தலைநகர் சாலைகளின் பெயர்ப் பலகையுடன் தகவல் குறிப்புகளும் இடம் பெறுமா?
வரலாற்றுப் பெருமையும், சிறப்பும் கொண்ட தேசியத் தலைநகரான தில்லியில் அமைந்துள்ள பல்வேறு சாலைகளின் பெயர்களுடன் அவற்றின்


வரலாற்றுப் பெருமையும், சிறப்பும் கொண்ட தேசியத் தலைநகரான தில்லியில் அமைந்துள்ள பல்வேறு சாலைகளின் பெயர்களுடன் அவற்றின் வரலாற்றுக் குறிப்புகளும், தகவல்களும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தேசியத் தலைநகர் தில்லி, பழைமையான வரலாற்றுப் பின்னணியையும், மகத்துவத்தையும் கொண்டது. இங்குள்ள செங்கோட்டை, குடியரசுத் தலைவர் மாளிகை, ஜாமா மசூதி, இந்தியா கேட், புரானா கிலா, அக்ஷர்தாம், லோட்டஸ் டெம்பிள், காந்தி நினைவு அருங்காட்சியகம், பிர்லா மந்திர் என பல இடங்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களையும், கருத்தையும் கவரத் தவறுவதில்லை. முகாலயர்களும் ஆங்கிலேயர்களும் ஆட்சி புரிந்த பகுதியாகவும் தில்லி திகழ்கிறது.
தில்லியில் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதியில் முக்கிய மத்திய அமைச்சகங்களின் அலுவலகங்கள், வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்கள், குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட், மண்டி ஹவுஸ், பிரதமர் குடியிருப்பு உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சாலைகள் பலவற்றுக்கு, மொகலாய மன்னர்கள், ஆங்கிலேய பிரபுக்கள், தேசத் தலைவர்கள், விஞ்ஞானிகள், தியாகிகள் ஆகியோரை நினைவுகூரும் வகையில் பெயரிடப்பட்டுள்ளன.
என்டிஎம்சி: என்டிஎம்சி பகுதியில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் தாரா சுக்கோ, அக்பர் ரோடு, காமராஜர் சாலை, தீஸ் ஜனவரி மார்க், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலை உள்பட பல்வேறு அரசர்கள், தலைவர்களின் பெயர்களில் சாலைகள் அமைந்துள்ளன.
மத்திய தில்லி: மத்திய தில்லியில் ராஜாஜி மார்க், சுப்ரமணியபாரதி மார்க், அம்ரிதா ஷெர்கில் மார்க், ஜவாஹர்லால் நேரு மார்க், தியாகராஜா மார்க், கஸ்தூர்பா காந்தி மார்க், பகதுர்ஷா ஜாஃபர் மார்க், திலக் மார்க், பாபா கரக் சிங் மார்க், டால்ஸ்டாய் மார்க், மௌலானா ஆசாத் ரோடு, சர்தார் பட்டேல் மார்க், விவேகானந்த் மார்க், ரஃபி மார்க், ஸ்ரீமந்த் மாதவராவ் சிந்தியா மார்க், மந்திர் மார்க், தீன் மூர்த்தி மார்க் ஆகிய சாலைகளும் உள்ளன.
வடக்கு தில்லி: வடக்கு தில்லியில் ராணி ஜான்சி ரோடு, ராஜ் நிவாஸ் மார்க், பழைய தில்லியில் அன்சாரி ரோடு, நேதாஜி சுபாஷ் மார்க், சுவாமி ஸ்ரத்தானந்த் மார்க் என பல்வேறு பெயர்களுடன்கூடிய சாலைகள்அமைந்துள்ளன.
இவை தவிர தில்லியில் பாராகம்பா ரோடு, அசோகா ரோடு, ஸ்ரீஅரபிந்தோ சாலை, லோதி ரோடு, மான்சிங் ரோடு,அருணா ஆசஃப் அலி, லோக் கல்யாண் மார்க், சஃப்தர்ஜங் ரோடு, சன்சத் மார்க் என புகழ்பெற்ற சாலைகளும் அமைந்துள்ளன.
ஒவ்வொரு சாலையும் அதற்கென பிரத்யேக வரலாற்றைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக சௌத் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள தாரா சுக்கோ சாலையானது முகலாய மன்னர் ஷாஜகானின் மூத்த மகன் தாரா சுக்கோவை நினைவுகூரும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தச் சாலையின் பெயர் ஆங்கிலேய பிரபுவான டல்ஹெளசியின் பெயரில் இருந்தது. பின்னர், தாரா சுக்கோ எனப் பெயரிடப்பட்டது.
இவர் ஐந்தாவது முகலாயப் பேரரசரான ஷாஜகானின் மூத்த மகனாவார். அவர் ஹிந்து, முஸ்லிம் மதத்தைப் பின்பற்றுவர்கள் இடையே அமைதியையும், இணக்கத்தையும் ஏற்படுத்துவதிலும், உலகளாவிய சகோதரத்துவம், மனிதநேயம், சமதானம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுபவராகவும் திகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. நுண்கலைகள், இசை ஆகியவற்றுக்கான மாபெரும் புரவலராகவும் திகழ்ந்தார்.
இதேபோன்று, தில்லி சாலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள மகாகவி சுப்ரமணிய பாரதி, ராஜாஜி, ஜவாஹர்லால் நேரு என ஒவ்வொரு தலைவர்களுக்கும் பின்னணியில் மிகப் பெரிய வரலாறு உள்ளது. தில்லிக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் போதும், கார்களில் செல்லும் போதும் இந்தச் சாலைகளின் பெயர்களை உச்சரிக்கத் தவறுவதில்லை. மேலும், சாலைகளின் பெயர்களுக்குரிய நபர்கள் குறித்த வரலாற்றை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அதுபற்றி உடனடியாக அவர்கள் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இணையதளம், நூல் அல்லது சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் தெரிய வேண்டிய நிலைமை உள்ளது.
இதனால், சாலைகளில் பெயர்கள் பொறிக்கப்படும் பலகையின் கீழ்ப் பகுதியிலோ அல்லது அதன் அருகிலோ பெயருக்குரியவர்களின் வரலாற்றுக் குறிப்புகளையும் தெரியுமாறு காட்சிப் படுத்தினால் தில்லியின் வரலாற்றுத் தகவலுடன், பல்வேறு தலைவர்களின் சிறப்புகளையும் சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இதற்கு தில்லி அரசும், மத்திய அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...