பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கும் விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கும் விவகாரம் தொடர்பாக மாநில அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை மே 16-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Updated On :19 ஏப்ரல் 2018, 1:07 am IST

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கும் விவகாரம் தொடர்பாக மாநில அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை மே 16-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 
இது தொடர்பாக "வழக்குரைஞர் சமூக நீதிப் பேரவை' சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை 2016, அக்டோபர் 26-இல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் வன்னியர் சங்க அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி சட்டக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், சட்டக் கல்லூரி தொடங்குவதற்கான அவர்களது விண்ணப்பத்தை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து, வழக்குரைஞர் சமூக நீதி பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது, தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கும் விவகாரத்தில், திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அறக்கட்டளையின் சரஸ்வதி சட்டக் கல்லூரியை ஆய்வு செய்து 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய பார் கவுன்சிலுக்கு (பிசிஐ) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதனிடையே, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய பார் கவுன்சில் சார்பில் வழக்குரைஞர் அர்தேந்து மெளலி குமார் பிரசாத், "வழக்குரைஞர் சமூக நீதிப் பேரவை' சார்பில் வழக்குரைஞர்கள் கே. பாலு, ராமசந்திரன், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சுப்ரமணிய பிரசாத், யோகேஷ் கண்ணா உள்ளிட்டோர் ஆஜராகினர்.
அவர்கள் வாதிடுகையில், சட்டக் கல்வியின் தற்போதைய நிலை மாறி வரும் சூழலுக்கு ஏற்ப சட்டக் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், தரமான சட்டக் கல்லூரிகள் தொடங்குவது ஆகியவை குறித்த அக்கறையையும் கவலையையும் வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, வன்னியர் சங்க அறக்கட்டளையின் சரஸ்வதி சட்டக் கல்லூரியை ஆய்வு செய்த அறிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, இந்திய பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அர்தேந்துமெளலி குமார் பிரசாத் கல்லூரியை ஆய்வு செய்த அறிக்கையை சமர்பித்தார். 
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வன்னியர் சங்க அறக்கட்டளையின் சரஸ்வதி சட்டக் கல்லூரியை ஆய்வு செய்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இந்திய பார் கவுன்சில் சட்டக் குழுக் கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும். சட்டக் கல்லூரி அங்கீகாரம் தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அடுத்து விசாரணைக்குள்ளாக அளிக்க வேண்டும். சட்டக் கல்விப் பாடத் திட்டத்தில் உலகத் தர அளவில் மாற்றம் செய்வது குறித்தும், தனியார் சட்டக் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பது குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மே 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.