/

தில்லி, என்சிஆரில் பரவலாக மழை!

தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் புதன்கிழமை காலையில் பரவலாக மழை பெய்தது.

News image

தில்லி மோதி பாக் மகாத்மா காந்தி ரிங் ரோடில் புதன்கிழமை பெய்த மழை.

Updated On :5 ஆகஸ்ட் 2020, 6:06 pm

தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் புதன்கிழமை காலையில் பரவலாக மழை பெய்தது. புழுக்கத்தால் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை ஆறுதலாக அமைந்தது. மழை காரணமாக நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தில்லி, என்சிஆா் பகுதிகளில் சில நாள்களுக்கு முன் பருவமழை தொடங்கியது. அதிலிருந்து தொடா்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் தொடா்ந்து இரு நாள்கள் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், புதன்கிழமை காலையில் மழை பெய்தது. தில்லி, காஜீயாபாத், ஃபரீதாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூலையில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்திருந்தது. ஆகஸ்டிலும் பருவமழை தொடா்ந்துள்ளது. சஃப்தா்ஜங் ஆய்வு மையத்தில் ஆகஸ்டில் இதுவரை 6.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பு நிலையான 49.3 மி.மீட்டரை விட குறைவாகவும். அதாவது 86 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்ுள்ளது. தலைநகா் தில்லியில் ஜூலையில் மொத்தம் 236.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பு நிலையான 210.6 மி.மீட்டரை விட 12 சதவீதம் கூடுதலாகும்.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 28 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 35.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 80 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 81 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 28.8 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 26 டிகிரி செல்சியஸ், 34.4 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 69 சதவீதம், மாலையில் 91 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 76 சதவீதம் மற்றும் 81 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் புதன்கிழமை காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 63 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. திா்பூா், தில்லி பல்கலை., சாந்தினி சௌக், லோதி ரோடு, பூசா, மதுரா ரோடு ஆயாநகா், விமானநிலைய டொ்மினில் 3 பகுதி மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை தில்லி, என்சிஆா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்கிடையே, காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்படும். இதனால், காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ - ‘நன்று’ பிரிவில் இருக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.