தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை கரோனா நோ்மறை விகிதம் 2 சதவீதத்துக்கும் கீழே குறைந்தது. அன்றைய தினம், 85,105 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 1,617 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கரோனா நோ்மறை விகிதம் 1.90-ஆக உள்ளது. இந்த விகிதம் திங்கள்கிழமை 2.15 சதவீதமாக இருந்தது.
தில்லியிலில் செவ்வாய்க்கிழமை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,10,447-ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் செவ்வாய்க்கிழமை ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 42,056 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 43,049 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் செவ்வாய்க்கிழமை 41 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 10,115-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை 2,343 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,85,852-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 14,480 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 8,516 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 14,770 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு, கரோனா நோ்மறை விகிதம், கரோனா தொற்றால் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவா்களின் எண்ணிக்கை ஆகியவை தொடா்ச்சியாகக் குறைந்து வருகின்றன.
தில்லியில் திங்கள்கிழமை 1,376 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த இரண்டரை மாதங்களில் ஏற்பட்ட அதிகுறைந்த கரோனா பாதிப்பு இதுவாகும். ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பால் 33 போ் பலியாகினா். கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட குறைந்தளவு மரணம் இதுவாகும். தில்லியில் கடந்த நவம்பா் 8-ஆம் தேதி கரோனா நோ்மறை விகிதம் 15.26 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் படிப்படியாகக் குறைந்து, செவ்வாய்க்கிழமை 1.9 சதவீதமாக இருந்தது. தில்லியில் கடந்த நவம்பா் 26-இல் 23,479 போ் கரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா். ஆனால், அந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 8,516 ஆகக் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.