சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

கர்நாடக ஆளுநர் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஹிந்து மகாசபை மனு

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்திருப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஹிந்து மகா சபை அமைப்பு

Updated On :21 மே 2018, 6:17 pm

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்திருப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஹிந்து மகா சபை அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்தபிறகு, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத)-காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரின. இருப்பினும், அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜகவை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மஜதவும், காங்கிரஸும் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப் பேரவையில் எடியூரப்பாவை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்படி கடந்த 19-ஆம் தேதி உத்தரவிட்டது.
எனினும், கர்நாடக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முன்னரே எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, மஜத-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைத்தார். இந்த அழைப்பையேற்று, கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான புதிய அரசு வரும் புதன்கிழமை (மே 23) பதவியேற்கவுள்ளது.
இந்நிலையில், மஜத-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பதை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் அகில பாரத ஹிந்து மகாசபை அமைப்பு திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தேர்தலுக்குப் பின்பு மஜத-காங்கிரஸ் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றியுள்ளன. இது அரசியலமைப்பு விதி மீறல் ஆகும். ஆதலால், இந்த கூட்டணியை மோசடி என அறிவிக்க வேண்டும். இந்நிலையில், மஜத-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இது கர்நாடக மக்கள் விருப்பத்துக்கு எதிரானது. தேர்தலில் மக்களால் தோற்கடிக்க ஆளும் கட்சியானது, அதே தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட இன்னொரு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.