

புது தில்லி: தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்கள், மற்றும் புதுச்சேரி, தில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இழப்பீட்டை சமாளிக்க 8 வது கடன் தவணையாக ரூ. 6,000 கோடியை நிதித்துறை அமைச்சகம் திங்கள்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகம் ரூ.339.78 கோடியை கடனாகப் பெற்றுள்ளது.
ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பிட்டில் கடும் நெருக்கடியைச் சந்தித்த மாநில அரசுகள் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கான சிறப்புத் திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
இதன்படி, மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரூ.1.10 லட்சம் கோடி வரை சிறப்புக் கடன் பெறும் வகையில், திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்புக் கடனுக்கான அனுமதிகளை கடந்த அக்டோபா் 23 -ஆம் தேதி முதல் தவணை முறையில் அனுமதியை மத்திய நிதியமைச்சகம் வழங்கி வருகிறது. இதில் எட்டாவது தவணையாக திங்கள்கிழமை மத்திய நிதியமைச்சகம் ரூ.6000 கோடியை இந்த வகையில் விடுவித்தது. இதில் 23 மாநிலங்களுக்கு ரூ.5,516.60 கோடியும் புதுச்சேரி, தில்லி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடியையும் கடனாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் ரூ.339.78 கோடியையும் புதுச்சேரி ரூ. 40.40 கோடியையும் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில் பங்கை பெற்றுள்ளது.
இந்த சிறப்புக் கடனில் தமிழகம் இது வரை மொத்தம் ரூ.3191.24 கோடியும், புதுச்சேரி ரூ.323.14 கோடியும் பெற்றுள்ளது.
திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள இந்த (8-வது தவணை) கடன் தொகையை மத்திய அரசு 4.1902 சதவீத வட்டிக்கு பெற்று தந்துள்ளது.
கடனுக்குள் வராத மற்ற மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூா், மிஸோராம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சரக்கு மற்றும் சேவை அமலாக்கத்தினால் வரி வருவாயில் இடைவெளி இல்லையென்பதால் இந்த மாநிலங்கள் இந்த கடனை பெறவில்லை.
இந்த சிறப்பு கடன் கீழ் திட்டத்தின் கீழ் இது வரை ரூ 48,000 கோடி கடன் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இது சராசரியாக 4.6986% வட்டியில் பெறப்பட்டுள்ளது.
இது தவிர ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தால் ஏற்பட்டுள்ள வரி வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்க கூடுதலாக மொத்த மாநில உற்பத்தியின்அடிப்படையில் 0.50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனாக பெற்றுக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மொத்தம் ரூ. 1,06,830 கோடியை, மாநிலங்கள் கூடுதலாகப் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் தமிழகம் இதுவரை ரூ. 9,627 கோடியை (0.50%) கூடுதலாக பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.