மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

சிலைக் கடத்தல் வழக்கு ஜன. 28-இல் விசாரணை

சிலைக் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கில் எதிர்மனுதாரர் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில்

Updated On :23 ஜனவரி 2019, 11:22 pm IST

சிலைக் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கில் எதிர்மனுதாரர் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை (ஜனவரி 28) விசாரணைக்கு வரவுள்ளது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஜி பொன். மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுக்கும் தடை விதிக்கக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்க யானை ராஜேந்திரன், டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், வழக்கு விசாரணை ஜனவரி இறுதி வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், எதிர் மனுதாரர்களில் ஒருவரான யானை ராஜேந்திரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 
காவல் துறை உயரதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரைக் காப்பாற்றும் நோக்கில், தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. பொன்.மாணிக்கவேல் இந்த வழக்கை விசாரித்தால் பல உண்மைகள் வெளி வந்துவிடும் என்பதால் அவரை நீக்க அந்த அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் பொன்.மாணிக்கவேலை சிறப்பு விசாரணை அதிகாரியாக மீண்டும் நியமித்தது. ஆனால், தற்போது தமிழக அரசு தனது மனுவில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கை தமிழகக் காவல் துறை விசாரிக்க வாய்ப்பு வழங்கவில்லையெனக் கூறுவது அப்பட்டமான பொய் ஆகும். இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றி, உண்மையான குற்றவாளிகளைத் தப்பவிடும் நோக்கிலேயே தமிழக அரசு செயல்படுகிறது. எனவே, சிலைக் கடத்தல் வழக்கை சிறப்பாகக் கையாளும் பொன். மாணிக்கவேலை நீக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.