புலி, சிறுத்தைக்கு ஏர்-கூலர்; குரங்குக்கு குளுகோஸ்: தில்லி உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் வன விலங்குகளைக் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் உணவு, உடைகள், வாழிடங்களில்


தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் வன விலங்குகளைக் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் உணவு, உடைகள், வாழிடங்களில் தேவையான நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
தலைநகரில் புராண கிலா கோட்டையை ஒட்டி அமைந்துள்ள இந்தப் பூங்காவில் 120-க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் உள்பட சுமார் 1,600 வன உயிரினங்கள் உள்ளன. இவற்றைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பூங்காவில் உள்ள உயிரினங்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, "தினமணி' செய்தியாளரிடம் பூங்காவின் வன விலங்குகளுக்கான மூத்த மருத்துவர் ந. பன்னீர் செல்வம் புதன்கிழமை கூறியதாவது:
வெப்பச் சலனத்தால் விலங்குகளும், பறவைகளும் பலவித நோய்களுக்கு உள்ளாகும். சில நேரங்களில் திடீரென இறந்து விடுவதும் உண்டு.
தற்போது, வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக சிங்கம், புலி, கரடி, குரங்கு, மனிதக் குரங்கு போன்றவற்றின் வாழிடங்களில் மின்விசிறிகள் வைக்கப்பட்டுள்ளன.
குளிர்காலத்தின் போது, விலங்குகளின் வாழிடங்களில் தார்ப்பாய், கோணிப்பைகள் போடப்படும். ஜன்னல்களில் கண்ணாடியும் பொருத்தப்படும். கோடைகாலம் என்பதால், காற்றோட்டத்துக்காக அவை அகற்ஜ்றப்பட்டுள்ளன.
சிங்கம், புலி, கரடி ஆகியவற்றின் வாழிடங்களில் ஏர்-கூலர்கள் வைக்கப்பட்டுள்ளன. பறவைக்கூடங்களில் வெப்பத்தைக் குறைக்க ஏரோலைட்ஸ் ஷீட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, பறவைகள், மான்கள் ஆகியவற்றின் வாழிடங்களில், காலை நேரத்தில் நீர்த் தெளிப்பான்கள் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
மான்கள், காண்டா மிருகம் போன்றவை தண்ணீரில் அமர்ந்து வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்கு வசதியாக அதன் வாழிடங்களில் நீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
யானைகளுக்கு காலையிலும், மாலையிலும் உடலில் நீர் தெளித்து குளிர்விக்கப்படுகின்றன.
புலி, சிங்கத்துக்கு உணவு குறைப்பு: குளிர்காலத்தில் சிங்கம், புலி, சிறுத்தை ஆகியவை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இறைச்சி உள்கொள்ளும். அதற்கேற்ப அவற்றுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு வந்த உணவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
முதலைக்கு அதிக உணவு: குளிர்காலத்தில் முதலைகள் அவ்வளவாக உணவு உள்கொள்ளாது என்பதால் மீன் உணவு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீன் உணவு வழங்கப்படுகிறது.
மலைப்பாம்புகள் குளிர்காலத்தில் மண்ணுக்குள் புதைந்து கொள்ளும். அதனால், உணவு சாப்பிடாது. தற்போது அவற்றுக்கு உணவு வழங்கப்படுகிறது.
உணவு முறையில் மாற்றம்: குளிர்காலத்தில் கரடி, குரங்கு, மனிதக் குரங்கு ஆகியவற்றுக்கு ரொட்டி, பால் வழங்கப்படும்.
தற்போது, அதற்கு பதிலாக "கீர்' எனும் சிறிது சீனி, பால், அரிசி சாதம் சேர்த்த உணவு வழங்கப்படுகிறது. இவற்றில் அதிகமான கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் வெப்பம் தணியும்.
விலங்கு, பறவைகளுக்கு வெள்ளரிக்காய், தர்பூசணி, பப்பாளி போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளும் வழங்கப்படுகின்றன.
பறவைகள், குரங்குகள் ஆகியவை சுலபமாக வெப்பச் சலனத்திற்கு ஆளாகும். எனவே, அவற்றுக்கு "எலெக்ட்ரால் பவுடர்' மற்றும் குளுகோஸ் கலந்த நீர், வைட்டமின்-"சி' சத்துணவும் வழங்கப்படுகிறது.
பார்வையாளர்களுக்கு... பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்காக 5 இடங்களில் ஐஸ்கிரீம், குளிர்பான விற்பனையகங்கள் உள்ளன. ஆறு இடங்களில் குளிர்ந்த குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேட்டரி கார் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பன்னீர்செல்வம் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...