சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்

ஈரான் எடுத்திருக்கும் இந்த முடிவு ஆபத்தான முயற்சியாகக்கூட மாறக் கூடும்.

News image
- AP/PTI(
Updated On :12 மார்ச் 2026, 1:14 am

முனைவா் வைகைச்செல்வன்

மத்திய கிழக்கிலேயே மிகப் பெரிய ராணுவப் படைகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். ஈரான் - இராக் போர் தொடங்கிய காலத்தில் இருந்தே போரைத் தாங்கும் திறன் ஈரானுக்கு உருவாகியுள்ளது. ஈரானுடைய உத்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது அதன் உள்நாட்டு ஒற்றுமையைப் பொருத்தே அமையக் கூடும். பாதுகாப்பு மற்றும் அரசியல் உயர்நிலையினர் எந்த அளவுக்கு ஒற்றுமையாக இருக்கிறார்கள் அல்லது அவர்களுக்குள் பிளவு ஏற்படுகிறதா என்பதைப் பொருத்தே இவை அமையும்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக, அண்டை நாடுகளுக்கு பல தொல்லைகளைத் தருவதாக இந்தப் போரை மாற்றிவிட வேண்டும் என்று ஈரான் கருதுகிறது. இதன்மூலம், அண்டை நாடுகள் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கலாம். அவ்வாறு இல்லையெனில், குறைந்தபட்சம் ஒரு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுக்கோ, போரை முடிப்பதற்கோ அமெரிக்காவை அதை நோக்கி நகர்த்திச் செல்வதற்கு அண்டை நாடுகளின் தாக்குதலைப் பயன்படுத்தப் பார்க்கிறது ஈரான். ஆனால், ஈரானின் தற்போதைய திட்டம் வெற்றி பெறுமா என்பதை எளிதில் ஊகிக்க முடியவில்லை. ஒருவேளை ஈரான் எடுத்திருக்கும் இந்த முடிவு ஆபத்தான முயற்சியாகக்கூட மாறக் கூடும்.

அண்டை நாடுகள் ஒன்றிணைந்து ஈரான் மீது எதிர்வினையாற்றத் தொடங்கினால் ஈரான் மேலும் பலவீனமாக்கப்பட்டு விடும். வளைகுடா நாடுகள் ஆரம்பத்தில் ஈரான் மீதான அமெரிக்கா } இஸ்ரேல் போரை எதிர்த்திருந்தாலும், ஈரானின் பதிலடித் தாக்குதலால் இப்போது தங்கள் சொந்த பாதுகாப்புக்கே அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறார்கள். ஆகவே, ஈரானிடம் இருந்து வந்த இத்தகைய சிக்கல்கள், அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை ஆதரிப்பதே சரியான தீர்வு என்று வளைகுடா நாடுகள் முடிவெடுத்திருக்கின்றன.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம், ஹாசன் அபாத் சதுக்கம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதேபோல் இஸ்ரேல் முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரச்னையின் பின்னணி மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் யூதர்களின் நாடாக இஸ்ரேல் உள்ளது. இதைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் இஸ்லாமிய நாடுகளாகும். இதனால், இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே பிரச்னை உள்ளது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், பாலஸ்தீனத்துடன் காஸா பிரச்னை உள்ளது. காஸாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலைக் குறிவைத்து தாக்கினர். இதையடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வகையில் போரைத் தொடங்கியது. ஹமாஸ் முக்கியத் தலைவர்களை இஸ்ரேல் தீர்த்துக் கட்டியது. அதேபோல் இன்னொரு அண்டை நாடான லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலைத் தாக்கினார்கள். அதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து முக்கியத் தலைவர்களைக் கொன்றது. காஸôவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் மற்றும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள், ஈரான் ஆதரவு அமைப்புகள்.

கடந்த ஆண்டு ஈரான், இஸ்ரேல் இடையே 12 நாள்கள் போர் நடைபெற்றது. காஸô மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் போர் விமானங்கள், ஈரானுக்குள் நுழைந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தின. அதற்கு அமெரிக்காவும் துணை புரிந்தது. நட்பு நாடான இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும், ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதற்காக யுரேனியத்தை செறிவூட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது நடந்தால் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஈரானால் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும். இதையடுத்துதான் இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரானைத் தாக்கின. அதைத் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த வேண்டும்; இதற்காக யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும்; நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வந்தார்.

மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சிப் படைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று டிரம்ப் உறுதிபட இருந்தார். இது தொடர்பாக, ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிற வேளையில், மூன்று கட்டங்களாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தியும்கூட, சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா மிரட்டியதோடு, ஈரானைச் சுற்றி போர்க் கப்பல்கள், போர் விமானங்களைக் குவித்தது. இதனால், பதற்றம் தொடர்ந்தது.

"அமெரிக்கா ஈரானைத் தாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை நாங்கள் தாக்கி அழிப்போம். அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலையும் தாக்குவோம்' என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இதனால், கோபத்தின் உச்சத்துக்கே சென்ற இஸ்ரேல், ஈரானை முன்கூட்டியே தாக்கத் தொடங்கிவிட்டது; அமெரிக்காவும் கைகோத்துக் கொண்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஈரானைக் குறிவைத்து தாக்குகிறது. இதனால், பெரிய போர் வெடிக்கிற சூழலை நோக்கி நகர்கிறது இந்த யுத்தம்.

நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து, ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கிற சூழல், ஏராளமான இந்தியத் தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் போன்றவற்றில் பாதிப்பு போன்றவை இந்தப் போரால் வந்த விளைவுகளாகும். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் வலுத்ததால் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 900}க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து, இந்தியாவில் இருந்து மொத்தம் 444 விமானங்கள் ரத்து என்கிற சூழல் உருவாகியிருக்கிறது.

ஈரானில் அசைக்க முடியாத, உச்ச தலைவராக இருந்தவர் அயதுல்லா அலி கமேனி. ஈரான் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்களால் தங்களின் மதத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். இதனால், அவர் படுகொலை செய்யப்பட்டது உலகம் முழுவதுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கைகளில் கமேனி படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணம் ஒருபுறம் கண்ணீரை வரவழைத்திருக்கிறது; இன்னொரு தரப்பினர் இதைக் கொண்டாடுகின்றனர்.

உலக அளவில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய நாடுதான் ஈரான். 1979}ஆம் ஆண்டு ஈரானில் மிகப் பெரிய புரட்சி நடைபெற்றது. இஸ்லாமிய புரட்சியை அடுத்து மன்னர் ஷா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அதற்கடுத்து அயதுல்லா ருஹோல்லா கொமேனி ஆட்சியைக் கைப்பற்றினார். ஈரானில் இஸ்லாமிய விதிமுறைகளின்படி ஆட்சி அமைக்கப்பட்டது. நாட்டின் அரசியல் மற்றும் ராணுவ அதிகாரத்தின் முக்கிய அதிகாரம் கொண்டவராக கொமேனி இருந்தார். அவர் மறைந்தாலும் ஈரானில் இஸ்லாமிய முறைப்படி ஆட்சி தொடர்ந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஈரானில் பொருளாதாரம் மிகவும் மோசமானது. விலைவாசி உயர்ந்து விட்டது. வேலைவாய்ப்புகளே இல்லை. இப்படிப் பல காரணங்களால் போராட்டம் நடைபெற்றது. இவற்றைத் தூண்டி விடுவதே அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் என்று உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானில் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவளிக்கத் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

ஈரான் மீது அமெரிக்கா இவ்வளவு கோபமாக இருப்பதற்கு முக்கியக் காரணம், ஈரானின் அணுசக்தி திட்டங்கள்தான். அணுசக்திக்கான யுரேனியத்தை செறிவூட்டி அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சிக்கிறது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டும், மறுபுறம் தாக்குதலை நடத்தும் வேலையை அமெரிக்கா தொடர்ந்து செய்து வந்தது. ஒவ்வொரு முறையும் அமெரிக்காவும், இஸ்ரேலும் தீட்டிய படுகொலை திட்டத்திலிருந்து பலமுறை தப்பித்த கமேனி இந்த முறை சிக்கிக் கொண்டார். அவருடன் 48 ஈரான் தலைவர்களும் கொல்லப்பட்டனர்.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து மத்திய கிழக்கில் போர் தொடர்கிறது. ஈரானின் உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்ட பிறகு தாக்குதல் தொடர்கிறது. போர் எப்போது முடியும் என்று கணிக்க இயலவில்லை. தொடரும் போரால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கக்கூடும் என்கிற அடிப்படை மனிதாபிமானத்தை இவர்கள் உணர வேண்டும்.

கட்டுரையாளர்:

முன்னாள் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.