கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மத்திய அரசு பரமபதம் விளையாடுகிறது: உயர் நீதிமன்றம் அதிருப்தி: தில்லியில் கூடுதல் காவலர் நியமன விவகாரம்

பாதுகாப்பற்ற சூழலில் தலைநகர் இருக்கும் நிலையில், தில்லி காவல் துறைக்கு அனுமதிக்கப்பட்ட போலீஸார் பணியிடங்களில் பாதி கூட 

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:18 pm

DIN

பாதுகாப்பற்ற சூழலில் தலைநகர் இருக்கும் நிலையில், தில்லி காவல் துறைக்கு அனுமதிக்கப்பட்ட போலீஸார் பணியிடங்களில் பாதி கூட  நிரப்பப்படவில்லை என தில்லி உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பரமபத விளையாட்டில் ஈடுபடுவதாகவும் நீதிமன்றம் சாடியுள்ளது.
2012,  டிசம்பர் 16-ஆம் தேதி தில்லியில் ஓடும் பேருந்தில் துணைமருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டார்.  இதையடுத்து,  அவர் சிகிச்சை  பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக காவல் துறை, அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது தில்லி காவல் துறை,  தில்லி அரசு,  மத்திய அரசு ஆகியவற்றுக்கு போலீஸார் பணியிடங்களை அதிகரிப்பது,  தடயவியல் ஆய்வகத்தின் தரத்தை மேம்படுத்துவது,  மாதிரிகளின் பரிசோதனையை விரைவுபடுத்துவது,  பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பாக   அவ்வப்போது பல உத்தரவுகளை  உயர் நீதிமன்றம் பிறப்பித்து வருகிறது.
இந்நிலையில், இந்தப் பொது நல வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.  அப்போது,   உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட்,  சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு,   "4,227 போலீஸாரை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்ட  நிலையில், பாதி எண்ணிக்கையில் கூட போலீஸாரை பணி நியமனம் செய்யப்படவில்லை.  
மேலும்,  உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகும்,   தில்லி காவல் துறைக்கு 14 ஆயிரம் கூடுதல் போலீஸ் பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் 2015, ஜூலையில் இருந்து மத்திய நிதி அமைச்சகத்திடம் அதற்கான கோப்பு நிலுவையில் இருந்து வருவது குறித்தும் உயர் நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:  
இது பரமபத விளையாட்டு போல் உள்ளது. நாங்கள் ஒரு வட்டத்தை சுற்றிசுற்றி வந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்னையில் மக்கள் சிக்கித் தவிப்பதை நாங்கள் விரும்பவில்லை.  
தில்லி ஒரு பாதுகாப்பில்லாத நகரம்.  மைனர் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் சம்பவங்களை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  அண்மையில் கூட 11 மாத பெண் குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது. 14,753 பணியிடங்களுக்கு (பின்னர் 12,528 ஆக திருத்தியமைக்கப்பட்டது) அனுமதி அளிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து பரிசீலிப்பதற்காக நடைமுறைகள் தற்போது அதிகாரவர்க்க புதைகுழியில் சிக்கியுள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது.
இதுபோன்ற பிரச்னைகளை விரைவாக தீர்க்க உரிய தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும்.  அப்போதுதான் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள முடியும். இந்த நடைமுறையை விரைவுபடுத்தும் வகையில் இவ்விஷயத்தில் உள்துறை, நிதித் துறை அமைச்சர்கள் ஏதும் சம்பந்தப்பட வேண்டுமா என்பதை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் வரும் நவம்பர் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம்
தில்லியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், குற்றங்கள் நிகழக்கூடிய பகுதிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயமாக நிறுவப்பட வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட்,  சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை கூறியதாவது:
தில்லியில் உள்ள 192 காவல் நிலையங்கள், குற்றங்கள் நிகழக்கூடிய பகுதிகள் ஆகியவற்றில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயமாக நிறுவப்பட வேண்டும். இதற்காக ஏற்படும் கால அளவு குறித்து தில்லி அரசும், தில்லி போலீஸும் நவம்பர் 16-ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே காவல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை நவீனப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.