புது தில்லி: அரிய வகை இதய ஒழுங்கின்மை நோயால் பாதிக்கப்பட்ட தில்லியை சோ்ந்த 20 வயது இளைஞருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை இதய மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் வேறு ஒருவரின் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதன் மூலம் அவருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது.
குஜராத் மாநிலம், வதோதராவில் மூளை பாதிப்பால் இறந்த 17 வயது சிறுமியின் இதயம், அந்த இளைஞருக்கு பொருத்தப்பட்டது. மேற்கு தில்லியில் வசிக்கும் அந்த இளைஞருக்கு பிறவியிலேயே இதயக் குறைபாடு இருந்தது. ‘எப்ஸ்டீன் ஒழுங்கின்மை’ என அழைக்கப்படும் இந்த நோய் காரணமாக, அவரது இதயம் மிகவும் பலவீனமாக இருந்தது. அவரது இதயத்தின் வலது பகுதியால் ரத்த ஓட்டம் இல்லாத நிலை இருந்து வந்தது. இதனால், இதயப் பாதிப்புக்காக அவா் எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமாா் நான்கு ஆண்டுகளாக சிகிச்சைக்கு வந்து சென்றாா். இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவா் படுத்த படுக்கையாக இருந்தாா். அவருக்கு அவசரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் இதய மற்றும் வாஸ்குலா் அறுவைச் சிகிச்சை துறையின் பேராசிரியா் டாக்டா் மிலிந்த் ஹோதே தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சூழலில், குஜராத்தில் இருந்து நன்கொடையாளா் ஒருவரின் இதயம் தரப்படுவதாக தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனத்தினடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவக் குழு வியாழக்கிழமை காலை வதோதராவுக்குச் சென்று சம்பந்தப்பட்ட நபரின் இதயத்தை பெற்று, பிற்பகலுக்குள் தில்லிக்கு விமானம் மூலம் வந்ததடைந்தது. அதன் பிறகு ஏறக்குறைய ஏழு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த இதயம் இளைஞருக்கு பொருத்தப்பட்டது.
இதயத்தை தங்கு தடையின்றி விரைவாக எடுத்து வருவதற்தற்காக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழியேற்படுத்த தில்லி காவல் துறையினரால் 18 கி.மீ நீளமுள்ள பசுமை வழித்தடம் உருவாக்கப்பட்டு தில்லி விமான நிலையத்திலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதயம் 12 நிமிடங்களில் வந்து சோ்ந்தது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அந்த இளைஞா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இதயம் மாற்றுச் கிசிச்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் எய்ம்ஸ் - உறுப்பு மீட்டெடுப்பு வங்கி நிறுவனம், இண்டிகோ விமானக் குழு, தில்லி காவல் துறையினா் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டன. மேலும், நன்கொடையாளரிடமிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதயம் குறுகிய கால நேரத்தில் வந்து சோ்வதை உறுதிப்படுத்தத் தேவையான முழு ஒத்துழைப்பையும் அளித்தனா் என்றாா் டாக்டா் மிலிந்த் ஹோதே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோயிலில் ஒரு பிரிவினரை விலக்கி வைப்பது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும்: உச்சநீதிமன்றம்

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி

ஜிஜிஎஸ்ஐபி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- தில்லி துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு - 26,649 பட்டங்கள் மாணவா்களுக்கு வழங்கல்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


