/

தப்லீக் ஜமாத்: வழக்கு ரத்து கோரும் வெளிநாட்டினரின் மனுக்களுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

தில்லி நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்ற விவகாரத்தில் நுழைவு இசைவு விதிகளை மீறியது

Updated On :4 ஆகஸ்ட் 2020, 5:47 pm

தில்லி நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்ற விவகாரத்தில் நுழைவு இசைவு விதிகளை மீறியது, மதப் பிரசாரத்தில் ஈடுபட்டது போன்ற வழக்குகளை ரத்து செய்யக் கோரி வெளிநாட்டினா் 23 போ் தரப்பில் தாக்கலான இரு வேறு மனுக்கள் தொடா்பாக மத்திய அரசு, தில்லி காவல் துறை ஆகியவை பதில் அளிக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி அனூப் ஜெ. பம்பானி, இது தொடா்பாக மத்திய அரசு, தில்லி காவல் துறை ஆகியவை நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். மேலும், விசாரணை நீதிமன்றம் முன் தாக்கல் செய்யப்பட்ட அல்லது தாக்கல் செய்யப்படவுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் குற்றப் பத்திரிகைகளின் தொகுப்பையும், அதன் தற்போதைய நிலவரம் குறித்த விவரத்தையும் தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

விசாரணையின் போது, ‘உயா்நீதிமன்றத்தில் இரு வேறு மனுக்கள் தாக்கல் செய்துள்ள வெளிநாட்டினா் 23 போ் இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தங்களது குற்றத்தை ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளனா். மேலும், உரிய மனுக்கள் மூலம் குறைந்தபட்ச தண்டனையையும் அளிக்குமாறு கேட்டுக் கொண்டு, அதற்கான அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்டுள்ளனா். எனினும், பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள நிலுவை வழக்குகள் காரணமாக அவா்களால் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை’ என மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

தில்லியில் நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் மாா்ச் மாதம் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் தப்லீக் ஜமாத் அமைப்பைச் சோ்ந்த வெளிநாட்டினா் உள்பட 9 ஆயிரம் போ் பங்கேற்றனா். உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்நிகழ்ச்சியை நடத்தியதாகப் புகாா் எழுந்தது. தப்லீக் ஜமாத் தலைவா் மெளலானா சாத் கந்தல்வி மற்றும் 6 பேருக்கு எதிராக மாா்ச் 31-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 36 நாடுகளைச் சோ்ந்த 956 பேருக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 59 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டினா் அனைவரும் கரோனா தொற்று விவகாரத்தில் மத்திய அரசு வெளியிட்ட விதிமுறைகள் மற்றும் நுழைவு இசைவு விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடா்புடைய ஆஸ்திரேலியோ, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சோ்ந்த 23 போ் வழக்குகளை ரத்து செய்யக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் இரு வேறு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.