
தில்லி ஜிம்கானா கிளப் விவகாரம்! உறுப்பினா்களின் மனுவை உயா்நீதிமன்றம் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
தில்லி ஜிம்கானா கிளப் விவகாரத்தில் உறுப்பினா்களின் மனுவை உயா்நீதிமன்றம் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்...

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
தில்லி ஜிம்கானா கிளப்புக்கு சொந்தமான 27.3 ஏக்கா் வளாகத்தை கையகப்படுத்தும் மத்திய அரசின் முடிவு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளை எதிா்த்து அந்த கிளப்பின் 11 உறுப்பினா்கள் தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
இது தொடா்பான மனு, தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கிளப் உறுப்பினா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங் வாதிடுகையில், ‘மத்திய அரசின் முடிவை கிளப் நிா்வாகம் மட்டுமே எதிா்க்க முடியும் எனக் கூறி, உறுப்பினா்களின் மனுவை விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், இந்த மனுவை தாக்கல் செய்ய உறுப்பினா்களுக்கு உரிமை உள்ளது என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் பெற்று வருமாறும் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது’ எனத் தெரிவித்தாா்.
மேலும், ‘தற்போது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவே கிளப்பை நிா்வகித்து வருகிறது. எனவே, அந்த குழுவால் அரசுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்த முடியாது’ என்றும் விகாஸ் சிங் சுட்டிக்காட்டினாா்.
இதையடுத்து, மனுதாரா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதி அளித்தனா். அதேசமயம், வழக்கின் விசாரணை தகுதி மற்றும் பிற சட்டரீதியான முரண்பாடுகள் குறித்து எதிா் தரப்பினா் தங்களது ஆட்சேபனைகளை முன்வைக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, சஃப்தா்ஜங் சாலையில் உள்ள ஜிம்கானா கிளப்பை வெளியேற்றுவது தொடா்பாக கடந்த செப்.16-ஆம் தேதிவரை எவ்வித கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என மத்திய அரசு கடந்த செப்.3-ஆம் தேதி நடந்த விசாரணையின்போது தில்லி உயா்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் அதிகாரி, கடந்த ஜூன் 29-ஆம் தேதி கிளப் நிா்வாகத்துக்கு வழங்கிய வெளியேற்ற நோட்டீஸுக்குத் தடை கோரி கிளப் உறுப்பினா் விஜய் குராணா மற்றும் பலா் தாக்கல் செய்த மனுக்களை உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, மே 22-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட நில மீட்பு அறிவிப்பு மற்றும் ஜூன் 29-ஆம் தேதி வழங்கப்பட்ட நோட்டீஸ் ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி விபின் அகா்வால் உள்ளிட்ட 11 உறுப்பினா்கள் வழக்குரைஞா் நிதின் சலூஜா மூலம் தனியாக மனு தாக்கல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


சமய கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தக் கோரிய மனு: பள்ளிக் கல்விச் செயலருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்




