் போன்றோர் நாவல்கள் மூலம் மக்களிடம் அன்றைக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு இன்றைக்கும் தொடர்வதாக உணர்கிறீர்களா?
சின்னப்ப பாரதி: இல்லை. அத்தகைய நாவல்களை நிறைய பேர் எழுத வேண்டும். அதற்கான எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
மு. வரதராசனார், அகிலன், நா. பார்த்தசாரதி போன்றோர் எல்லாம் அன்றைக்கு மனிதநேய எழுத்தாளர்களாக இருந்தார்கள்.
என்னைப் போன்று புரட்சிகரமாக எழுதினாலும் அவர்களது எழுத்து மனிதநேயத்தைத் தூண்டுவதாக அமைந்திருந்தது. இன்றைக்கு அது இல்லை. வணிக நோக்கில் சென்றுகொண்டிருக்கிறது. அது மாற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...