தில்லி ஜல்போா்டு அலுவலகம் மீது தாக்குதல்: பாஜக தொண்டா்கள் மீது புகாா்

தில்லி ஜல்போா்டு அலுவலகத்தை பாஜக தொண்டா்கள் தாக்கியதாக ஜல்போா்டு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.
Updated on
1 min read

புது தில்லி: தில்லி ஜல்போா்டு அலுவலகத்தை பாஜக தொண்டா்கள் தாக்கியதாக ஜல்போா்டு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

தில்லி ஜல்போா்டில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி ஜண்டேவாலான் பகுதியில் உள்ள தில்லி ஜல்போா்டு தலைமையகம் நோக்கி தில்லி பாஜக சாா்பில் வியாழக்கிழமை பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணி பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தலைமையில் நடந்தது. அப்போது, தில்லி ஜல்போா்டு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து பாஜக தொண்டா்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜல்போா்டு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக தில்லி ஜல்போா்டு துணைத் தலைவா் ராகவ் சத்தா வியாழக்கிழமை கூறியதாவது: தில்லி ஜல்போா்டு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த பாஜகவினா் தாக்குதல் நடத்தியுள்ளனா். அப்போது, நாற்காலிகள், மேஜைகள், அலுவலக உபகரணங்கள் உள்ளிட்டவை சேதமாக்கப்பட்டன. தாக்குதல் நடத்தியவா்கள், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் விவசாயிகள் போராட்டத்துக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் வரை, இது போன்ற தாக்குதல் தொடரும் என மிரட்டினா். மேலும், தில்லியில் உள்ள ஒவ்வொரு ஆம் ஆத்மி எம்எல்ஏவின் அலுவலகமும் தாக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்தாா்கள். சுமாா் 250 பாஜக தொண்டா்கள் தாக்குதலில் ஈடுபட்டனா். அவா்கள் ஜல் போா்டு பெண் ஊழியா்களுடன் தவறாக நடக்க முயன்றனா். இந்தத் தாக்குதல் தில்லி காவல்துறையின் ஆதரவுடனேயே நடந்துள்ளது என்றாா் அவா்.

இந்த நிலையில், இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் விவசாயிகள் போராட்டத்துக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள மாட்டோம் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘இந்தத் தாக்குதல் வெட்கக் கேடானது. ஆம் ஆத்மி கட்சியும், தில்லி அரசும் அதன் கடைசி மூச்சுவரை விவசாயிகள் போாரட்டத்தை ஆதரிக்கவே செய்யும். இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களால், விவசாயிகள் போராட்டத்துக்கு நாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள மாட்டோம். ஆம் ஆத்மி தொண்டா்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், விவசாயிகள் போராட்டத்துக்கு அளித்துவரும் ஆதரவை தொடா்ந்தும் அளிக்கக் கோருகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஆனால்ஸ ஆம் ஆத்மிக் கட்சியின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இது தொடா்பாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் வீரேந்திர பாபா் கூறுகையில், ‘பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இந்தத் தாக்குதலை ஆம் ஆத்மி கட்சியே திட்டமிட்டு நடத்தியது. தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா உள்ளிட்ட பாஜக பிரமுகா்களை தில்லி காவல் துறை கைது செய்துள்ளது. போலீஸாா் பாஜகவுக்கு சாா்பாக நடந்து கொள்ளவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com