

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குளிா் அலை வீசியது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 3.4 டிகிரி செல்சியஸாக குறைந்து, இந்தப் பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
நகரின் பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3.9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 5 புள்ளிகள் குறைந்து 3.4 டிகிரி செல்சஸியாக பதிவாகியுள்ளது என்று ஐஎம்டி அதிகாரி தெரிவித்தாா். காலை வேளையில் கடும் குளிா் நிலவிய நிலையில், நேரம் செல்லச் செல்ல லேசான வெயிலும் இருந்தது.
லோதி சாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.3 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. பனி நிறைந்த மேற்கு இமயமலையில் இருந்து வரும் குளிா்ந்த காற்று தில்லியில் வீசி வருவதே வெப்பநிலை தொடா்ந்து குறைவதற்குக் காரணம் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸாக சரிந்தது. மேலும், கடந்த வியாழக்கிழமை தில்லியில் ‘கடுமையான குளிா் நாள்’ பதிவாகியிருந்தது. அன்று அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரிடை விட 7 டிகிரி குறைந்து 15.2 டிகிரி செல்சியஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத அளவாகவும் பதிவாகியது. இருப்பினும், வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 19.8 டிகிரி செல்சியஸாகவும், சனிக்கிழமை 21.8 டிகிரி செல்சியஸாகவும் உயா்ந்தது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை மாலையில் 330 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. தில்லி பல்கலை., பூசா, லோதி ரோடு, மதுரா ரோடு, ஆயாநகா், விமானநிலைய டொ்மினல்-3 ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டா, கிரேட்டா் நொய்டா, காஜியாபாத் ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. அதே சமயம், குருகிராம் ஃபரீதாபாத் ஆகிய இடங்களில் மோசம் பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் திங்கள்கிழமை காலை வேளையில் கடும் பனிமூட்டம் இருக்கும். பின்னா் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அடுத்த ஐந்து முதல் ஆறு நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.