மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவுக்கு தில்லியில் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்: அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவுச் செய்தி என்னை மிகவும் வருத்தம் கொள்ளச் செய்துள்ளது. அவரது மறைவு இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பு எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா: வாஜ்பாயின் மறைவால் ஓர் அரசியல் அத்தியாயம் நிறைவு பெற்றுள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவரது மறைவால் தனிப்பட்ட முறையில் துக்கம் அடைந்துள்ளேன்.
விஜேந்தர் குப்தா (சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்): அரசியலில் இளைய செயல்பாட்டாளராக இருந்த போது அவ்வப்போது வாஜ்பாயின் அறிவுரையையும், உத்தவேகத்தையும் பெற முடிந்தது. அரசியல் சிந்தனை, உத்வேகம், சக்தி ஆகியவற்றின் ஆதாரமாக விளங்கியவர். வாஜ்பாயிடம்ம் கற்றுக் கொண்ட விஷயங்களுக்கு என்றென்றும் கடன்பட்டுள்ளேன்.
தில்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் மாக்கன்: வாஜ்பாயின் ஆன்மா சாந்தியடையட்டும்.
அமைச்சர் கோபால் ராய்: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு கண்ணீர் அஞ்சலி.
ஸ்வராஜ் அபியான் கட்சி: வாஜ்பாயின் அரசியல் வாழ்வு ஒவ்வொரு இந்தியருக்கு உத்தவேகத்தை அளிக்கும். சிறந்த நாடாளுமன்றவாதியை இழந்துள்ள தருணத்தில் தேசத்துடனான துக்கத்தில் ஸ்வராஜ் அபியான் கட்சியும் இணைந்து கொள்கிறது.
சிஏஐடி (அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு): கூட்டமைப்பின் பொதுச் செயலர் பிரவீண் கண்டேல்வால் கூறுகையில், இந்திய அரசியலில் பல்வேறு பரிமாணங்களை உருவாக்கிய அடல் பிஹாரி வாஜ்பாய், ஒர் அரசியல் துறவியாக விளங்கியவர். அடல்ஜியின் மறைவுக்கு மரியாதை செய்யும் வகையில் தில்லியில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைக்க வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.