சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் கார் ஓட்டுநருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனயை தில்லி நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டது.
வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பாதிக்கப்பட்ட நபர் அலட்சியமாக சாலையைக் கடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
2014, மார்ச் 4-ஆம் தேதி அர்ஜுன் குமார் என்பவர் அர்ஜுன் சிங் என்பவருடன் சாராய் காலே கான் பகுதியில் இருந்து கிரேட்டர் நொய்டாவுக்கு டிஎன்டி (தில்லி முதல் நொய்டா நேரடி) விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அர்ஜுன் சிங் பொதுக் கழிப்பறைக்கு சென்றுவிட்டு சாலையைக் கடந்து வந்து காண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக ஓட்டிவரப்பட்ட கார் அவர் மீது மோதியது. அதில் அர்ஜுன் சிங் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து, அலட்சியமாகவும், வேகமாகவும் கார் ஒட்டிவரப்பட்டு மோதியதால்தான் அர்ஜுன் சிங் இறக்க நேரிட்டதாக போலீஸில் அர்ஜுன் குமார் புகார் அளித்தார்.
இதன் பேரில் காரை ஓட்டிவந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு தில்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கார் ஓட்டுநர் மீதான குற்றத்தை உறுதி செய்து அவருக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதித்து 2017-இல் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட நபர் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. குப்தா பிறப்பித்த உத்தரவு வருமாறு:
இந்த வழக்கில் மனுதாரர் (குற்றம்சாட்டப்பட்டவர்) மீதான குற்ற விசாரணையை விசாரணை நீதிமன்றம் உரிய வகையில் மதிப்பீடு செய்யவில்லை. விபத்து நிகழ்ந்த டிஎன்டி சாலை அதிக வாகனங்கள் செல்லும் பகுதி. மேலும், பாதசாரிகள் இல்லா சாலையாகவும் இருந்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட நபர் கவனக் குறைவாக சாலையைக் கடக்க முயன்றதும் அவர் உயிரிழக்க காரணமாக இருந்திருப்பது விசாரணையில் தெரிய வருகிறது. கவனக்குறைவாக சாலையைக் கடந்து செல்லும் தருணத்தில், வாகனம் குறைவான வேகத்தில் வந்தாலும்கூட விபத்து நிகழாமல் இருப்பது சாத்தியமில்லை.
இச்சூழலில், மனுதாரர் (குற்றம்சாட்டப்பட்ட நபர்) அலட்சியத்துடன் வாகனத்தை ஓட்டினார் என்று கூற முடியவில்லை. மேலும், வாகனத்தை மனுதாரர் வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இதனால், இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு

இன்றைய ராசி பலன்கள் (02 மே 2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு பணவரவு!

வெள்ளக்கோவிலில் ரத்த தான முகாம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

