தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசன் தொடங்கும் புதிய அரசியல் கட்சி வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி கூறினார்.
பல ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளராகப் பதவி வகித்த இவர், ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளருக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மிகப்பெரிய அரசியல் கட்சிகளாக உள்ளன. இந்த இரு முதன்மை கட்சிகளுடன் கூட்டணி வைக்காவிட்டால், இதர பிராந்திய கட்சிகளுக்கும் அரசியல் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் நிலை உள்ளது. இதனிடைய, நடிகர் ரஜினிகாந்தும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை உருவாக்கவில்லை. எனவே, கமல்ஹாசனின் அரசியல் கட்சி, தமிழகத்தில் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. திமுக, அதிமுகவைக் காட்டிலும் சிறப்பான கொள்கைகளை வகுக்காவிட்டால், கமல்ஹாசனால் அரசியலில் வெற்றிபெற முடியாது.
ஒருவேளை, அதிமுக நிலை குலைந்துவிட்டால், அதன் இடத்தைப் பிடித்துவிடலாம் என்று கமல்ஹாசன் நினைக்கலாம். ஆனால், அவ்வாறு நடக்காது.
தமிழகத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி அளித்து வரும் ஆதரவு தொடரும். அதே நேரத்தில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் தொடரும் என்றார் அவர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பிறகும், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பதால், கட்சியில் இரு வேறு அதிகார மையங்கள் இருப்பதாக சிலர் குற்றம்சாட்டுவது குறித்து மொய்லிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, இரு தலைவர்களால் எவ்வித மோதல்களும் இல்லை; இருவரும் இணைந்தே பணியாற்றுகிறார்கள் என்று மொய்லி பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.