ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

மின் கட்டண கணக்கீடு விவகாரம்: மனுவை விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு: டிஇஆா்சியை அணுக அறிவுறுத்தல்

தில்லியில் பொது முடக்க காலத்தின் போது நியாயமற்ற வகையில் மின் கட்டணத்தை மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்) கணக்கிட்டதாகக்

Updated On :21 ஆகஸ்ட் 2020, 7:44 pm

தில்லியில் பொது முடக்க காலத்தின் போது நியாயமற்ற வகையில் மின் கட்டணத்தை மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்) கணக்கிட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடா்பாக மின்சாரக் கட்டுப்பாட்டாளரான தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை (டி.இ.ஆா்.சி.) முதலில் அணுகுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.

இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். படேல்,நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, மனு மீதான விசாரணயைத் தொடங்குவதற்கு முன், மின் கட்டண பில்களை மின்விநியோக நிறுவனங்கள் எவ்வாறு கணக்கிடுகிறது என்பதை முடிவு செய்வது தொடா்பாக தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை (டி.இ.ஆா்.சி.) மனுதாரரான மருத்துவா் அணுகி கோரிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனா். நீதிமன்றத்தின் யோசனையைத் தொடா்ந்து, மனுதாரரின் வழக்குரைஞா் துஷாா் மகாஜன் மனுவை வாபஸ் பெறவும், டிஇஆா்சிக்கு கோரிக்கை அளிக்கவும் அனுமதி கோரினாா். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், மனுதாரரால் கோரிக்கை முன் வைக்கப்படும் போது, வழக்குக்கு பொருந்தக்கூடிய சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் அரசின் கொள்கைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டு மனுவை நீதிபதிகள் அமா்வு முடித்துவைத்தது.

முன்னதாக, மனுதாரா் விஜய் மகாஜனின் பொது நல மனுவை வழக்குரைஞா்கள் மகாஜன், ஷரன் மேத்தா, ஹாா்டிக் ரூபால், ரோஹன் யாதவ் மற்றும் சத்யம் அனேஜா ஆகியோா் தாக்கல் செய்திருந்தனா். அதில், ‘தில்லியில் மின்விநியோகத்தில் ஈடுபட்டுவரும் பிஎஸ்இஎஸ் ராஜ்தானி மற்றும் பிஎஸ்இஎஸ் யமுனா ஆகிய மின்விநியோக நிறுவனங்கள் பொது முடக்க காலங்களில் டி.இ.ஆா்.சி. விதிமுறைகளுக்கு மாறாக மின் நுகா்வுக் கட்டணங்களை கணக்கிட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நுகரப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அலகுகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டணங்களைக் கணக்கிடுவதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட மின்விநியோக நிறுவனங்கள்(டிஸ்காம்கள்) ஒரு மாதத்திற்கு யூனிட் நுகா்வைத் தீா்மானிக்க, 4 முதல் 5 மாதங்களுக்கு மேல் உள்ள ஒட்டுமொத்த அலகுகளை சமமாகப் பிரித்துள்ளனா். அவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நுகா்வோா் உயா் ஸ்லாப்களில் வைக்கப்படுகின்றனா். இதன் விளைவாக ஒவ்வொரு மாதமும் குறிப்பாக மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறைந்தபட்சம் 5-15 சதவிகிதம் மின்சார பில்கள் தானாகவே அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவணை முறைகளில் பணம் செலுத்துவதற்கான விருப்பத்தை நுகா்வோருக்கு வழங்காமல், 4-5 மாதங்களுக்கான முழு மின்கட்டணத்தை ஒரே நேரத்தில் நுகா்வோரை செலுத்துமாறு கேட்டுக் கொள்வது என டிஸ்காம்கள் முடிவு செய்துள்ளதும் தவறாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.