மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தமிழக எம்பிக்கள் அமளி: 21-ஆவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை 21-ஆவது நாளாக வியாழக்கிழமை அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக எம்பிகள் அமளியில் ஈடுபட்டு முடக்கினர்.

Updated On :6 ஏப்ரல் 2018, 4:02 am IST

காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை 21-ஆவது நாளாக வியாழக்கிழமை அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக எம்பிகள் அமளியில் ஈடுபட்டு முடக்கினர்.
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அதன் தலைவர்கள், அமளியில் ஈடுபட்ட எம்பிக்களை திரும்பத் திரும்ப இருக்கையில் சென்று அமர வலியுறுத்தியும் கேளாமல், தொடர்ந்து அமளியில் அவர்கள் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை முன்வைத்து அதிமுக எம்பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது அனைவரையும் அவரவர் இருக்கைக்குச் செல்லுமாறு சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார். எனினும், அமளி நீடித்ததால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடிய போது, அதிமுக எம்பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு பதாகைகளுடன் வந்து அமளியைத் தொடர்ந்தனர். "மத்திய அரசே தமிழக விவசாயிகளை வஞ்சிக்காதே... காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு', "தமிழகத்திற்கு நீதி வேண்டும்' என முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்குதேசம், ஆர்ஜேடி ஆகியவற்றின் உறுப்பினர்கள் தங்களது இருக்கையில் எழுந்து நின்றவாறு, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவையில் முன்வைக்க வலியுறுத்தி குரல் கொடுத்தனர். மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "அவையில் வங்கி முறைகேடு உள்பட அனைத்து விவகாரங்களையும் நம்பிக்கையில்லாதத் தீர்மானத்தின் மூலம் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், நாங்கள் விவாதத்திற்கு தயாராக இல்லை என மத்திய அரசுதான் எதிர்க்கட்சிகள் மீது தேவையில்லாமல் குறைகூறி வருகிறது. எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு மக்களவைத் தலைவர் அனுமதி அளிக்க வேண்டும்' என்றார்.
அப்போது, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த்குமார் பேசுகையில், "மத்திய அரசு அனைத்து விஷயங்களையும் விவாதிக்கத் தயாராக உள்ளது. காங்கிரஸ் கட்சிதான் அமளியை உருவாக்கி அவை நடவடிக்கையை முடக்குகிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும்' என்றார்.
பின்னர், சுமித்ரா மகாஜன் பேசுகையில், "அரசுக்கு எதிராக உறுப்பினர்கள் சிலர் அளித்த நம்பிக்கை இல்லாத் தீர்மான நோட்டீஸை அமளி காரணமாக அவை முன் கொண்டு வர இயலவில்லை' என்றார். மேலும், அதிமுக எம்பிக்களை அவரவர் இருக்கைகளுக்குச் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார். இருப்பினும், அமளி தொடர்ந்ததால்அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
 மாநிலங்களவையில்...: மாநிலங்களவை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அதன் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் கூடியது. அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் வேமிரெட்டி பிரபாகர் ரெட்டி (ஆந்திரம்), காங்கிரஸ் உறுப்பினர் சையது நஸிர் ஹுசேன் (கர்நாடகம்) ஆகியோர் பதவி உறுதி மொழியேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு அதிமுக, திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் வெவ்வேறு விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் அவை மீண்டும் கூடியதும், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட ஈடுபட்டதால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு பிறகு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த அமளி காரணமாக ஊழல் எதிர்ப்பு மசோதா குரல் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
பின்னர், நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியத்திற்காக நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஜனநாயக ரீதியில் குரல் கொடுத்து வருகின்றனர். 
உணர்வுப்பூர்வமாக போராடி வருகின்றனர். இதை தமிழக எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்தாலும் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.