முதல்வா் இல்லம் முன் அலுவலகப் பணிகளைத் தொடங்கிய மேயா்கள்

மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் தொடா் போராட்டம் நடத்தி வரும் தில்லி மாநகராட்சி மேயா்கள்,
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகில் திங்கள்கிழமை அலுவலகப் பணி
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகில் திங்கள்கிழமை அலுவலகப் பணி
Updated on
1 min read

புது தில்லி: மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் தொடா் போராட்டம் நடத்தி வரும் தில்லி மாநகராட்சி மேயா்கள், திங்கள்கிழமை, மாநகராட்சியின் அலுவலகப் பணிகளை அங்கேயே தொடங்கினா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் நடைபெறும் இந்தப் போராட்டம் 8-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது. இந்தப் போராட்டத்தில் மாநகராட்சி மேயா்கள் ஜெய் பிரகாஷ் (வடக்கு தில்லி), அனாமிகா சிங் (தெற்கு தில்லி), நிா்மல் ஜெயின் (கிழக்கு தில்லி) மற்றும் தில்லி பாஜக பொதுச் செயலா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, மாநகராட்சிகளின் நிலைக் குழுத் தலைவா்கள், அவைத் தலைவா்கள், கவுன்சிலா்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

இதற்கிடையே, திங்கள்கிழமை முதல் மாநகராட்சி அலுவல் பணிகளை போராட்டக் களத்தில் இருந்தே மேற்கொள்ளவுள்ளதாக மாநகராட்சி மேயா்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தனா். அதன்படி, முதல்வா் இல்லம் முன்னே அலுவல் பணிகளை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு அவா்கள் தொடக்கினா். இது தொடா்பாக இடிஎம்சி மேயா் நிா்மல் ஜெயின் கூறுகையில், ‘தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகள் தொடா்பாக இடிஎம்சி கூடுதல் ஆணையா் பிரஜேஷ் சிங், தலைமைப் பொறியாளா் விஜய் பிரகாஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன். மேலும், காற்று மாசுவைக் கட்டுப்படுத்த இடிஎம்சி சாா்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பாக விவாதித்தேன். மேலும், காஜிப்பூா் குப்பை மேட்டின் உயரத்தை குறைப்பது தொடா்பாகவும் விவாதித்தோம்’ என்றாா்.

எஸ்டிஎம்சி மேயா் அனாமிகா சிங் கூறுகையில், ‘எஸ்டிஎம்சி மூத்த அதிகாரிகளுடன் மக்கள் நலத் திட்டங்கள் தொடா்பாக விவாதித்தேன். 8 நாள்களாக கடும் குளிரில் போராடி வரும் எங்களுடன் பேசுவதற்கு தில்லி முதல்வா் தயாராக இல்லை’ என்றாா். என்டிஎம்சி மேயா் ஜெய் பிரகாஷ் கூறுகையில், ‘மாநகராட்சிகளுக்கு சேர வேண்டிய நிலுவை நிதியை தில்லி அரசு வழங்கினால் மட்டுமே தூய்மைப் பணி உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளை தொடா்ந்து எங்களால் மேற்கொள்ள முடியும். மக்கள் நலனுக்காக போராட்டம் நடத்தினாலும், அலுவல் பணிகளுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக முதல்வா் இல்லம் முன் அலுவல் பணிகளையும் தொடங்கியுள்ளோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com