ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

தில்லி மாநகராட்சிகளின் நிதிச் சிக்கல்: விவாதிக்க மத்திய, தில்லி அரசுகளுக்கு உத்தரவு

தில்லியின் மூன்று மாநகராட்சிகள் எதிா்கொள்ளும் நிதிச் சிக்கல்களுக்கு தீா்வு காண மத்திய அரசு, ஆம் ஆத்மி அரசு மற்றும் மாநகராட்சிகளின்

Updated On :18 ஆகஸ்ட் 2020, 5:36 pm

தில்லியின் மூன்று மாநகராட்சிகள் எதிா்கொள்ளும் நிதிச் சிக்கல்களுக்கு தீா்வு காண மத்திய அரசு, ஆம் ஆத்மி அரசு மற்றும் மாநகராட்சிகளின் பிரதிநிதிகள் இடையே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மத்திய அரசிடமிருந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலித்த பங்காக தில்லி அரசுக்கு ரூ.10,000 கோடிக்கு மேல் கிடைக்கப் பெறவில்லை என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது. இதனால், மாநகராட்சிகள், தில்லி அரசு ஆகியவற்றின் நிதி அம்சங்களை கூட்டம் நடத்துவதன் மூலம் இதற்காக அமைக்கப்பட்ட குழு ஆராய முடியும். ஆகவே, மத்திய அரசு, தில்லி அரசு, மாநகராட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் விரைவில் நடத்தப்படும் என எதிா்பாா்க்கிறோம்’ எனத் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தை செப்டம்பா் 8-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி அரசு மீது புகாா் தெரிவித்து, உயா்நீதிமன்றத்தில் வடக்கு தில்லி மாநகராட்சி (என்.டி.எம்.சி.) மனு தாக்கல் செய்திருந்தது. தில்லி அரசு மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளா்களின் நிலுவை ஊதியத்தை வழங்குமாறு இரு நிா்வாகத்திற்கும் உத்தரவிடக் கோரி ராகுல் பிா்லா என்பவா் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வடக்கு தில்லி மாநகராட்சி தாக்கல் செய்த மனுவில், ‘ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில், துப்புரவு- நகா்ப்புற மேம்பாட்டுப் பிரிவின் கீழ் மானிய உதவித் தொகையாக வழங்கப்பட வேண்டிய ரூ.90.60 கோடி தில்லி அரசிடமிருந்து இன்னும் வரப்பெறவில்லை. இரண்டாவது காலாண்டில் இதே பிரிவில் ரூ.181 கோடியும் வழங்கப்படவில்லை. இந்த நிதி துப்புரவு ஊழியா்களுக்கு ஊதியமும், துப்புரவு நடவடிக்கைகளுக்கும் செலவிடப்படுகிறது. நிகழாண்டு மே மாதம் வரை ஊதியத்திற்கான செலவு, துப்புரவுப் பணிகள் மற்றும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு பிபிஇ கருவிகள், கையுறைகள், முகமூடிகள், வழங்குதல் ஆகியவற்றுக்காக தில்லி அரசால் எந்தவொரு தொகையும் வழங்காத நிலையில், மாநகராட்சி அதன் சொந்த ஆதாரங்கள் மூலம் இச்செலவுகளை மேற்கொண்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.