தில்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அது. உள்ளே நுழைந்தால் ஏதோ ஷாப்பிங் மாலில் இருப்பது போன்ற உணர்வு. பரபரப்பு ஏதுமின்றிச் செல்லும் மக்கள், சுவையான, தரமான உணவு வளாகங்கள் என கார்ப்பரேட் உலகத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது.
அந்த மருத்துவமனைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக "பத்மஸ்ரீ' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அந்த மருத்துவ நிபுணர். ஆனால், அதைப் பற்றிய சிறிய சலனத்தைக் கூட வெளிப்படுத்தாமல், பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். அவர் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட தில்லி மருத்துவ நிபுணர் டாக்டர் கணேஷ் கே. மணி.
இந்திரப்ரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் மூத்த அறுவைச் சிகிச்சை நிபுணரான கணேஷ் கே. மணி, தேசிய சிட்டிஸன் விருது (1992), நேஷனல் சிறப்பு விருது (1996), நொய்டா- அவ்வைத் தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது என பல விருதுகளுக்குச்
சொந்தக்காரர்.
தற்போது, "பத்மஸ்ரீ' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், "தினமணி' இதழுக்காக அளித்த பேட்டி:
தினமணி: மருத்துவத் தொழிலில் இதய மருத்துவ சிகிச்சைப் பிரிவைத் தேர்ந்தெடுக்க காரணம் ஏதும் உண்டா?
டாக்டர் கணேஷ் கே. மணி: எனது தந்தை இதய நோய் பாதிப்பால் இறந்தது ஒரு காரணம். தவிர, 40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எம்.பி.எஸ்.எஸ். மருத்துவர்கள் அதிகமானோர் இருந்தனர். இதய சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் குறைவுதான். அதற்குக் காரணம், இந்தச் சிகிச்சையின்போது ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததுதான்.
இச்சூழலில் ஒரு சவாலாக இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். இதற்கு வேலூரைச் சேர்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கோபிநாத் போன்ற சிலர் ஊக்கமும் அளித்தனர்.
வேலூரில் மருத்துவப் படிப்புக்குப் பிறகு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் 10 ஆண்டுகள் பணியாற்றினேன். அதன் பிறகு 1989-இல் தில்லி வந்தேன்.
நீங்கள் இதுவரை எத்தனை இதய அறுவைச் சிகிச்சைகள் செய்திருக்கிறீர்கள்?
18 ஆயிரம் இதய அறுவைச் சிகிச்சைகள் வரை செய்துள்ளேன்.
உங்களது மருத்துவப் பணியில் நீங்கள் பதற்றமான சூழலை எதிர்கொண்ட அனுபவம் இருக்கிறதா?
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பணியாற்றிய ஸ்ரீதரனுக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
அவர் கொல்கத்தா செல்வதற்காக தில்லி விமான நிலையத்திற்குச் சென்றிருந்த சமயம், திடீரென விமானத்தில் மயங்கினார். விமான நிலையத்தில் இருந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
தாற்காலிக "பேஸ்மேக்கர்' கருவியை இதயத்தில் பொருத்தி, அவசரமாக அறுவைச் சிகிச்சை செய்தோம்.
எங்கள் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் என முக்கியப் பிரமுகர்கள் பலரிடமிருந்தும் ஸ்ரீதரனின் உடல்நிலை குறித்து தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. அது மிகவும் பதற்றமான ஆபரேஷனாக இருந்தாலும், வெற்றிகரமாக முடிந்தது. அவரிடம் இப்போதும் நலம் விசாரிப்பது உண்டு.
இந்தியாவில் இதய நோய் பாதிப்பு, அதைத் தவிர்ப்பதற்கான உணவு முறைகள் குறித்துக் கூறுங்களேன்?
பொதுவாக, மூன்றுவிதமான இதய நோய்கள் ஏற்படுகின்றன. ஒன்று, பிறவியிலேயே வரக் கூடிய இதய நோய். மற்றொன்று, கீல்வாதக் காய்ச்சலால் ஏற்படக் கூடிய இதய நோய். மூன்றாவது, முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படக் கூடிய கரோனரி இதய நோய் ஆகியவை.
புகை பிடித்தல், எண்ணெய், வெண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுப் பொருள்களை அதிகமாகப் பயன்படுத்துவது போன்றவை கரோனரி இதய நோய் ஏற்படக் காரணமாகிறது. முறையான உணவுப் பழக்க வழக்கத்தால் இந்நோயைத் தவிர்க்க முடியும்.
புகைப்பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். அதே போன்று, நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வதும் அவசியம்.
உலக சுகாதார நிறுவனத் தகவலின்படி, இந்தியாவில் இதய நோய் தாக்கம் அதிகம் வருவதற்கான சூழல் உள்ளது. குறிப்பாக இளம் வயதில் இந்நோய் பாதிப்பு அதிகம் வர வாய்ப்புள்ளது.
உணவில் சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை அதிகம் சேர்ப்பதும் இதற்கு வழியேற்படுத்தும்.
ஜப்பானில் இதய நோய் பாதிப்பு குறைவாக இருப்பதற்கு அங்குள்ள மக்கள் இனிப்பு, எண்ணெய்ப் பொருள்களைக் குறைவாகப் பயன்படுத்துவதுதான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
அசைவ உணவு உட்கொள்ள விரும்புவர்கள் மீன் சாப்பிடலாம். சிவப்பு நிற திராட்சை ஒயினும், மீனும் இதய நோய் வராமல் தடுப்பதாக ஆய்வு கூறுகிறது.
அடிப்படையில் இதய நோய் வராமல் தடுக்க புகைப்பழக்கத்தை கைவிடுவது, இனிப்புகள் அதிகம் உண்பதைத் தவிர்ப்பது, உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
"பத்மஸ்ரீ' விருது கிடைத்துள்ளது பற்றி...?
இதை எனது பணிக்கான அங்கீகாரமாகக் கருதுகிறேன். இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக 35 ஆண்டுகள் பணியை நிறைவு செய்துள்ளேன். இந்தப் பணிக்காக எனது குழந்தைகளை, குடும்பத்தை பல சமயங்களில் கவனிக்க இயலாமல் போனதுண்டு. தற்போது விருது கிடைத்துள்ளது ஒரு ஊக்குவிப்பாக உள்ளது.
இந்த விருது கிடைப்பதில் இதய மயக்க மருந்து சிகிச்சை நிபுணரான எனது மனைவி மஞ்சு மணியின் பங்களிப்பும் முக்கியம். காரணம், இதய அறுவைச் சிகிச்சையில் மயக்க மருத்துவமும் முக்கியம்.
மருத்துவப் பணி தவிர சமூகப் பணியில் உள்ள உங்களது ஈடுபாடு பற்றி...?
எனது பூர்விகம் தமிழகத்தின் அம்பாசமுத்திரம், பத்தமடை. நான் சிறுவனாக இருக்கும்போதே எனது பெற்றோர் தில்லிக்கு வந்துவிட்டனர்.
தற்போதைய தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளி, அப்போது "மதராஸிப் பள்ளி'! அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்தேன்.
அந்தப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் என்ற முறையில் நானும், சில நண்பர்களும் உதவி செய்து வருகிறோம். அந்தப் பள்ளியின் டிரஸ்ட் தலைவராகவும் தற்போது உள்ளேன்.
ரோட்டரி அமைப்பில் உறுப்பினராக இருப்பதன் மூலம் அதன் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு மருத்துவச் சிகிச்சைக்கு உதவும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்.
தவிர, "ஹார்ட்' எனும் டிரஸ்டை ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளிகளில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.