டிடிவி தினகரன் கூட்டத்துக்கு அனுமதி மறுத்த விவகாரம்: கரூர் ஆணையருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை

டி.டி.வி. தினகரனின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கரூர்  நகராட்சி ஆணையருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
Updated on
2 min read

டி.டி.வி. தினகரனின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கரூர்  நகராட்சி ஆணையருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்த முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி கடந்த ஜனவரி  19-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் டி.டி.வி. தினகரன் பங்கேற்பதாக இருந்தது.
இந்நிலையில், இந்த விழாவுக்கு கரூர் நகராட்சி ஆணையர் அனுமதி அளிக்கவில்லை என குற்றம்சாட்டியும், திருவள்ளுவர் மைதானத்தில் எம்ஜிஆர் விழா நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வி. செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் கோரிய நாளில் வேறொருவர் அனுமதி பெற்றிருந்ததால் அனுமதி வழங்கப்படவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 27, 28, 29 ஆகிய தினங்களில் ஏதாவது ஒன்றில் திருவள்ளுவர் மைதானத்தில் எம்ஜிஆர்நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரப்பட்டது.  
அப்போது, "மனுதாரர் கோரியுள்ள ஏதாவது ஒரு நாளில் விழா நடத்த ஜனவரி 23-ஆம் தேதிக்குள் நகராட்சி ஆணையர் அனுமதி வழங்க வேண்டும்' என்று  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.
அவமதிப்பு வழக்கு: இந்நிலையில்,  "நீதிமன்ற உத்தரவின்படி,  விழா நடத்த கரூர் நகராட்சி ஆணையர் அனுமதி வழங்கவில்லை. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்'  எனக் கோரி அதே 
நீதிமன்றத்தில் வி. செந்தில் பாலாஜி மீண்டும் மனு தாக்கல் செய்தார். 
இந்த மனு மீது ஜனவரி 24-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது,  கரூர் நகராட்சி ஆணையர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்,  வழக்கு விசாரணையை  ஜனவரி 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
வழக்கு விசாரணைக்குத் தடை:  இதனிடையே, இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி  தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதைத் தொடர்ந்து,  சென்னை  உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இது தொடர்பான வழக்கு விசாரணையை பிப்ரவரி 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,  நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி. ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில்  மூத்த வழக்குரைஞர் கே. வி. விஸ்வநாதன்,  அரசு வழக்குரைஞர் டி.ஆர்.பி. சிவகுமார் ஆகியோர் ஆஜராகி, "அரசியல்வாதி, அரசியல் கட்சி சார்பில் பொது நல மனுவாக  தாக்கல் செய்யப்படும் மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல.  
அரசியல் நோக்கங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவை  சென்னை உயர் நீதிமன்றம் ஏற்று விசாரணை நடத்தியுள்ளது.  எனவே, கரூர் நகராட்சி ஆணையருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெறும் விசாரணைக்குத்  தடை விதிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டனர்.
அந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடைபெறும் விசாரணைக்கு மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்  வரை  தடை விதிக்கப்படுகிறது.  வி. செந்தில் பாலாஜி உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அளிக்க வேண்டும்' எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com