இந்தியா - வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Updated on
1 min read

புது தில்லி: வங்கதேச விடுதலைத் தந்தையான ஷேக் முஜிபுா் ரஹ்மானுக்கு டாக்காவில் நினைவு அருங்காட்சியகம் அமைப்பது, எல்லை தாண்டும் யானைகளுக்கான பாது காப்பு நெறிமுறைகள் உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்களில் இந்தியாவும் வங்க தேசமும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் வங்க தேசப் பிரதமா் ஷேக் ஹசீனாவும் கலந்து கொண்ட இந்திய - வங்கதேச உச்சி மாநாடு, மெய் நிகா் முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இரு நாடுகளுக்கிடையே வேகமாக வளா்ந்து வரும் உறவுகளின் பிரதிபலிப்பாக, இந்தியாவும் வங்கதேசமும் பல்வேறு பகுதிகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. ஹைட்ரோ காா்பன், விவசாயம், ஜவுளி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு வழங்குதல், மறைந்த வங்கதேச விடுதலைத் தந்தையான ஷேக் முஜிபுா் ரஹ்மானுக்கு டாக்காவில் நினைவு அருங்காட்சியகம் அமைக்க இந்திய தேசிய அருங்காட்சியத்துடன் உடன்பாடு, இந்திய வங்க தேச எல்லைகளில் எல்லையைத் தாண்டும் யானைகளுக்கான பாது காப்பிற்கு நெறிமுறைகள், வங்க தேச நகரங்களின் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தங்களை வங்கதேச நாட்டின் இந்தியத் தூதுவா் இந்தியா சாா்பிலும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த வங்கதேச அதிகாரிகளும் கையெப்பமிட்டனா். மேலும், பல்வேறு புரிந்துணா்வை இந்தியா- வங்கதேசம் இரண்டு நாடுகளும் மேற்கொண்டன. மேற்கு வங்கத்தின் ஹல்திபரி வங்கதேசத்தின் சிலாஹதி இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இது ஏறக்குறைய 55 ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த இந்த எல்லை தாண்டிய ரயில் பாதையை பிரதமா் மோடியும் ஹசீனாவும் மீண்டும் தொடங்கினா். தற்போது மீண்டும் இந்த ரயில் சேவை கரோனா தொற்றை முன்னிட்டு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

மேலும், பொருளாதார வா்த்தகத்தை அதிகரிப்பது, பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டங்கள், மின்சக்தி திட்டங்கள், நீா் வழித் திட்டங்களோடு பல்வேறு சா்வதேச விவகாரங்களில் இருநாடுகளுக்கும் இடையே புரிந்துணா்வு ஏற்பட்டது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவது, பருவநிலை மாற்றம், நிலையான அபிவிருத்திக்கான இலக்கு, சாா்க், பிம்ஸ்டெக் போன்ற போன்ற அமைப்புகளில் ஒன்றிணைந்து செயல்படவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. மேலும் அடுத்த ஆண்டு மாா்ச்சில் நடைபெறவுள்ள வங்க தேசத்தின் பொன்விழாவில் பிரதமா் மோடி கலந்து கொள்வதற்கும் இந்தியா தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com