நாட்டின் வளர்ச்சிக்காக அறிவியல் துறையில் மாணவர்கள் அதிக அளவில் ஈடுபட முன்வர வேண்டும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேட்டுக் கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் நான்கு நாள்கள் நடைபெறும் நான்காம் ஆண்டு இந்திய சர்வதேச அறிவியல் விழா (ஐஐஎஸ்எஃப்) வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் இளம் விஞ்ஞானிகள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:
இந்த விழாவில் இளம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் என பல தரப்பினரும் தாமாகவே முன்வந்து கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவையொட்டி, நாட்டில் உள்ள 44 நகரங்களில் 77 அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் ஆயிரக்கணக்கான இளம் ஆர்வலர்கள் பங்கேற்றனர். ஹைதராபாத் நிகழ்ச்சியில் சுமார் 20,000 பேர், தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும்.
பிரதமர் மோடி நமது விஞ்ஞானிகளின் திறமைகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். நாட்டில் ஒவ்வொரு பிரச்னைக்கும் அறிவியல் மூலம் தீர்வு காண முடியும். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். அவர்களது அறிவியல் ஆர்வத்தை வெளிக் கொணரும் வகையில் இதுபோன்ற அறிவியல் விழாக்கள் நடத்த மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக தங்களது பங்களிப்பை அறிவியல் மூலம் அளிக்க மாணவர்கள்முன் வர வேண்டும் . அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்தியாவில் உயர் கல்வியைப் பெற்று வெளிநாடு செல்லும் நிலைதான் இருந்து வந்தது. ஆனால், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு இந்தியாவில் பல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை கட்டமைக்கும் நோக்கில் பிரதமர் மோடி முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதற்காக தொலைநோக்குப் பார்வை 2022 திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ உகந்த சூழலை உருவாக்கித் தருவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தொலைநோக்குப் பார்வைத் திட்டத்திற்கு உதவும் ஒரு ஊடகமாக இந்த அறிவியல் விழா அமையும் என்றார் ஹர்ஷ் வர்தன். விழாவையொட்டி நடைபெற்ற இளம் விஞ்ஞானிகள் கருத்தரங்கின் நோக்கம் குறித்து உயிரி தொழில்நுட்பத் துறையின் செயலர் டாக்டர் ரேணு ஸ்வரூப் எடுத்துரைத்தார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளம் அறிவியல் ஆர்வலர்கள், மாணவர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் தங்களது ஆய்வுகள் குறித்த விவரங்களைக் காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
அறிவியல் விழாவில் காலை 11 மணிக்கு உலகளாவிய இந்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பங்குதாரர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணிக்கு அறிவியல் கிராமம் என்னும் மாணவர்களுக்கான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
அறிவியல் கிராமம் நிகழ்ச்சியில் தமிழக மாணவர்கள்
தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் கிராமம் நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழகத்தின் விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வேதியியல், இயற்பியல் என பல்வேறு தலைப்புகளில் செயல்முறைகளுடன் கூடிய நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தங்களுக்கு புதிய அனுபவத்தை தந்திருப்பதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அஜித், பிரவீண் ஆகியோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இன்று குடியரசுத் தலைவர் பங்கேற்பு: இந்திய சர்வதேச விழாவில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைத்துப் பேச உள்ளா . இந்த நிகழ்வில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில ஆளுநர் ராம் நாயக் மற்றும் அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
குறைந்தவிலையில் சில்வர் முனி மீன்கள் கிடைக்க ஆய்வு
சென்னை சாந்தோமில் உள்ள கழிமுகத்துவார மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி டேனி தாமஸ், அலங்கார மீன்கள் வளர்ப்பு தொடர்பான ஆராய்ச்சி விஷயங்கள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தார். ரூபாய் 50 முதல் ரூ.300 வரையிலான விலையில் விற்பனையாகும் சில்வர் முனி மீன்கள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் அதன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஆலம்பாடி இன மாடுகளை பாதுகாக்க ஆய்வு
இந்நிகழ்வில் தமிழகத்தின் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி டாக்டர் சி .என். வந்தனா, ஆலம்பாடி இன வகை மாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு விஷயங்களை காட்சிப்படுத்தியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு பயன்படுத்தப்படும் காங்கேயம் மாடுகள், பர்கூர் இன வகை மாடுகள் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் அந்த வகை மாடுகளை அழிவின் பிடியில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆலம்பாடி இன வகை மாடுகள் உரிய வகையில் பாதுகாக்கப்படாததால் அவை அழிந்து வருகிறது. அந்த மாடுகளைப் பாதுகாக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகை மாடுகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுகின்றனஎன்றார்.
இணையம் மூலம் கருவிகளின்செயல்பாட்டை கட்டுப்படுத்தலாம்
சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் இளம் ஆராய்ச்சியாளர் கமலஹாசன், இணையதளம் மூலம் பல்வேறு கருவிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் குறைந்த விலையிலான கருவியின் தயாரிப்பு குறித்து படங்களுடன் விளக்கம் அளித்தார்.