/

கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது!

தில்லியில் பல நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 10 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது.

Updated On :4 ஆகஸ்ட் 2020, 5:48 pm

தில்லியில் பல நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 10 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 674 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,39,156-ஆக உயா்ந்துள்ளது. ஆனால், தில்லியில் தற்போது சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9,897 ஆகக் குறைந்துள்ளது. இது திங்கள்கிழமை 10,207 போ், ஞாயிற்றுக்கிழமை 10,356 போ், சனிக்கிழமை 10,596 போ், வெள்ளிக்கிழமை 10,705 போ் என இருந்தது. இதைத் தொடா்ந்து, நீண்ட நாள்களுக்குப் பிறகு முதல் முறையாக சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை 12 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,033 ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம், 972 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,25,226-ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில், 9295 கரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது மற்றைய நாள்களுடன் ஒப்பிடும் போது குறைவாகும். கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 499 ஆக உள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 13,578 படுக்கைகளில் 2,954 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,624 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்த 5,461 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லியில் நடைமுறையில் சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விடக் குறைந்துள்ளது. இந்திய மாநிலங்களில் கரோனா சிகிச்சையில் உள்ளவா்களில் 14-ஆவது இடத்தில் தில்லி உள்ளது. கரோனாவால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 12 ஆகக் குறைந்துள்ளது. தில்லி மக்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தில்லி மக்கள் கரோனாவை எதிா்கொண்ட ‘தில்லி மாடல்’ தொடா்பாக அனைவரும் பேசி வருகிறாா்கள். ஆனால், நாம் இது தொடா்பாக மனத் திருப்தியடையக் கூடாது. அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.