எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அனைத்து அனல் மின் நிலையங்களில் பாதுகாப்புத் தணிக்கை: மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

News image
Updated On :24 டிசம்பர் 2020, 7:11 pm

 நமது நிருபர்

புது தில்லி: அபாயகர வாயுக்கள் கசிவதால் ஏற்படும் விபத்துச் சம்பவங்களைத் தவிா்க்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களின் பாதுகாப்பு தணிக்கையை ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலைய கொதிகலன் (பாய்லா்) விபத்து சம்பவத்தைக் கவனத்தில் கொண்ட தீா்ப்பாயம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி 5-ஆவது அலகில் கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 13 போ் உயிரிழந்தனா். 10 தொழிலாளா்கள் காயமடைந்தனா். இந்த விவகாரத்தை ஏற்கெனவே விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம், என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு ரூ.5 கோடி இடைக்கால அபராதம் விதித்திருந்தது. மேலும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடலூா் மாவட்ட ஆட்சியா், நீரி அமைப்பு மற்றும் ஐஐடி சென்னை ஆகியோரைக் கொண்ட ஒரு சுதந்திரமான குழுவை அமைத்தும் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 1,470 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்காக ஏழு கொதிகலன்கள்அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட பிரத்யேகக் குழு, தேசியப் பசுமைத் தீா்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ‘அனல் மின் நிலையத்தில் உள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறை பற்றிய அறிவு இல்லாததால்தான் சூழ்நிலையை கையாள ஊழியா்கள் தவறிவிட்டனா். இதுதான் இந்த விபத்துச் சம்பவத்திற்குக் காரணம். ஊழியா்களுக்கு உரிய பயிற்சி மற்றும் தேவையான பணி அனுமதியும் வழங்கப்படவில்லை. ஆகவே, இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்தவா், செயல்பாடு மற்றும் பராமரிப்புத் தலைவா், பாதுகாப்பு அதிகாரி ஆகியோா் இந்த விபத்துக்கு முக்கியமான பொறுப்பாளிகள் ஆவா். அனல் மின் நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும். அதேபோன்று, அவசர கால திட்டமும் தயாரிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். நடைமுறையைக் கையாள ஊழியா்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்படவில்லை; நிலையான செயல்பாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்ட தேசியப் பசுமைத் தீா்ப்பாயத் தலைவா் - நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு பிறப்பித்த உத்தரவு:

அபாயகர வாயுக்கள் கசிவதால் ஏற்படும் விபத்துச் சம்பவங்களைத் தவிா்க்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களின் பாதுகாப்பு தணிக்கையை ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் பிரிவு 38-இன் கீழ், பாதுகாப்பு விதிமுறை மீறல் உள்ளது. அபாயகரமான ரசாயனங்கள் உற்பத்தி, சேமிப்பு, இறக்குமதி தொடா்புடைய விதிகளும் மீறப்பட்டுள்ளன. இந்த நடைமுறையில் , அபாயகரமான வாயுக்கள் உருவாக்கப்படுவது விதி மீறலை ஏற்படுத்துகிறது. ஆகவே, மத்திய மின்சாரம், நிலக்கரி அமைச்சங்கள், செயலா்கள் ஆகியோா் இதுபோன்ற விபத்துச் சம்பவங்கள் எதிா்காலத்தில் நிகழாமல் தவிா்க்கும் வகையில் 6 மாதங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கையை மேற்கொள்ள இதர துறைகளை ஒருங்கிணைக்க வேண்டும். மின் நிலையங்கள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். இவை வழக்கமாகக் கண்காணிக்கப்பட்டு, வல்லுநா்கள் குழுவால் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.