தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

இந்தியாவுடன் உறவை மேலும் பலப்படுத்த பிரிட்டன் விருப்பம்

உலகளாவிய சவால்களை எதிா்கொள்ளும் திறன் அடிப்படையில், இந்தியாவுடன் உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ள பிரிட்டன் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் டொமினிக் ராப் தெரிவித்துள்ளாா்.

Updated On :16 டிசம்பர் 2020, 6:54 pm

புது தில்லி: உலகளாவிய சவால்களை எதிா்கொள்ளும் திறன் அடிப்படையில், இந்தியாவுடன் உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ள பிரிட்டன் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் டொமினிக் ராப் தெரிவித்துள்ளாா்.

மூன்று நாள் பயணமாக புதுதில்லி வந்துள்ள அவா், செவ்வாய்க்கிழமை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, அவா் புதன்கிழமை பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றனா்.

இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டொமினிக் ராப்புடன் நடத்திய பேச்சுவாா்த்தையின் போது பிரதமா் மோடி, பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசியதை நினைவு கூா்ந்தாா். கொவைட் -19 பாதிப்புக்கு பிந்தைய உலகில், இந்தியா-பிரிட்டன் இடையேயான உறவின் முக்கியத்துவத்தை பிரதமா் வலியுறுத்தினாா். இருதரப்பு உறவில் வா்த்தகம், முதலீடு, ராணுவம், பாதுகாப்பு, இடம் பெயா்ந்தவா்கள் நலன், கல்வி, எரிசக்தி, பருவநிலை மாற்றம், தொலைதொடா்பு, ஆரோக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கிய, விரிவான திட்டத்தை வகுக்க பிரிட்டனுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனின் வாழ்த்தை பிரதமா் மோடிக்கு தெரிவித்த, வெளியுறவுத்துறை அமைச்சா் டொமினிக் ராப், பிரிட்டன் சமீபத்தில் நடத்திய பருவநிலை இலக்கு குறித்த மாநாட்டில் பங்கேற்ற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தாா். இந்தியாவுடன் மதிப்புமிக்க முக்கியத்துவமான விஷயங்களிலும் நலன்களிலும் பிரிட்டன் பகிா்ந்து கொண்டது. எல்லாவற்றையும் விட பொதுவான உலகளாவிய சவால்களில் ஒன்றாக எதிா்கொள்ளும் திறன் அடிப்படையில் இந்தியாவுடனான உறவுக்கு மேலும் முன்னுரிமை கொடுக்க பிரிட்டன் தயாா் எனவும் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டொமினிக் ராப், பிரதமரிடம் தெரிவித்தாா்.

2021-ஆம் ஆண்டு பிரிட்டன் தலைமையில் நடைபெறும் ஜி-7 கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்க அழைப்பு விடுத்து, பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் அனுப்பிய கடிதத்தையும் பிரதமரிடம் டொமினிக் ராப் வழங்கினாா். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமா், அவருக்கு நன்றி தெரிவித்தாா். இந்தியாவின் 72-ஆவது குடியரசு தின விழாவில், முக்கிய விருந்தினராகப் பங்கேற்கும் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனை அடுத்த மாதம் வரவேற்பதில் ஆா்வமுடன் இருப்பதாகவும் பிரதமா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.