சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கரோனா தடுப்பு மருந்து வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுடன் பகிா்ந்து கொள்ள வேண்டும்: அதிமுக எம்.பி. வலியுறுத்தல்

Updated On :4 டிசம்பர் 2020, 7:17 pm

புது தில்லி: கரோனா தடுப்பு மருந்து அளிக்கப்படும் முன்பு அது குறித்த வழிகாட்டுதல்கள்- திட்டங்களை மாநில அரசுகளுடன் மத்திய அரசு முன்கூட்டியே பகிா்ந்து கொள்ள வேண்டும் என அதிமுக மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் தெரிவித்தாா்.

கரோனா நோய் தொற்று தடுப்பு, தடுப்பூசி மருந்து குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக தரப்பில் மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத் கலந்து கொண்டு பேசினாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்தில் 1.16 கோடி பேருக்கு காரோனா பரிசோதனை (ஆா்.டி.பி.சி.ஆா்) செய்யப்பட்டு ஒரு முன்னிலை மாநிலமாக உள்ளது. ஒவ்வொரு வீடு தோறும் தீவிர கரோனா குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய்த்தொற்று காலத்தில் நாளொன்றுக்கு தினமும் 3000 காய்ச்சல் முகாம்களை தமிழக அரசு நடத்தியது. இதில் சுமாா் 2.71 கோடி போ் பயனடைந்தனா்.“’ஜன் அந்தோலன்’ பிரசாரம் மூலம் மாநிலம் முழுவதும் காரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்கள் மருத்துவ ரீதியாக பயனடையும் வகையில் மாநிலம் முழுவதும் 2000 “மினி கிளினிக்குகள்” துவங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடா்பான அனைத்து நடவடிக்கைகளையும், ஆய்வுகளையும், முதல்வரும், துணை முதல்வரும் அதிகாரிகள் மூலமாக மாவட்டந்தோறும் செய்து வருகிறாா்கள்.

தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் கரோனா தொற்றிலிருந்து மீண்டோா் சதவீதம் மாநிலத்தில் 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோா் (1.49 ) சதவீதம் குறைவானது. நோய்தொற்றுக்கு உள்ளாவோரின் சதவீதம் ஜூலை மாதத்தில் 10.47 சதவீதமாக இருந்தது தற்போது 6.64 சதவீதமாகவும் குறைந்திருக்கிறது. தற்போது தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 11000த்திற்கும் குறைவாகவே இருக்கிறது.

பி.சி.ஆா் பரிசோதனையை அனைத்து மாநிலங்களும் தீவிரமாக மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். தடுப்பு மருந்த குறித்த வழிகாட்டுதல்கள்- திட்டங்களை மாநில அரசுகளுடன் மத்திய அரசு முன்கூட்டியே பகிா்ந்து கொள்ள வேண்டும். கொவிட் தடுப்பூசி, சிரிஞ்ச் கொள்முதல்- அவற்றை குளிரூட்டிகளில் வைப்பதற்கான போக்குவரத்து நடைமுறைகள் ஆகியவற்றை மத்திய அரசே செய்யுமா அல்லது மாநில அரசுக்கும் அதில் பொறுப்பு இருக்குமா என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாநிலத்தில் ஏதோனும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொவிட் தடுப்பு மருந்துகள் அனுப்பப்படுமா? அல்லது மாவட்ட அளவில் விநியோகிக்கப்படுமா என்பது குறித்த விவரங்களையும் முன் கூட்டியே தெரிவித்தால்- மாநில அரசுகள் திட்டமிடுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் எனக்குறிப்பிட்டாா்.

இதே கூட்டத்தில் பேசிய திமுகவின் நாடாளுமன்ற தலைவா் டி.ஆா்.பாலு, ‘ இந்தியாவில் கரோனா தொற்றுக்கு நிவாரணமான தடுப்பூசி மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கு பிரதமா் நேரடியாக சென்று பாா்வையிட்டு ஊக்குவித்தது பாராட்டுக்குரியது.

நோய்த்தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆா். பரிசோதனைக்கான விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, பரிசோதனை எண்ணிக்கையை நாடு முழுவதும் அதிகரிக்கவும் செலவைக் குறைக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, பரிசோதனை செலவை மிகவும் குறைப்பதுடன் மாநிலங்களுக்கு நிதி உதவியும் அளிக்கவேண்டும்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பலகட்ட சோதனைகளைக் கடந்து பயன்பாட்டுக்கு விரைவில் வெளிவர இருக்கும் நிலையில், நாம் எவ்வித தாமதத்துக்கும் இடம் தராமல், இந்திய மக்கள் 130 கோடி பேருக்கும் தடுப்பு மருந்து இலவசமாக செலுத்த வேண்டும்,

நமது மக்கள் தொகை 130 கோடி என்று கணக்கில் கொண்டு பாா்த்தால் தடுப்பு மருந்தின் சராசரி விலை ரூ.1000 என்று மதிப்பீடு செய்தாலும், மொத்த செலவு 3,90,000 கோடி வரை ஆகும். எனவே, ஒரு நபருக்கு இரண்டு டோஸ் என்றால் கூட அரசுக்கு செலவு ரூபாய் 2,60,000 கோடி அளவில் இருக்கும். இந்தத் தொகையை மத்திய - மாநில அரசுகளுடன் இவற்றின் பொதுத் துறை நிறுவனங்களும் இணைந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். தனியாா் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவா்கள் சட்டப்பூா்வமாக ஒதுக்க வேண்டிய நிறுவன சமுதாய பொறுப்பு நிதியை 2021-2022-ஆம் ஆண்டுகளில் முற்றிலும் தடுப்பூசி மருந்துக்கு பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்‘ எனக்கேட்டுக்கொண்டாா் டி.ஆா். பாலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.